தட்டெறிதலில் பருத்தித்துறை ஹார்ட்லி மாணவன் சானுஜனுக்கு முதல் தங்கம்

316

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவனான விக்னேஸ்வரன் சானுஜன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கொழும்பு சுகததாச விளைளயாட்டரங்கில் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி நாளான இன்று (03) நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் ஹார்ட்லி கல்லூரியின் வி. சானுஜன் பெற்றுக்கொண்ட தங்கப் பதக்கத்துடன், ஹார்ட்லி கல்லூரி இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தினை வென்று அசத்தியது. 

யாழ். ஹார்ட்லி மாணவன் மிதுன்ராஜ் குண்டு எறிதலில் புதிய சாதனை

35ஆவது அகில இலங்கை பாடசாலைகள்…..

இதேநேரம், இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இதில் யாழ் சாவகச்சேரியின் ஏ. புவிதரன் மற்றும் என். டக்சிதா, அளவெட்டி அருணோதயாவின் எம். திசாந்த், தெல்லிப்பழை மகாஜனாவின் சி. தீபிகா ஆகியோர் கோலூன்றிப் பாய்தலிலும், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் எஸ். மிதுன்ராஜ் குண்டடெறிதலிலும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தனர். 

  • சானுஜனுக்கு முதல் தங்கம்

கடந்த வருடம் முதல் தடவையாக அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் களமிறங்கிய சானுஜன் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் மற்றும் தட்டெறிதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றியிருந்தார். எனினும், அவரால் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரான வடிவேஸ்வரன் ஹரிகரனின் பயிற்றுவிப்பின் கீழ் இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் களமிறங்கிய சானுஜன், தட்டெறிதல் போட்டியில் முதல் தடவையாக தங்கப் பதக்கத்தை வென்றார். போட்டியில் அவர் 38.46 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்தார். 

தனது ஆரம்பக் கல்வியை யாழ். தும்பளை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயத்தில் மேற்கொண்ட சானுஜன், க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த பிறகு பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் உயர்தரம் கற்பதற்கு உள் நுழைந்தார். 

இதேநேரம், ஆரம்பத்தில் குண்டு எறிதல் போட்டியில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தி வந்த சானுஜன், ஹார்ட்லி கல்லூரிக்கு வந்த பிறகு தட்டெறிதல் போட்டியிலும் கவனம் செலுத்துவதற்கு தீர்மானித்தார்.

இதன் பிரதிபலனாக கடந்த வருடம் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு குண்டு எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்தார். எனினும், அவரால் தேசிய மட்டப் போட்டிகளில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

இந்த நிலையில், இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சானுஜன், தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றதுடன், முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனையும் படைத்தார்.

இது இவ்வாறிருக்க, 2018 ஆம் ஆண்டு முதல் குத்துச்சண்டை விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்ற சானுஜன், இதுவரை தேசிய மட்டத்தில் 2 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். 

இதில் 75 10 81 எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய கனிஷ்ட குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் அடுத்தடுத்து பெற்றுக் கொண்டார்.

இதேநேரம், இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட குத்துச்சண்டைப் போட்டி மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்திய சானுஜன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்படுகின்ற இவ்வருடத்துக்கான குத்துச்சண்டைப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார். 

எனவே, மெய்வல்லுனர் விளையாட்டைப் போல குத்துச்சண்டை விளையாட்டிலும் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் வீரரான வி. சானுஜனுக்கு இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

இதேவேளை, குறித்த போட்டியில் சிலாபம் புனித மரியாள் ஆண்கள் வித்தியாலயத்தைச் சேர்ந்த நிபுன் திருக்ஷான் பெரேரா 38.05 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், கஹவத்த மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.டி துலஞ்சன 37.96 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

  • மிதுன்ராஜுக்கு 2 பதக்கங்கள்

மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் 15.95 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார்.

அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட அவர், 45.88 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்று அசத்தினார்.  

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<