வெற்றியின் எதிர்பார்ப்புடன் பாகிஸ்தான் சென்றது இலங்கை அணி

156

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி, அதிக இளம் வீரர்களை கொண்டிருந்தாலும், சம பலமுடைய அணியாகவே செல்கிறது என பாகிஸ்தான்  தொடருக்கான ஒருநாள் அணித் தலைவராக செயற்படவுள்ள லஹிரு திரிமான்னே தெரிவித்துள்ளார்.

10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் வரவுள்ள ஐ.சி.சி நடுவர்கள்

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான்…..

பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20I போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, இன்றைய தினம் இலங்கையிலிருந்து புறப்பட்டிருந்தது. இன்று காலை புறப்படுவதற்கு முன்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவுக்கும் போதே திரிமான்னே, இதனை தெரிவித்தார். 

அதேநேரம், சுற்றுப் பயணம் தொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர்,

“அணியை பொருத்தவரை அதிக இளம் வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும், எமது அணி அனைத்து வகையிலும் சம பலமான அணியாக உள்ளது. இந்த இளம் அணியை கொண்டு நாம் எப்படி போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற திட்டங்களை வகுக்க வேண்டும். அதுமாத்திரமின்றி, இளம் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சரியான தருணம் இதுவாகும். அத்துடன், சரியான போட்டியை கொடுத்தால் எம்மால் வெற்றிபெற முடியும்” 

அத்துடன், பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் செல்வதற்கு முன்னணி வீரர்கள் தவிர்த்திருந்த நிலையில், இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி பாகிஸ்தான் செல்லவிருக்கிறது. இந்தநிலையில், அங்குள்ள பாதுகாப்பு தொடர்பில் தனது கருத்தினையும் லஹிரு திரிமான்னே பகிர்ந்துக்கொண்டார்.

“முன்னணி வீரர்கள் விலகியதை நாம் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. இது தனிப்பட்ட முடிவாகும். அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களுடன் எடுக்க வேண்டிய முடிவாகும்.

கிரிக்கெட் சபையை பொருத்தவரை எமது வீரர்கள் 30 பேருக்கு பாகிஸ்தான் தொடருக்கான பாதுகாப்பு தொடர்பில் தெளிவுப்படுத்தினர். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன், எனது குடும்ப அங்கத்தவர்களும் எந்தவித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. அதனால் தான் அங்கு செல்ல சம்மதித்தேன்” என்றார்.

இதேவேளை, ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றிருக்கும் தசுன் ஷானக, இலங்கை T20I அணியின் தலைவராகவும் செயற்படுகின்றார். இந்தநிலையில், T20I போட்டிகள் குறித்து கருத்து வெளியிட்ட தசுன் ஷானக,

“T20I போட்டிகளுக்கான குழாத்திலிருந்து 4 வீரர்கள் மாத்திரமே விலகியுள்ளனர். தலைவர் என்ற ரீதியில் எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த காலங்களில் இளம் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்போது அவர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது உறுதி

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள்…..

முக்கியமாக மினோத் பானுக மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக பிரகாசித்த வீரர்கள். பாகிஸ்தான் அணி T20I போட்டிகளில் முதல் நிலை அணியாகும். அவர்களுக்கு எதிராக சிறந்த போட்டியை கொடுக்க வேண்டும்“ என்றார்.

அதேநேரம், கடந்த முறை இலங்கை அணி பாகிஸ்தான் சென்றபோது தசுன் ஷானகவும் அணியுடன் சென்றிருந்தார். இந்நிலையில், கடந்தமுறை சிறந்த பாதுகாப்பு இருந்ததாகவும், அதனால். அங்கு செல்வதற்கு ஏற்றுக்கொண்டதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<