ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் நடப்புச் சம்பியன் இலங்கை அணி 3 ஆவது பிளே ஓப் (Play off) போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 9 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
டுபாயில் நடைபெற்ற இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ICBT கிரிக்கெட் அணி விளையாடியது. இதில் மொத்தம் ஏழு நாடுகள் பங்கேற்ற குழுநிலைப் போட்டிகளில் B குழுவில் முதலிடம் பெற்ற இலங்கை பிளே ஓப் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
இலங்கை இன்னும் சரியாக தயாராக வேண்டும் – ருமேஷ் ரத்நாயக்க
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான………….
எனினும் நேற்று (1) நடைபெற்ற முதலாவது பிளே ஓப் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடம் 41 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. எனினும் இன்று நடைபெற்ற மூன்றாவது பிளே ஓப் போட்டியில் வெற்றியீட்டினாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையிலேயே ICBT அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
டுபாய், ஐ.சி.சி. அகடமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை குவித்தது. மத்திய வரிசையில் வந்த விக்கெட் காப்பாளர் அப்துர் ரஹ்மான் அதிகபட்சமாக 23 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதன் போது இலங்கை அணி சார்பில் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மற்றும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளர் ஜனித் லியனகே இருவரும் தலா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
இந்நிலையில் சவாலான இலக்கொன்றை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முக்கிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தடுமாற்றத்தை சந்தித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விஷ்வ சத்துரங்க 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜனித் லியனகே முகம்கொடுத்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
மறுமுனையில் நன்றாக துடுப்பாடிய இலங்கை A அணி வீரரான விக்கெட் காப்பாளர் லஹிரு மிலந்த 15 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் 22 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
மத்திய வரிசையில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் வீரர் ஒருமுனையில் அபாரமாகவும் வேகமாகவும் ஓட்டங்களை பெற்று வெற்றிக்காக போராடியபோதும் மறுமுனையில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
குறிப்பாக கடைசி ஓவருக்கு இலங்கை அணி 19 ஓட்டங்களை பெற வேண்டிய நெருக்கடிக்கு முகம்கொடுத்தபோது இலங்கை அணியால் அந்த ஓவரில் 9 ஓட்டங்களையே பெற முடிந்தது. சிறிவர்தன கடைசி பந்துக்கு சிக்ஸர் விளாசினாலும் அது வெற்றிக்கு போதுமாக இருக்கவில்லை.
இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. எனினும் தனித்து போராடிய அயன சிறிவர்தன 47 பந்துகளில் 7 பௌண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 88 ஓட்டங்களை பெற்றார்.
இதன் போது பாகிஸ்தான் அணி சார்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மஹ்மூத் அலி போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை இம்முறை பல்கலைக்கழக உலகக் கிண்ண தொடரில் 3ஆம் இடத்தை பிடித்தது.
கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் – 187/9 (20) – அப்துர் ரஹ்மான் 34, ஷஹ்சார் ஹசன் 26, மஹ்மூத் அலி 23, ஜனித் லியனகே 3/25, மஹீஷ் தீக்ஷன 3/39
இலங்கை – 178/8 (20) – அயன சிறிவர்தன 88*, லஹிரு மிலந்த 22, மஹ்மூத் அலி 3/26, முஹமது சைபுல்லா 2/31
முடிவு – பாகிஸ்தான் 9 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<