ரியல் மெட்ரிட் அதிர்ச்சி தோல்வி; ப்ரீமியர் லீக்கில் முன்னேறும் மன்செஸ்டர் சிட்டி

142

சர்வதேச போட்டிகளை அடுத்து இரண்டு வாரங்களின் பின் இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, பிரான்ஸ் லீக் 1 மற்றும் இத்தாலி சீரி A போட்டிகள் சனிக்கிழமை (20) ஆரம்பமாயின. இதன் முக்கிய சில போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் மல்லோர்கா

லா லிகாவில் புது வருகை அணியான மல்லோர்காவிடம் ரியல் மெட்ரிட் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி ஒன்றை சந்தித்தது. இம்முறை லீக் தொடரில் ரியல் மெட்ரிட்டின் முதல் தோல்வியாகவும் இது இருந்தது. 

700 கோல்களை தொட்டார் ரொனால்டோ

உக்ரைனுக்கு எதிரான 2020 யூரோ தகுதிகாண் போட்டியில் கோல் ஒன்றை பெற்ற போர்த்துக்கல்…

எல்பிரோஸ்டார் அரங்கில் நடைபெற்ற போட்டியில் 7 ஆவது நிமிடத்தில் லாகோ ஜூனியர் கோல் புகுத்தி ரியல் மெட்ரிட்டுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

கரிம் பென்சமாவுக்கு போட்டியை சமன் செய்ய சந்தர்ப்பம் ஒன்று கிட்டியபோதும் அந்தப் பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. 74 ஆவது நிமிடத்தில் அல்வாரோ ஒட்ரியோசோலா (Álvaro Odriozola) சிவப்பு அட்டை பெற்றது ரியல் மெட்ரிட்டுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.  

சினடின் சிடேனின் அணி தற்போது லா லிகா புள்ளிப்பட்டியலில் பார்சிலோனாவை விட ஒரு புள்ளி பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.  

 

மன்செஸ்டர் சிட்டி எதிர் கிறிஸ்டல் பெளஸ்

செல்ஹார்ஸ் பார்க்கில் நடைபெற்ற கிறிஸ்டல் பெளஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலகு வெற்றி பெற்ற நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை நெருங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.  

போட்டியை அதிரடியாக ஆரம்பித்த மன்செஸ்டர் சிட்டி 39 ஆவது நிமிடத்தில் பெர்னாடோ சில்வா பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி கேப்ரியல் ஜேசுஸ் மூலம் முதல் கோல் புகுத்தியது.  

இரண்டு நிமிடங்களின் பின்னர் டேவிட் சில்வா இரண்டாவது கோலையும் புகுத்த மன்செஸ்டர் சிட்டியின் வெற்றி உறுதியானது. 

செல்சி எதிர் நியூகாசில் யுனைடட்

மார்கஸ் அலொன்சோ இரண்டாவது பாதியில் பெற்ற கோல் மூலம் செல்சி அணி நியூகாசிலை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேற்றம் கண்டது. செல்சி அனைத்து போட்டித் தொடர்களிலும் தொடர்ச்சியாக பெறும் ஐந்தாவது வெற்றியாக இது அமைந்தது.  

ஸ்டான்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பம் செல்சிக்கு ஏமாற்றமாகவே இருந்தது. டெம்மி அப்ரஹாம் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறியதோடு கிறிஸ்டியன் புலிசிக் கோலை நோக்கி உதைத்த பந்தை மார்டின் டுப்ரோவ்கோ அபாரமாக தடுத்தார்.   

எனினும் இரண்டாவது பாதியில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்ததற்கு செல்சி வீரர்களுக்கு 73 ஆவது நிமிடத்தில் பலன் கிட்டியது. ஸ்பெயின் வீரர் மார்கஸ் அலொன்சோ உதைத்த பந்து கோலாக மாறியது.  

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் வட்போர்ட்

இந்தப் பருவத்தில் தனது முதல் வெற்றியை பெறும் எதிர்பார்ப்புடன் இருந்த வட்போர்ட் அணியின் எதிர்பார்ப்பை சிதறடித்து டெலி அலி கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் போட்டியை சமன் செய்தது. 

ஹொட்ஸ்புர் அணி, பெயர்ன் முனிச் மற்றும் பிரைட்டன் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்த நிலையிலேயே வட்போர்டை எதிர்கொண்டது. எனினும் 6 ஆவது நிமிடத்திலேயே வட்போர்டின் டவுகூரோ (Abdoulaye Doucouré) பெற்ற கோல் மூலம் ஹொட்ஸ்புர் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை நெருங்கியது. 

கடும் இழுபறிக்குப் பின் 86 ஆவது நிமிடத்தில் டெலி அலி பந்தை தோள்பட்டையால் கட்டுப்படுத்தி வலைக்குள் செலுத்தினார். அந்த கோல் பற்றி சர்ச்சை கிளம்பியதை அடுத்து தொலைக்காட்சி நடுவர் உதவி மூலம் அது உறுதி செய்யப்பட்டது. 

இந்தப் போட்டி சமநிலை அடைந்த நிலையில் வட்போர்ட் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் காணப்படுகிறது. 

ஜுவன்டஸ் எதிர் பொலொக்னா

டியுரினில் நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கோல் மூலம் பொலொக்னாவை வீழ்த்திய ஜுவன்டஸ், சீரி A தொடரில் முன்னிலையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. 

போட்டியின் 19 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ நெருங்கிய தூரத்தில் இருந்து கோல் பெற்று ஜுவன்டஸை முன்னிலை பெறச் செய்தபோதும் டனிலோ பதில் கோல் திருப்பினார்.  

பார்சிலோனா, ஜுவன்டஸ் அதிரடி வெற்றி : அதிர்ச்சி தந்த ப்ரீமியர் லீக்

ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சிரீ A மற்றும் இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் தொடர்களின் முக்கிய போட்டிகள்…

இந்நிலையில் பொலொக்னா பின்களத்தில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து 54 ஆவது நிமிடத்தில் மிரலம் பிஜனிக் கோல் பெற்றார். இந்நிலையில் 41 வயதுடைய கோல் காப்பாளர் கியன்லுகி பபோன் கடைசி நிமிடத்தில் எதிரணியின் கோல் முயற்சியை அபாரமாக தடுத்ததன் மூலம் ஜுவன்டஸின் வெற்றி உறுதியானது.    

OGC நைஸ் எதிர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்

லீக் 1 நடப்புச் சம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், நைஸ் அணிக்கு எதிராக 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.     

போட்டியின் முதல் பாதியில் அங்கெல் டி மரியா இரட்டை கோல் பெற்று பாரிஸ் ஜெர்மைன் அணியை முன்னிலை பெறச் செய்த நிலையில் காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய கைலியன் ம்பப்பே 88 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தினார். போட்டி முடியும் நேரத்தில் மவுரோ லொகார்ட் பெற்ற கோல் மூலம் PSG நெருக்கடி இன்றி வெற்றியீட்டியது. 

மறுபுறம் 67 ஆவது நிமிடத்தில் ஆறுதல் கோல் ஒன்றை பெற்ற நைஸ் அணி இரண்டாவது பாதியில் இரண்டு சிவப்பு அட்டைகளை பெற்றதால் 9 வீரர்களுடனேயே விளையாட வேண்டி ஏற்பட்டது.    

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<