பளுதூக்கலில் புதிய வரலாறு படைத்தார் கிழக்கு வீராங்கனை கிரிஜா

180
Girija

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 45 ஆவது தேசிய விளையாட்டு பெரு விழாவின் ஓர் அங்கமான பளுதூக்கல் போட்டிகள் கொழும்பில் உள்ள டொரிண்டன் உள்ளக அரங்கில் நேற்று (10) ஆரம்பமாகியது.  

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகின்ற இம்முறை போட்டித் தொடரில் வடக்கு, கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த 300இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குற்றியிருந்தனர்.

இந்த நிலையில், போட்டியின் முதல் நாளன்று (10) நடைபெற்ற பெண்களுக்கான 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட யோகராஸா கிரிஜா வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

45 வருடகால தேசிய பெரு விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியில் கிழக்கு மாகாணம் பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கமாக இது பதிவாகியதுடன், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் கிரிஜா பெற்றுக் கொண்டார்.  

தேசிய கராத்தேவில் 8ஆவது தடவையாக பதக்கம் வென்ற பாலுராஜ்

இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா கராத்தே..

சுமார் ஓன்பது வருடங்களாக பளுதூக்கல் போட்டியில் ஈடுபட்டு வருகின்ற கிரிஜா, தனது வெற்றி குறித்து எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில்,

தேசிய பெரு விழா வரலாற்றில் கிழக்கு மாகாணத்துக்கு பளுதூக்கல் போட்டியில் முதல் பதக்கத்தினை வென்று கொடுக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. நான் திருகோணமலை செல்வநாயகபுரம் தமிழ் மகா வித்தியாலத்தில் கல்வி கற்றேன். தரம் 8இல் இருந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வருகிறேன். நான் ஆரம்பத்தில் மெய்வல்லுனர் போட்டிகளில் தான் அதிக கவனம் செலுத்தியிருந்தேன்

எனினும், 2010ஆம் ஆண்டு முதல் தான் பளுதூக்கல் விளையாட்டை பகுதி நேர விளையாட்டாக செய்து வந்தேன். அதேபோல, கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறிது காலம் பளுதூக்கல் விளையாட்டில் இருந்து விலகியிருந்தேன்.

அந்த நேரத்தில் தான் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் உள்ள உமாசுதன் ஆசிரியரின் வழிகாட்டல் மற்றும் ஊக்கப்படுத்தல் என்பவற்றுடன் மீண்டும் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தேன்.

கடந்த 2010இல் நடைபெற்ற தேசிய பெரு விழாவில் 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டேன். மீண்டும் 2016இல் தேசிய மட்ட பளுதூக்கலில் பங்குகொண்டேன். தொடர்ந்து 2017இல் ஐந்தாவது இடத்தைப் பெற்றேன். தற்போது இந்த வருடம் 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டேன்.

எனவே உமாசுதன் ஆசியரின் ஊக்கப்படுத்தலினால் இன்று நான் தேசிய மட்டத்தில் பதக்கமொன்றை வெற்றி கொண்டேன். ஆனாலும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எந்தவொரு வசதிகளும் இல்லாமல் தான் இந்தப் பதக்கத்தினை வெற்றி கொள்ள முடிந்தது. எனவே, என்னைப் போன்ற நிறைய பேர் உள்ளனர். இதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் நாங்கள் இன்னும் சாதிப்போம்” என தெரிவித்தார்

தேசிய விளையாட்டு விழா கெரம் போட்டிகளில் வடக்குக்கு 3 பதக்கங்கள்

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித்..

அதுமாத்திரமின்றி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேசிய பெரு விழாவில் தங்கப் பதக்கத்தினை வெல்ல வேண்டும் என்பதே தனது அடுத்த இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டார்

இதுஇவ்வாறிருக்க, கிரிஜாவின் பயிற்சியாளரும், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பயிற்சியாளருமான உமாசுதன் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்

தேசிய பெரு விழா வரலாற்றில் கிழக்கு மாகாணத்துக்கு முதல் பதக்கத்தை எனது மாணவி கிரிஜா பெற்றுக் கொடுத்துள்ளார். உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றியை முழு கிழக்கு மாகாணமுமே கொண்டாடும் என நம்புகிறேன். எங்களுக்கு எந்தவொரு வசதிகளும் இல்லை. ஆனாலும் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தான் கிரிஜா போன்ற வீரர்களுக்கு பயிற்சிகளை அளித்து வருகிறேன். அத்துடன், மாதத்தில் 2 தடவைகள் இவர்களை பொலன்னறுவைக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிப்பேன்.

அதேபோல, கிழக்கு மாகாணத்தில் இதுவரை எந்தவொரு மைதானமும் எமக்கு இல்லை. இதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இன்று வட மாகாணம் எம்மை விட விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். அங்குள்ள வீரர்களின் திறமைகள் உரிய முறையில் இனங்காணப்பட்டுள்ளன

எனவே, நாங்களும் இனிவரும் காலங்களில் குழு நிலை போட்டிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்காமல் தனிநபர் போட்டிகளுக்கும் முன்னுரிமை கொடுத்தால் நிச்சயம் எமது மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களும் தேசிய மட்டத்தில் இன்னும் இன்னும் பதக்கங்களை வெல்வார்கள்” என அவர் தெரிவித்தார்

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<