இலங்கை டி-20 அணியில் திருப்பம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிடும் தசுன் சானக்க

220

லசித் மாலிங்கவின் ஆலோசனைகளுடன் அணியை வழி நடத்துவது எனக்கு இலகுவாக இருக்கும் என்று பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை டி-20 அணியின் தலைவர் தசுன் சானக்க நம்பிக்கை தெரிவித்தார். 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என தோல்வி அடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் இன்று (05) லாஹூரில் ஆரம்பமாகவுள்ளது.

லாஹூர் T20 யில் எதுவும் நடக்கலாம்

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான்…..

இலங்கை டி-20 அணித்தலைவர் லசித் மாலிங்க மற்றும் சிரேஷ்ட வீரர்கள் சிலர் பங்கேற்காத நிலையில் தசுன் சானக்க தலைமையில் இந்த தொடரில் இளம் வீரர்கள் விளையாடவுள்ளனர். 

“லசித் மாலிங்கவுடன் நான் போதிய காலம் விளையாடி இருக்கிறேன். அவரது ஆலோசனைகளை பெற்றிருக்கிறேன். அவருடைய அந்த ஆலோசனையுடன் அணியை வழிநடத்துவது எனக்கு இலகுவாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று முதல் டி-20 போட்டிக்கு முன்னர் பேட்டி அளித்த தசுன் சானக்க கூறினார். 

இலங்கை அணிக்காக இதுவரை 30 டி-20 போட்டிகளில் விளையாடி இருக்கும் 28 வயதான தசுன் சானக்க முதல் முறை இலங்கை அணிக்கு தலைமை வகிக்கவுள்ளார்.

“அணித் தலைவராக எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. அதேபோன்று இளம் வீரர்கள் பலருடனேயே விளையாட வேண்டி இருப்பதால் இது எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் உள்ளது. எனவே எனது அனுபவத்தை பயன்படுத்தி அணிக்காக சிறந்த ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த எதிர்பார்க்கின்றேன். 

பாகிஸ்தான் அண்மைக் காலத்தில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வருகிறது. எமது அணியில் பின்னடைவு ஒன்று இருந்தது. என்றாலும் பாகிஸ்தான் வந்து நாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர்களை வீழ்த்தும் திறன் இருப்பதை நாம் வெளிக்காட்டினோம். 

எனவே, டி-20 அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சவால் கொடுத்து தொடரை வெல்வதற்கு அதிக எதிர்பார்ப்புடன் உள்ளோம். 

இந்த அணி பற்றி எனக்கு அதிக நாம்பிக்கை உள்ளது. உண்மையில் அவர்கள் ஒன்றாக இணைந்து விளையாடுகிறார்கள். ஒரு அணியாக வெளிப்படுத்தும் முயற்சி போட்டி ஒன்றை வெல்வதற்கு அதிக தாக்கம் செலுத்துகிறது. எமது அணியில் அது உள்ளது. இந்த தொடரில் எனது அணி பெரும் திரும்பம் ஒன்றை வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

இளம் பெதும், கமிந்து ஜோடி அசத்த இலங்கை A அணி வலுவான நிலையில்

பங்களாதேஷ் A அணியுடனான….

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இதுவரை 18 டி-20 போட்டிகள் இடம்பெற்றிருந்தபோதும் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டி-20 போட்டியில் கூட வென்றதில்லை. கடைசியாக நடந்த 6 டி-20 போட்டிகளில் இலங்கை பாகிஸ்தானிடம் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.       

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<