அபார வெற்றியுடன் ஆஷஷ் கிண்ணத்தை நெருங்கும் அவுஸ்திரேலியா

159
Image Courtesy : ICC Twitter

மென்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஷ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்க, அணிக்கு பலமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய ஸ்டீவ் ஸ்மித் அணிக்குள் அழைக்கப்பட்டார். இவருடன், மிச்சல் ஸ்டார்க், இந்த ஆஷஷ் தொடரில் முதல் முறையாக களமிறக்கப்பட்டார்.

சாதனைப் பட்டியலில் சங்காவைக் கடந்த ஸ்மித்

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில்……..

அவுஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட, இங்கிலாந்து அணியில் உபாதை காரணமாக முழுமையாக தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஜேம்ஸ் எண்டர்சனுக்கு பதிலாக குழாத்துக்குள் அழைக்கப்பட்ட க்ரைக் ஓவர்டன், க்ரிஸ் வோர்க்ஸிற்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டார்.

உபாதைக்கு பின்னர், உலக டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியதுடன், நான்காவது டெஸ்ட்டில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், மற்றுமொரு சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். இரட்டைச் சதம் கடந்த இவர், 211 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 497 ஓட்டங்களை பெற்று, ஆட்டத்தை இடைநிறுத்தியது.

ஸ்டீவ் ஸ்மித்தின் இரட்டைச் சதத்தை தவிர, மார்னஸ் லபுசெங், 67 ஓட்டங்களையும், அணித் தலைவர் டிம் பெய்ன் 58 ஓட்டங்களையும், மிச்சல் ஸ்டார்க் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் அனுபவ வீரர் ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, ஜெக் லீச் மற்றும் ஓவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, ரோரி பேர்ன்ஸ் மற்றும் அணித் தலைவர் ஜோ ரூட் ஆகியோர் அரைச் சதம் கடந்தும், 301 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ரோரி பேர்ன்ஸ் அதிகபட்சமாக 81 ஓட்டங்களையும், ஜோ ரூட் 71 ஓட்டங்களையும் பெற, ஜோஸ் பட்லர் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் ஜோஸ் ஹெஸல்வூட் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, மிச்சல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இதன் பின்னர் 196 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்தியதுடன், இங்கிலாந்து அணிக்கு 383 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஸ்டீவ் ஸ்மித் அரைச் சதம் கடந்து 82 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, ஜொப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், ஸ்டுவர்ட் புரோட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

அவுஸ்திரேலிய அணி 4 ஆவது நாள் இறுதியில் ஆட்டத்தை இடைநிறுத்த, துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி நான்காவது நாள் நிறைவில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன் அடிப்படையில், இன்று களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தும், போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், இறுதி நாள் ஆட்டநேரம் நிறுத்தப்படுவதற்கு சுமார் 13 ஓவர்கள் மாத்திரம் எஞ்சியிருந்த நிலையில், 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 53 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், ஜோஸ் பட்லர் (34), ஜெக் லீச் (12)  மற்றும் குறிப்பாக க்ரைக் ஓவர்டன் (21) ஆகியோர் அதிக பந்துகளை எதிர்கொண்டு போட்டியை சமப்படுத்த முற்பட்டிருந்தனர். இதில்,  துரதிஷ்டவசமாக ஓவர்டன் இறுதிவரை போராடி 105 பந்துகள் வரை விக்கெட்டினை பாதுகாத்து ஆட்டமிழந்திருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜோஸ் ஹெஸல்வூட் மற்றும் நெதன் லையோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர். அத்துடன், மார்னஸ் லெபுசெங் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் முக்கியமான தருணத்தில், முறையே ஜெக் லீச் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

குப்பைகளை அள்ளி ஆஷஸ் போட்டியை காண வந்த ஆஸி. சிறுவன்

நான்கு வருடங்களாக குப்பைகளை அள்ளி அதன் மூலம் சேர்த்த……

ஆஷஷ் தொடரின் 4 போட்டிகள் நிறைவில் 2-1 என அவுஸ்திரேலியா முன்னிலை பெற்று, தொடரை தங்கள் பக்கம் திருப்பியுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 497/8d – ஸ்டீவ் ஸ்மித் 211, மார்னஸ் லபுசெங் 67, டிம் பெய்ன் 58, மிச்சல் ஸ்டார்க் 54*, ஸ்டுவர்ட் புரோட் 97/3, ஜெக் லீச் 83/2, க்ரைக் ஓவர்டன் 85/2

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 301 – ரோரி பேர்ன்ஸ் 81, ஜோ ரூட் 71, ஜோஸ் ஹெஸல்வூட் 57/4, பெட் கம்மின்ஸ் 60/3, மிச்சல் ஸ்டார்க் 80/3

அவுஸ்திரேலியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 186/6d – ஸ்டீவ் ஸ்மித் 82, மெதிவ் வேட் 34, ஜொப்ரா ஆர்ச்சர் 45/3, ஸ்டுவர்ட் புரோட் 54/2 

இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 197 – ஜோ டென்லி 53, ஜோஸ் பட்லர் 34, ஜேசன் ரோய் 31, பெட் கம்மின்ஸ் 43/4, ஜோஸ் ஹெஸல்வூட் 31/2, நெதன் லையோன் 51/2

முடிவு அவுஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<