இலங்கை – பாகி. டெஸ்ட் தொடரில் சிறப்பு விருந்தினராக வர்ணபுர, ஜாவேட்

249

பாகிஸ்தான் மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையில் இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாவேட் மியான்டாட் மற்றும் பந்துல வர்ணபுர ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அழைக்கவுள்ளது. 

இலங்கை அணியில் இருந்து விலகும் சுரங்க லக்மால்

டெங்கு நோயின் காரணமாக இலங்கை ……..

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாகிஸ்தானில் கடந்த 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை. தற்போது அந்நாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சாத்தியம் உருவாகி வரும் நிலையில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையில் இந்த புதன்கிழமை (11) ஆரம்பமாகும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே பாகிஸ்தான் மண்ணில் கடைசி 10 வருடங்களில்  நடைபெறும் முதல் டெஸ்ட் தொடராக அமையவிருக்கின்றது. 

இவ்வாறான நிலையில் இலங்கை – பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களிடையே 1982ஆம் ஆண்டு முதல் முறையாக மோதிக்கொண்ட டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியின் தலைவராக இருந்த பந்துல வர்ணபுர மற்றும் பாகிஸ்தான் அணியின் தலைவராக இருந்த ஜாவேட் மியான்டாட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக புதன்கிழமை (11) ஆரம்பமாகவுள்ள வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக வரும் இந்த இரண்டு முன்னாள் வீரர்களும் நாளை (10) பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு நாடுகளினதும் அணித்தலைவர்களுடன் இணைந்து டெஸ்ட் தொடரின் வெற்றிக் கிண்ணப் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாளின் போது இடம்பெறவுள்ள சில சிறப்பு நிகழ்வுகளிலும் பங்குபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் பங்கெடுப்பது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரான எஹ்சான் மணி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“கிரிக்கெட் விளையாட்டு இனம் கண்ட சிறந்த வீரர்கள் (இருவரும்) அவர்களது வேலைப்பளுவான நாட்களுக்கு மத்தியில் எங்களது அழைப்பினை ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கும் உலகம் பூராகவும் உள்ள அதனது இரசிகர்களுக்கும் மிகவும் பெறுமதியான விடயமாகும்.” 

“டிசம்பர் 11ஆம் திகதி பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். எனவே, அதனை சரியான முறையில் கொண்டாட எங்களது பக்கத்தில் பந்துல வர்ணபுரவும், ஜாவேட் மியான்டாட்டும் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் கிரிக்கெட்டின் அடையாளங்கள். அவர்கள் இந்த விளையாட்டிற்கு வழங்கிய சேவைகளும் எல்லையற்றவை.” 

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையே நடைபெறும் டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில், முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 11ஆம் திகதி ராவல்பின்டி நகரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி கராச்சி நகரிலும் இடம்பெறவிருக்கின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<