நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்ட வில் சமர்வில்

157

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான குழாத்தில் ட்ரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் வில் சமர்வில் நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். 

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

புதிய சுழல் பந்துவீச்சாளரை அணியில் இணைக்கும் அவுஸ்திரேலியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் …………

இந்தப் போட்டிக்கான குழாத்தில் இரண்டு அணிகளும் சுழல் பந்துவீச்சாளர்களை உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்து வருகின்றன. இதில், அவுஸ்திரேலிய அணியில் மிச்சல் ஸ்வெப்சன் இணைக்கப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணி வலதுகை சுழல் பந்துவீச்சாளர் வில் சமர்வில்லினை அணிக்குள் அழைத்துள்ளது.

வில் சமர்வில் நியூசிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஆசிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்ததுடன், 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன், 12 முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ட்ரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக, எதிர்பாராத மாற்றமாக சமர்வில் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, சிட்னி கிரிக்கெட் ஆடுகளம் இந்த பருவாகலத்தில் நடைபெற்ற செப்பீல்ட் ஷீல்ட் தொடரின் போது, சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான சாதகங்களை கொண்டிருந்தததால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இந்த மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கெரி ஸ்டீட், “அவுஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்களில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் சிட்னி ஆடுகளம் என்பது அனைவருக்கும் தெரியும். வில் சமர்வில் குழாத்தில் உள்ள இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை விடவும் சற்று வித்தியாசமானவர்.

வலதுகை சுழல் மற்றும் அவரது உயரம் என்பன அவரது பந்துவீச்சுக்கு சாதகமாக அமைவதுடன், அணிக்கும் அது சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<