இலங்கையில் T20 லீக் தொடரொன்று இல்லாமை கவலையளிக்கிறது – தசுன் ஷானக்க

205

இலங்கையைப் பொறுத்தமட்டில் வெளிநாட்டு T20 லீக் தொடர்களில் லசித் மாலிங்க, திசர பெரேரா, இசுரு உதான, நிரோஷன் டிக்வெல்ல உள்ளிட்ட ஒருசில வீரர்கள் மாத்திரமே விளையாடி வருவதாகத் தெரிவித்த பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை T20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க, தம்மைப் போன்ற திறமையான இளம் வீரர்கள் இலங்கையில் இருந்தும் T20 லீக் தொடரொன்றை  நடத்தாமல் இருப்பது மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்தார்.  

பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடரை முழுமையாகக் கைப்பற்றியதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார். 

பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த இளம் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ……

இதன்போது, இலங்கையில் சர்வதேச தரத்திலான T20 லீக் தொடரொன்றை நடத்துவது எந்தளவு தூரத்துக்கு முக்கியத்துவம் என்று தசுன் ஷானக்கவிடம் கேட்ட போது,  

”அடுத்த வருடம் T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. உண்மையில் பெரும்பாலான நாடுகளில் T20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் வெளிப்படுத்திய திறமைகளை வைத்துப் பார்த்தால் 4 அல்லது 5 பேருக்கு மாத்திரம் வெளிநாட்டு T20 தொடர்களில் விளையாடுவதற்கு அழைப்பு கிடைக்கலாம். மற்றைய வீரர்கள் திறமைகள் இருந்தும் உள்வாங்கப்படமாட்டார்கள்.  

எனவே, எமது நாட்டில் இவ்வாறான போட்டித் தொடரொன்று நடத்தப்படாமை தான் இதற்கு முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன். கிரிக்கெட் விளையாடுகின்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் இலங்கையில் மாத்திரம் தான் பாடசாலை மட்டத்தில் இருந்து அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பல வீரர்கள் உருவாகிறார்கள். எனவே, அவர்களது திறமைகள் வெளிவராததற்கான முக்கிய காரணியாக எமது உள்ளூர் கழக மட்டப் போட்டி முறைமையை கூறலாம்.  

இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலான வீரர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ளனர். டெஸ்ட் அணிக்காக விளையாடிய முக்கியமான பல வீரர்கள் அங்கு சென்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களது அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் எமக்கு கிடைக்கவில்லை.

எனவே, இளம் வீரர் ஒருவருக்கு சர்வதேச அனுபவமொன்றைப் பெற்றுக்கொள்ள மற்றுமொரு அனுபவமிக்க வீரரொருவர் தான் ஆலோசனை கொடுக்க வேண்டும். நான் இந்த இடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்தேன். அதேபோல, பல திறமையான வீரர்கள் இலங்கை அணிக்காக விளையாடுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்” என தெரிவித்தார்.

இலங்கையில் இவ்வாறான தொடர்கள் இல்லாமையினால் கடந்த காலங்களில்  தாம் எதிர்நொக்கிய விடயங்கள் மற்றும் இதன் அவசியம் குறித்து கருத்து தெரிவித்த தசுன், 

”மற்றைய நாடுகளில் உள்ள வீரர்கள் உள்ளூர் T20 தொடர்களில் விளையாடுவது மாத்திரமின்றி, அதில் விளையாடுகின்ற வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடுகின்ற வாய்ப்பையும் பெறுகின்றனர்.  

எனவே, இலங்கை T20 தொடரொன்று இடம்பெறாத குறையை கடந்த காலங்களில் நாங்கள் கண்கூடாக பார்த்துள்ளோம். T20 தரவரிசையில் முதல்நிலை அணியாக இருந்த நாங்கள் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.  

கடந்த சில வருடங்களாக ஒரே அணியொன்று தான் எல்லா T20 போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். இதனால் நாங்கள் தொடர் தோல்விகளுக்கு முகங்கொடுத்தோம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்தத் தொடரை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான வீரர்கள் முதல்தடவையாக இலங்கை அணிக்காக விளையாடியிருந்தனர்.

இவர்கள் இங்கு வந்து விளையாடி தமது திறமைகளை வெளிப்படுத்தாவிட்டால் அவர்கள் யார் என்பதை இலங்கை மக்களும், கிரிக்கெட் உலகமும் அறிந்திருக்காது. எனவே இவ்வாறான திறமைகளைக் கொண்ட வீரர்களை அனைவரும் பார்க்க வேண்டும். இதற்காக இலங்கையிலும் சர்வதேச தரமிக்க T20 போட்டியொன்றை நடத்த வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடாகும்.  

இலங்கைக்கு எதிரான ஆஸி. T20i குழாம் அறிவிப்பு

தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் …….

ஏனெனில், இலங்கையைப் பொறுத்தமட்டில் அண்மைக்காலமாக சர்வதேச T20 லீக் தொடர்களில் லசித் மாலிங்க, திசர பெரேரா, இசுரு உதான, நிரோஷன் டிக்வெல்ல உள்ளிட்ட ஒருசில வீரர்கள் மாத்திரமே விளையாடி வருகின்றனர். எனவே, அவர்களைப் போல அபார திறமைகளை வைத்துக் கொண்டுள்ள இந்த வீரர்களுக்காக T20 லீக் தொடரொன்றை இலங்கையில் நடத்தாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கிறது

ஆகவே, இந்த தொடருடன் எமது கிரிக்கெட்டுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இளம் வீரர்களாக நாங்கள் இங்கு வந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளோம். எனவே, இனியும் இவர்களை அணிக்குள் இருந்து புறக்கணிக்கக் கூடாது. அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை தேர்வாளர்கள் கொடுக்க வேண்டும்.  

அதேபோல, சர்வதேச வீரர்களின் பங்குபற்றலுடன் T20 தொடரொன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வெளிநாட்டு தொடர்களிலும் அவர்களுக்கு விளையாட அனுமதி கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<