குணதிலக்கவின் விக்கெட்டை கைப்பற்றி டி20 அரங்கில் சாதனை படைத்த ஜஸ்பிரிட் பும்ரா

166
ICC

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். 

3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. தொடரின் முதல் போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி இலங்கை அணியுடன் தொடர்ச்சியான 6 ஆவது தொடர் வெற்றியை தனதாக்கிக்கொண்டது. 

தனன்ஜயவின் போராட்டம் வீணாக தொடரை வென்றது இந்தியா

இலங்கை அணிக்கு எதிராக பூனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது T20….

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமானதுமான டி20 சர்வதேச போட்டி நேற்று (10) புனேயில் நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். இதில் இலங்கை அணியின் விக்கெட் முதல் ஓவரிலேயே வீழ்த்தப்பட்டது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க 1 ஓட்டத்துடன் ஜஸ்பிரிட் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவ்வாறு தனுஷ்க குணதிலக்கவின் விக்கெட்டை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா டி20 சர்வதேச வரலாற்றில் ஒரு இந்திய வீரராக அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்துள்ளார். 

2016 ஜனவரியில் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் டி20 அறிமுகம் பெற்றுக்கொண்ட ஜஸ்பிரிட் பும்ரா இந்திய அணிக்காக இதுவரையில் 45 போட்டிகளில் 53 விக்கெட்டுக்களை வீழ்த்தி இவ்வாறு சாதனை படைத்துள்ளார். மேலும் டி20 சர்வதேச வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ஜஸ்பிரிட் பும்ரா 23 ஆவது இடத்தில் காணப்படுகின்றார். 

பரபரப்பான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்..

இதேவேளை டி20 சர்வதேச அரங்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 82 போட்டிகளில் 2 ஐந்து விக்கெட்டுகள், 1 நான்கு விக்கெட்டுகள் உள்ளடங்கலாக மொத்தமாக 106 விக்கெட்டுக்களுடன் இலங்கை டி20 அணியின் தலைவரும், நட்சத்திர வேகப்பந்துவீச்சாளருமான லசித் மாலிங்க முதலிடத்தில் காணப்படுகின்றார். 

டி20 சர்வதேச அரங்கில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்கள். (முதல் ஐந்து இடங்கள்)

  1. ஜஸ்பிரிட் பும்ரா (45 போட்டிகள்) – 53 விக்கெட்டுக்கள் 
  2. யுஸ்வேந்திர சஹால் (37 போட்டிகள்) – 52 விக்கெட்டுக்கள்
  3. ரவிச்சந்திரன் அஷ்வின் (46 போட்டிகள்) – 52 விக்கெட்டுக்கள்
  4. புவ்னேஸ்வர் குமார் (43 போட்டிகள்) – 41 விக்கெட்டுக்கள்
  5. குல்தீப் யாதவ் (21 போட்டிகள்) – 39 விக்கெட்டுக்கள்

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<< –