டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்த அஷ்வின்

156

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சமன் செய்து சாதனை படைத்தார். 

முத்தையா முரளிதரன் தனது 66 ஆவது டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதேபோன்று அஷ்வினும் தனது 66ஆவது டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சங்கக்காரவும், ஹேரத்தும் என்னை ஈர்த்த வீரர்கள் – தென்னாபிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான……

இந்தியாவுக்கும், தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் அஷ்வின் தனது அபார சுழல் பந்துவீச்சால் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 5 விக்கெட்டுகளை 27ஆவது முறையாக வீழ்த்தினார்

அதுமாத்திரமின்றி, தென்னாபிரிக்காவுக்கு எதிராக 5 முறை அஷ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். இதற்கு முன் ஹர்பஜன் சிங், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 4 முறை தென்னாபிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

இதேநேரம், முத்தையா முரளிதரன் (இலங்கை) 11 முறையும், ஷேன் வோர்ன் (அவுஸ்திரேலியா) 7 முறையும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுக்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இதில் அஷ்வின் 3ஆவது இடத்தில் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க, அஷ்வின் 21ஆவது முறையாக சொந்த மண்ணில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உள்ளுரில் அதிக முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 4ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.

இலங்கையின் முத்தையா முரளிதரன் 45 முறையும், ரங்கன ஹேரத் 26 முறையும், அனில் கும்ப்ளே 25 முறையும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் சொந்த மண்ணில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் அஷ்வின் உள்ளார். எனவே அனில் கும்ப்ளேயை விரைவில் அவர் நெருங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வினுக்கு முரளிதரன் சாதனையை சமன் செய்ய ஒரு விக்கெட் மாத்திரம் தேவைப்பட்டது.

இதன்படி, போட்டியின் 2ஆவது இன்னிங்ஸை தென்னாபிரிக்க அணி இன்று (06) தொடங்கியது. இதில் அந்த அணியின் தீனுஸ் டி புருயினின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியபோது, டெஸ்ட் அரங்கில் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முத்தையா முரளிதரன் 2001ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற தனது 66ஆவது டெஸ்ட் போட்டியில்தான் 350 விக்கெட்டுகளை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இருவரும் 66 போட்டிகளில் 350 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். விரைவாக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.

இதில் நியூசிலாந்து ஜாம்பவான் சேர் ரிச்சர்ட் ஹேட்லி மற்றும் தென்னாபிரிக்க நட்சத்திரம் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் 69 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுக்கள் மைல்க்லை எட்டி அடுத்தடுத்து இடங்களில் உள்ளதுடன், அவுஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி 70 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார். 

சதமடித்து சாதனைகளைக் குவித்த ரோஹித், மயங்க் அகர்வால் ஜோடி

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய….

இதேநேரம், இந்திய அணியின் முன்னாள் தலைவரும், சுழல் பந்துவீச்சாளருமான அனில் கும்ப்ளே தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் தான் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான அஷ்வின், 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய மைல்கல்லை எட்டினார்.

இதேவேளை, கடந்த மாதம் நிறைவுக்கு வந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் அணியில் இடம்பெற்றும், அவருக்கு இறுதி 11 பேர் கொண்ட அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் இந்திய அணியின் பல முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

எனினும், சொந்த மண்ணில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டியில் சுமார் ஒரு வருட காலத்துக்குப் பிறகு களமிறங்கிய அஷ்வின் தனது மயாஜால சுழல் பந்துவீச்சினால் தென்னாபிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்து சாதனையும் படைத்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<