முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் செல்லாமைக்கு இந்தியா காரணமா? – பதில் கூறும் ஹரின்

171
Harin Fernando

இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளாமைக்கு இந்தியா எந்த விதத்திலும் காரணமாகாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்காக அந்நாட்டுக்கு செல்வதில் இருந்து இலங்கை அணியின் முன்னணி 10 வீரர்கள் விலகியுள்ளனர். இதில், ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் T20I போட்டிகளுக்கான தலைவர் லசித் மாலிங்கவும் உள்ளடங்குகின்றனர். 

முக்கிய வீரர்கள் இன்றி பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி

இம்மாத கடைசில் இடம்பெறவுள்ள இலங்கை அணியின் பாகிஸ்தான்…

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், ஒரு சில அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும், முன்னணி அணிகள் பாகிஸ்தான் செல்வதற்கு மறுத்து வருகின்றன. எனினும், இலங்கை அணி இறுதியாக 2017ம் ஆண்டு T20I போட்டியொன்றில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தது.

இந்தநிலையில், தற்போது மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இலங்கை அணி பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளது. இவ்வாறான நிலையில், இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் இந்தியாவின் அச்சுறுத்தல் காரணமாகத்தான் சுற்றுப் பயணத்தை தவிர்த்துள்ளனர் என பாகிஸ்தானின் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத்துறை அமைச்சர் பவாட் ஹுசைன் குற்றம் சுமத்தியிருந்தார்.

பாகிஸ்தான் தொடரில் பங்கேற்றால் ஐ.பி.எல். தொடரில் இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என இந்தியா அச்சுறுத்தியுள்ளதாகவும், அதனால் தான் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் தொடருக்கு வர மறுத்துள்ளனர் எனவும் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவருக்கு இடைக்காலத் தடை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க…

பாகிஸ்தான் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுக்கும் வகையில், இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளதுடன், வீரர்கள் அவர்களது பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மாத்திரமே பாகிஸ்தான் தொடரில் பங்கேற்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்தமைக்கான காரணம் இந்தியா என வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. வீரர்கள் 2009ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் காரணமாகவே இந்த முடிவினை எடுத்துள்ளனர். அவர்களின் முடிவினை நாம் மதிக்கிறோம். அதேநேரம், பாகிஸ்தான் செல்வதற்கு விரும்புகின்ற வீரர்களை நாம் குழாத்தில் பெயரிட்டுள்ளோம். முழு பலத்துடைய அணியொன்றை தயார்செய்துள்ளோம். அவர்கள், பாகிஸ்தான் அணியை வெற்றிக்கொள்வார்கள் என நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார். 

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி எதிர்வரும் 27ம் திகதி ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<