இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் புறக்கணிப்பா?

163

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), தேசிய கிரிக்கெட் அணிக்காக ஆடும் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கும் நிலையில் திறமைகளை வெளிக்காட்டிய சில வீரர்கள் புதிய வீரர்கள் ஒப்பந்தத்தில் உள்வாங்கப்படாமல் போயிருக்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.  

“ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஓட்டங்களை குவிப்பேன்” – மெண்டிஸ் நம்பிக்கை

T20I போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட …………………..

இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான 21 வயது நிரம்பிய கமிந்து மெண்டிஸ், இலங்கை A கிரிக்கெட் அணிக்காகவும் இலங்கையின் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்காகவும் அண்மைக்காலமாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். எனினும், கமிந்து மெண்டிஸ் இலங்கை கிரிக்கெட் சபை புதிய ஒப்பந்தத்திற்காக தெரிவு செய்த 34 வீரர்களுக்குள் குறைந்த ஒப்பந்த தொகை கொண்ட ஒருவராக கூட தெரிவு செய்யப்படவில்லை. 

கடந்த 12 மாதங்களில் கமிந்து மெண்டிஸ் சில மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஆடிய நிலையிலையே புதிய வீரர்கள் ஒப்பந்தில் உள்வாங்கப்படாமல் போயிருக்கின்றார்.  

இலங்கை A கிரிக்கெட் அணிக்காகவும் இலங்கையின் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்காகவும் பிரகாசித்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஷங்கவிற்கும் புதிய வீரர்கள் ஒப்பந்தத்தில் சந்தர்ப்பம் வழங்கப்படாமல் போயிருக்கின்றது. இன்னும், இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஜொலிக்க தவறிய உபுல் தரங்க, அசேல குணரத்ன, லஹிரு கமகே, கௌசால் சில்வா, செஹான் மதுசங்க, மலிந்த புஷ்பகுமார மற்றும் டில்சான் முனவீர போன்ற வீரர்களும் புதிய ஒப்பந்தத்தில் தவறவிடப்பட்டுள்ளனர். 

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் போது தனக்குள் திறமைகள் ஒளிந்திருப்பதை காட்டிய அறிமுக துடுப்பாட்ட வீரரான மினோத் பானுக்கவும் புதிய வீரர்கள் ஒப்பந்தத்தில் உள்ளவாங்கப்படாத மற்றுமொரு வீரராக அமைகின்றார்.   

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய வீரர்கள் ஒப்பந்தத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக A பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் அஞ்செலோ மெதிவ்ஸ் அமைகின்றார். மெதிவ்ஸின் ஒப்பந்த தொகை 130,000 அமெரிக்க டொலர்களாக (இலங்கை நாணயப்படி 23.5 மில்லியன் ரூபாவாக) இருக்கின்றது. மெதிவ்ஸ் மாத்திரமே இந்த விலைப் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

A பிரிவில் இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணித்தலைவராக செயற்படும் திமுத் கருணாரத்ன மற்றும் வேகப் பந்துவீச்சாளர்  சுரங்க லக்மால் ஆகியோர் 100,000 டொலர்களுக்கு (இலங்கை நாணயப்படி 18 மில்லியன் ரூபா) இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

யார் ஆட்சிக்கு வந்தாலும் விளையாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் – ஹரீன் பெர்னாண்டோ

அதேநேரம், இந்த ஆண்டு ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் மாத்திரம் ஆடி அதன் பின்னர் சர்வதேச போட்டிகள் குறைவாக ஆடிய  முன்வரிசை துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் 80,000 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை நாணயப்படி 14.5 மில்லியன் ரூபா) தனது ஒப்பந்தத்தை தொடர்ந்தும் தக்கவைத்திருக்கின்றார். அதேநேரம், T20 போட்டிகளில் இலங்கை அணியினை வழிநடாத்தும் லசித் மாலிங்க 70,000 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை நாணயப்படி 12.67 மில்லியன்) இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் சபை B பிரிவில் 70,000 அமெரிக்க டொலர்களுக்கு குசல் ஜனித் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கின்றது. அதேநேரம், இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் ஆடும் தில்ருவான் பெரேரா, விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்லவுடன் இணைந்து 50,000 அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார். அதேவேளை, சகலதுறை வீரரான தனன்ஞய டி சில்வா 52,500 அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார். 

பந்துவீச்சு சகலதுறை வீரரான திசர பெரேரா, நுவன் பிரதீப் ஆகியோர் பிரவு C வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதோடு இவர்களின் ஒப்பந்த தொகையாக 50,000 அமெரிக்க டொலர்கள் தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது. இதேவேளை, மற்றுமொரு பிரிவு C வீரரான லஹிரு திரிமான்ன 35,000 அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.

பிரிவு D இல் இலங்கை கிரிக்கெட் அணிக்காக அகில தனன்ஞய (அமெரிக்க டொலர்கள் 50,000), துஷ்மந்த சமீர (அமெரிக்க டொலர்கள் 30,000), தனுஷ்க குணத்திலக்க (அமெரிக்க டொலர்கள் 35,000), ரொஷேன் சில்வா (அமெரிக்க டொலர்கள் 25,000), விஷ்வ பெர்னாந்து (அமெரிக்க டொலர்கள் 25,000), லக்ஷன் சந்தகன் (அமெரிக்க டொலர்கள் 40,000), இசுரு உதான (அமெரிக்க டொலர்கள் 40,000), அவிஷ்க பெர்னாந்து (அமெரிக்க டொலர்கள் 30,000), தசுன் ஷானக்க (அமெரிக்க டொலர்கள் 30,000) மற்றும் லஹிரு குமார (35,000 அமெரிக்க டொலர்கள்) ஆகிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். 

இன்னும் சதீர சமரவிக்ரம, அமில அபொன்சோ, ஒசத பெர்ணாந்து, செஹான் ஜயசூரிய, அஞ்செலோ பெரேரா, கசுன் ராஜித மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோரை இலங்கை கிரிக்கெட் சபை தமது புதிய ஒப்பந்தத்தில் 20,000 அமெரிக்க டொலர்களுக்கு இணைத்திருக்கின்றது. இவர்கள் தவிர ஜெப்ரி வன்டர்செய், அசித்த பெர்னாந்து மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் 15,000 அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட, பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் போது இலங்கை அணிக்காக சுழலில் அசத்திய வனிந்து ஹஸரங்க ஒப்பந்த  தொகையாக 25,000 அமெரிக்க டொலர்களை பெற்றிருக்கின்றார். 

இலங்கை கிரிக்கெட் சபை தமது வீரர்கள் 34 பேரினதும் ஒப்பந்தத்திற்காக கிட்டத்தட்ட 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்தமாக ஒதுக்கியிருக்கின்றது. அதேவேளை, புதிய வீரர்களின் ஒப்பந்தக்காலமாக 14 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

செய்தி மூலம் – The Sunday Times 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<