அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான T20 தொடரில் இலங்கை அணி 3-0 என வைட்-வொஷ் செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளரான ருமேஷ் ரத்நாயக்க கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
அதன்படி, இலங்கை அணியின் தொடர் தோல்விக்கான காரணங்களை விபரித்திருந்த ருமேஷ் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஆஸி.யில் முதல் T20I வைட்வொஷ்ஷினை சந்தித்த இலங்கை
இலங்கை அணிக்கு எதிரான………………
”நான் நாங்கள் ஒரு நல்ல சவாலை கொடுத்தோம் என நம்புகின்றேன். நாங்கள் இதிலிருந்து பல பாடங்களை கற்றிருக்கின்றோம். (இந்த T20 தொடருக்கான) எங்களது தயார்படுத்தல்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கவில்லை. ஆனால், இதனை எங்களது தோல்விக்கான காரணமாக நான் குறிப்பிடவில்லை. இது எங்களுக்கு அவுஸ்திரேலிய மண்ணுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் ஒன்றுக்கு வரும் போது பாடமாக இருக்கும் விடயமாக உள்ளது. எங்களுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், இங்கே (அவுஸ்திரேலியாவில்) இருக்கும் ஆடுகளங்கள் போல் தயாரித்து, இலங்கையில் விளையாட வேண்டும்.”
அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக இன்னும் சரியாக தயராக வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கும் ருமேஷ் ரத்நாயக்க அவ்வாறு செய்யாவிடின் இந்த தொடர் தோல்வி போன்ற நிலைமையே T20 உலகக் கிண்ணத்திலும் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
”இது தயாராகுவதிலும், இசைவாக்கப்படுவதிலுமே இருக்கின்றது. நாங்கள் துணைக்கண்ட நாடுகளிலேயே அதிகம் விளையாடுகின்றோம். குறைந்தது (T20 உலகக் கிண்ணம் நடைபெற) ஆறு வாரங்கள் முன்னராவது நாம் இலங்கையில் வேகப்பந்துவீச்சு ஆடுகளங்களில் சிறு தொடர்களில் விளையாடி தயாராக வேண்டும். நாங்கள் வேகப்பந்துவீச்சு ஆடுகளங்களில் சிறப்பாக செயற்படாவிடின் இதே நிலைமையே, (உலகக் கிண்ணத்தின் போதும்) ஏற்படும்.”
அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய மண்ணில் சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாகவும் ருமேஷ் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
”ஆனால், இங்கே (நாம்) முன்னேறி இருப்பதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. அவுஸ்திரேலியா போன்ற ஒரு இடத்தில் நேரம் செலவழிப்பது என்பது எதிர்வரும் காலங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டி இருக்கும் என்பதை உங்களுக்கு தெளிவாக உணர்த்தும்.”
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 தொடரின் போது, உலகின் முதல் நிலை T20 அணியான பாகிஸ்தானை வைட்-வொஷ் செய்ய காரணமாக இருந்த இளம் இலங்கை வீரர்கள் நீக்கப்பட்டு சிரேஷ்ட வீரர்கள் இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர். எனினும், அவ்வாறு உள்வாங்கப்பட்ட வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 தொடரில் பிரகாசிக்காமல் போனது இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் மீது விமர்சனங்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. அது தொடர்பில் ருமேஷ் ரத்நாயக்க இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
”உலகக் கிண்ணம் நெருங்குவதால் அதனை கருத்திற்கொண்டு (எங்களிடம் இருப்பவர்களுக்கு) போதுமான அளவு வாய்ப்புக்களை வழங்குவதே அவரின் (இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளர் அசந்த டி மெல்) எண்ணமாகவும், எண்ணத்திற்கு காரணமாகவும் இருக்கின்றது.”
T10 லீக் கிரிக்கெட் தொடரில் மற்றுமொரு இலங்கை வீரர்
இந்த மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு………….
T20 உலகக் கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில், இலங்கை கிரிக்கெட் அணி கீலோங் நகரில் இடம்பெறவுள்ள முதல் சுற்றுப் போட்டிகளில் விளையாடியே கிண்ணத்திற்கான மோதல்களில் பங்கெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<