ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் இலகு வெற்றி

161
©AFP

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது. 

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் தமது சுற்றுப் பயணத்தில் ஒருநாள், T20 தொடர்கள் நிறைவடைந்த பின் தற்போது ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றன.  

நியூசிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து போல்ட், க்ரெண்ஹோம் நீக்கம்

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள ……

அந்தவகையில், ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இந்தியாவின் லக்னோ நகரில் கடந்த புதன்கிழமை (29) ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஆப்கான் வீரர்களுக்கு வழங்கினார். 

அதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளின் ரஹீம் கோர்ன்வால் உடைய சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜாவேத் அஹ்மடி 39 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்கள் பதிவு செய்ய, ரஹீம் கோர்ன்வால் 75 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்தார். அதேவேளை ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 277 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சாமர் புரூக்ஸ் தனது கன்னி சதத்துடன் 15 பௌண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 111 ஓட்டங்களைப் பெற்றார். அதேநேரம், ஜொன் கெம்பல் 55 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் இடதுகை சுழல்வீரரான அமீர் ஹம்சா 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷீட் கான் 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

அத்துடன், இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு …….

தொடர்ந்து 90 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி இம்முறை 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில், ஜாவேத் அஹ்மடி போராட்டமான ஆட்டத்தை வெளிக்காட்டி 62 ஓட்டங்கள் பெற்றார். 

அதேநேரம், ஆப்கானை மிரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் ரஹீம் கோர்ன்வால், ரொஸ்டன் சேஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆப்கான் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 30 ஓட்டங்கள் மாத்திரமே நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 33 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றியினை ஜோன் கெம்பல் 19 ஓட்டங்களுடன் உறுதி செய்திருந்தார். 

போட்டியின் ஆட்டநாயகனாக இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ரஹீம் கோர்ன்வால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 187 (68.3) ஜாவேத் அஹ்மடி 39, ரஹீம் கோர்ன்வால் 75/7, ஜேசன் ஹோல்டர் 22/2 

மேற்கிந்திய தீவுகள் (முதல் இன்னிங்ஸ்) – 277 (83.3) சாமர் புரூக்ஸ் 111, ஜோன் கெம்பல் 55, ஷேன் டோவ்ரிச் 42, அமீர் ஹம்ஸா 74/5, ரஷீட் கான் 114/3

ஆப்கானிஸ்தான் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 120 (43.1) ஜாவேத் அஹ்மடி 62, ரொஸ்டன் சேஸ் 10/3, ஜேசன் ஹோல்டர் 20/3, ரஹீம் கோர்ன்வால் 46/3

மேற்கிந்திய தீவுகள் – 33/1 (6.2) ஜோன் கெம்பல் 19*, அமீர் ஹம்ஸா 5/1(2.2)

முடிவு – மேற்கிந்திய தீவுகள் 9 விக்கெட்டுக்களால் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<