இலங்கைக்கு எதிரான இந்திய T20 குழாம் அறிவிப்பு

163
Photo - Getty Images

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷின் ஒரு அங்கமாக 2 போட்டிகள் கொண்ட டெஸட் தொடரில் விளையாட பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது. 

ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த T20 தொடரில் இலங்கையுடன் விளையாடவுள்ள இந்திய T20 அணியின் வீரர்கள் குழாம் இன்று (23) அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசை வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஒருநாள் துடுப்பாட்ட…

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய T20 அணியில் உபாதையில் இருந்து மீண்ட கிரிக்கெட் வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய வீரர்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். 

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் போது கட்டை விரல் உபாதையினை எதிர்கொண்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் கடைசியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தியாவின் சொந்த மண்ணில் இடம்பெற்ற T20 தொடரில் விளையாடியிருந்தார். இதன் பின்னர் மீண்டும் உபாதைக்கு ஆளாகிய அவர் இலங்கை தொடர் மூலம் ஒரு மாத காலத்திற்குப் பின்னர் இந்திய அணியில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார். 

மறுமுனையில் இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரினை வெற்றி கொள்ள பிரதான காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா முதுகு உபாதை ஒன்றின் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றிருக்கவில்லை. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரே பும்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேற்கொள்ளும் மறுபிரவேசமாக அமைகின்றது.

இவ்வீரர்களின் மீள்வருகை ஒரு புறமிருக்க இந்திய அணிக்காக அண்மையில் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்துவரும் ரோஹித் சர்மாவிற்கு இலங்கை அணிக்கு எதிரான T20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம் பும்ரா இந்திய T20 அணிக்குள் உள்வாங்கப்படுவதால் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான புவ்னேஸ்வர்குமாருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கையுடனான போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக விராட் கோஹ்லி தொடர்ந்தும் நீடிக்க இந்திய அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் முக்கிய வீரராகவும் செயற்படவிருக்கின்றார். விராட் கோஹ்லி தவிர இந்திய கிரிக்கெட் அணிக்கு லோக்கேஷ் ராகுல், மனீஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்களும் துடுப்பாட்ட வீரர்களாக பெறுமதி சேர்க்க காத்திருக்கின்றனர். 

இலங்கைக்கு எதிரான T20 தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஜஸ்பிரிட் பும்ராவுடன் சேர்த்து வேகப்பந்துவீச்சாளர்களான சர்துல் தாகூர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோரினால் வலுப்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணிக்கு ரவிந்திர ஜடேஜாவுடன் இணைந்து சுழல் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் நெருக்கடி தர காத்திருக்கின்றனர். 

இலங்கை – இந்திய அணிகள் மோதும் T20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 5ஆம் திகதி குவஹாட்டி நகரிலும், இரண்டாவது போட்டி ஜனவரி 7ஆம் திகதி இந்தூரிலும் மூன்றாவதும் கடைசியுமான ஜனவரி 10ஆம் திகதி புனே நகரிலும் நடைபெறவிருக்கின்றது. 

நஷீம் ஷாவின் அபார பந்துவீச்சுடன் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி….

அதேநேரம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியுடனான T20 தொடரினை நிறைவு செய்த பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவிருப்பதோடு, இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் வீரர்கள் குழாமும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி T20 குழாம் – ஷிகர் தவான், விராட் கோஹ்லி (அணித்தலைவர்), லோக்கேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பான்டே, சஞ்சு சம்ஸன், றிஷாப் பாண்ட், சிவம் டுபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரிட் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்

இந்திய ஒருநாள் குழாம் (அவுஸ்திரேலியாவுக்கு எதிரானது) – விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், லோக்கேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், றிஷாப் பாண்ட், சிவம் டூபே, ரவிந்தீர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரிட் பும்ரா, சர்துல் தாகூர், மொஹமட் ஷமி  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<