பாகிஸ்தானைச் சேர்ந்த 32 வயதுடைய வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மன்சூர் அம்ஜத்தின் அபார சதத்தால் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகத்துடனான ஒருநாள் போட்டியில் காலி கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற முதல்தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (22) மூன்று போட்டிகள் நடைபெற்றன.
புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய துறைமுக அதிகாரசபை அணி
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற முதல்தர…
இதில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் NCC கழகம் என்பன தத்தமது போட்டிகளில் இலகு வெற்றிகளைப் பதிவு செய்தன.
இதேநேரம், NCC கழகத்தின் பெதும் நிஸ்ஸங்க, அஞ்செலோ பெரேரா மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் மினோத் பானுக ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்து அசத்த, NCC கழகத்தின் சச்சிந்து கொழம்பகே 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்
கட்டுநாயக்கவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய துறைமுக அதிகார சபை அணியினர் 166 ஓட்டங்களுக்கு சுருண்டனர்.
துடுப்பாட்டத்தில் கயான் மதீஷான் 42 ஓட்டங்களையும், அதீஷ நாணயக்கார 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழகம், மன்சூர் அம்ஜத் சதம் கடந்து பெற்றுக் கொண்ட 119 ஓட்டங்களின் உதவியுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
32 வயதான பந்துவீச்சு சகலதுறை வீரரான மன்சூர் அம்ஜத், 2008ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார்.
இதுவரை தலா ஒவ்வொரு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2004ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் ஆவார்.
இந்த நிலையில், இவ்வருடம் முதல் இலங்கையின் உள்ளூர் முதல்தர கழகங்களில் ஒன்றான காலி கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்ற அவர், அந்த அணிக்காக தனது முதல் சதத்தை இன்று பதிவு செய்தார்.
இதேநேரம், இலங்கை துறைமுக அதிகார சபை கழகத்தை வீழ்த்தியதன் மூலம் இம்முறை போட்டித் தொடரில் காலி கிரிக்கெட் கழகம் முதல் வெற்றியை பதிவு செய்தது.
போட்டியின் சுருக்கம்
துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 166 (38.3) கயான் மதீஷான் 42, அதீஷ நாணயக்கார 36, ஆபித் ஹஸன் 3/12, சாரங்க ராஜகுரு 2/45
காலி கிரிக்கெட் கழகம் – 167/3 (36.1) மன்சூர் அம்ஜத் 119*, ஜெகொப் சச்சின் 30, ரஜீவ வீரசிங்க 2/25, ஹஷான் விமர்சன 2/31
முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்
பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி சுங்க அணியினர் 78 ஓட்டங்களுக்கு சுருண்டனர்.
துடுப்பாட்டத்தில் தரிந்து வீரசிங்க 17 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் 20 வயதுடைய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான அசேல் சிகேரா 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் இலங்கை சம்பியன்
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்திருக்கும் முத்தரப்பு இளையோர்…
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதன்படி, 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் இம்முறை போட்டிகளில் 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்ய, கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் தொடர்ச்சியாக 5ஆவது தோல்வியைத் தழுவியது.
போட்டியின் சுருக்கம்
கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 78 (26.2) அசேல் சிகேரா 4/10
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 79/3 (25)
முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்;கெட்டுக்களால் வெற்றி
கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் NCC கழகம்
கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மினோத் பானுகவின் அரைச் சதத்தின் (65) உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது.
பந்துவீச்சில் NCC கழகத்தின் 21 வயதுடைய லெக் ஸ்பின்னரான சச்சிந்து கொழம்பகே 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய NCC கழகம் பெதும் நிஸ்ஸங்க (69) மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் 6 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 196 (48.2) மினோத் பானுக 65, லஹிரு மதுஷங்க 43, அஷான் ப்ரியன்ஜன் 23, மாலிந்த புஷ்பகுமார 21, சச்சிந்து கொலம்பங்ககே 5/46, சதுரங்க டி சில்வா 2/28
NCC கழகம் – 199/6 (46.5) அஞ்செலோ பெரேரா 66, பெதும் நிஸ்ஸங்க 69, லஹிரு கமகே 2/19, சந்துன் மெண்டிஸ் 2/39
முடிவு – NCC கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க