இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த மேற்கிந்திய தீவுகள்

167
ICC

இந்திய அணியுடனான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்குமிடையிலான இரண்டாவது டி20 சர்வதேச போட்டி இன்று (08) திருவானந்தபுரம் கிறீன்பீல்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

கோஹ்லியின் அதிரடி துடுப்பாட்டத்தால் வெற்றி இலக்கை இலகுவாக கடந்த இந்தியா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான…..

முதல் போட்டியிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு மாற்றத்தை மேற்கொண்ட நிலையில், இந்திய அணி மாற்றம் எதுவுமின்றி களமிறங்கியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது.

கடந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்காளியாக திகழ்ந்த கே.எல் ராகுல் இன்றைய போட்டியில் வெறும் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹிட் சர்மா இன்றைய போட்டியிலும் ஏமாற்றமளித்தார். அவர் 15 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார். 

ஆனால் மாற்றமாக இன்றைய போட்டியில் விராட் கோஹ்லிக்கு பதிலாக மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சிவம் துபே அதிரடியாக துடுப்பெடுத்தாடி கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். 4 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் மொத்தமாக 54 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த அணித்தலைவர் விராட் கோஹ்லி இன்றைய போட்டியில் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

ஐந்தாவது விக்கெட்டுக்காக ரிஷப் பண்டுடன் சிரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். ஆனால் ஐயரால் ஆடுகளத்தில் நிலைத்து நிற்க முடியாமல் போனது. 10 ஓட்டங்களுடன் அவரும் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இலங்கை அணியில் இருந்து விலகும் சுரங்க லக்மால்

டெங்கு நோயின் காரணமாக இலங்கை….

ஜடேஜாவை தொடர்ந்து வந்த வொஷிங்டன் சுந்தர் முதல் பந்திலேயே ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்களை இந்திய அணி பெற்றுக்கொண்டது. ஆடுகளத்தில் ரிஷப் பண்ட் 33 ஓட்டங்களுடனும், தீபக் சஹார் 1 ஓட்டத்துடனும் காணப்பட்டனர். 

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஹெய்டன் வோல்ஷ் மற்றும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், கெரி பியர், ஷெல்டன் கொட்ரல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

171 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைத்தது. முதல் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய லென்டில் சிம்மன்ஸ் அதிரடியாக ஆட, மறுமுனையில் எவின் லுவிஸ் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் விக்கெட் பத்தாவது ஓவரிலேயே வீழ்த்தப்பட்டது. எவின் லுவிஸ் 40 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

அதனை தொடர்ந்து மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷிம்ரொன் ஹெட்மெயர் அதிரடியாக 3 சிக்ஸர்களை அடித்து 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மேற்கிந்திய தீவுகள் அணியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாற்றத்துடன் 4 போட்டிகள் தடைக்கு பின்னர் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய நிக்கொலஸ் பூரண் 2 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களை குவித்தார். 

தென்னாபிரிக்க தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு….

மறுமுனையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதிவரை நிலைத்து போராடிய லென்டில் சிம்மன்ஸ் 4 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றியை 8 விக்கெட்டுக்களினால் உறுதி செய்தார். 

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஏனைய பந்துவீச்சாளர்கள் எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக லென்டில் சிம்மன்ஸ் தெரிவானார். தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமானதுமான டி20 சர்வதேச போட்டி எதிர்வரும் புதன்கிழமை (11) மும்பையில் நடைபெறவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்.

இந்தியா – 170/7 (20) – சிவம் துபே 54(30), ரிஷப் பண்ட் 33(22), ஹெய்டன் வோல்ஷ் 2/28, கெஸ்ரிக் வில்லியம்ஸ் 2/30

மேற்கிந்திய தீவுகள் – 173/2 (18.3) – லென்டில் சிம்மன்ஸ் 67(45), எவின் லுவிஸ் 40(35), ரவீந்திர ஜடேஜா 1/22, வொஷிங்டன் சுந்தர் 1/26

முடிவு – மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுக்களினால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<