இலங்கை வீரர்களுக்கு மின்னொளியில் அதிக பயிற்சி கொடுங்கள் – மாலிங்க

239

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு T20i போட்டிகளிலும் வெற்றியின் விளிம்புவரை சென்று தோல்வியைத் தழுவ நேரிட்டமை ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்த இலங்கை T20i அணியின் தலைவர் லசித் மாலிங்க, இலங்கை அணியில் உள்ள இளம் வீரர்கள் மின்னொளியின் கீழ் களத்தடுப்பு செய்வது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20i தொடரை ஏற்கனவே 2 – 0 என பறிகொடுத்துள்ள இலங்கை அணி, அத்தோல்வியை நிவர்த்தி செய்யும் நோக்கில் இன்று (06) நடைபெறவுள்ள இறுதி T20i போட்டியை கைப்பற்றி ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கவுள்ளது

மூன்றாவது போட்டியிலிருந்து வெளியேறும் செஹான், மெண்டிஸ்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ……

மறுபுறத்தில் முதலிரண்டு T-20 போட்டிகளில் கடைசி ஓவர்களில் வெற்றிகளையீட்டிய நியூசிலாந்து அணி, இன்று நடைபெறவுள்ள கடைசி T20i போட்டியிலும் வெற்றியீட்டி தொடரை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கவுள்ளது.  

இந்த நிலையில், இன்றைய போட்டிக்கான இலங்கை அணியின் ஆயத்தம் குறித்து நேற்று (05) பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை T20i அணியின் தலைவர் லசித் மாலிங்க கருத்து வெளியிடுகையில்

”இலங்கை அணிக்குள் திறமையான வீரர்கள் இடம்பெற்றாலும், அவர்கள் மின்னொளியின் கீழ் இன்னும் சிறப்பாக களத்தடுப்பு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தமட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அதேபோல, பந்துவீச்சாளர்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அணியின் வெற்றிக்காக தமது 100 சதவீத பங்களிப்பினை வழங்கியிருந்தனர். எனினும், துரதிஷ்டவசமாக நாங்கள் களத்தடுப்பில் ஒருசில தவறுகளை விட்டோம். இதனால் தான் முதலிரண்டு போட்டிகளில் வெற்றியின் விளிம்புவரை சென்று தோல்வியைத் தழுவ நேரிட்டது

உலகில் நடைபெறுகின்ற T20 தொடர்களில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவது மிகவும் குறைவு. அவ்வாறு விளையாடினால் மின்னொளியின் கீழ் அவர்களுக்கு களத்தடுப்பு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே, எமது வீரர்களுக்கு அனுபவம் இல்லாமை தான் களத்தடுப்பில் இவ்வாறு தவறிழைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.  

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் கலந்துரையாடி எமது வீரர்களுக்கு மாதமொன்றுக்கு நான்கு நாட்கள் அல்லது குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது மின்னொளியில் களத்தடுப்பு பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைளை எடுக்கும்படி கோரிக்கை விடுக்கவுள்ளேன். இல்லாவிட்டால் இளம் வீரர்களுக்கு எதிர்பார்த்த முறையில் களத்தடுப்பு செய்ய முடியாது

எதுஎவ்வாறாயினும், வனிந்து ஹசரங்க எதிர்காலத்தில் இலங்கை T20 அணிக்கு மிகச் சிறப்பாக முதலீடாக இருப்பார்” என தெரிவித்தார்.

இதேநேரம், முதலிரண்டு போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியதற்கான காரணத்தை லசித் மாலிங்க தெளிவுபடுத்துகையில்

”எமது அணியில் பெரும்பாலான இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கிடையாது. எனவே, அவர்களுக்கு அதிக ஓட்டங்களை துரத்தியடிப்பது மிகவும் கடினமாகும். இதனால், முதலில் துடுப்பெடுத்தாடினால் அவர்களுக்கு மனஅழுத்தம் இன்றி சுதந்திரமாக விளையாடலாம்.

Photo Album : New Zealand practice session ahead of 3rd T20 against Sri Lanka

மறுபுறத்தில் அவர்கள் பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் போது பந்துவீச்சாளர்களாக நாங்கள் ஓட்டங்களை வழங்குவதில் நெருக்கடியைக் கொடுக்க வேண்டும். அந்த திட்டம் பெரும்பாலான நேரங்களில் எமக்கு சாதகமான பெறுபேற்றைக் கொடுத்திருந்தது

எதுஎவ்வாறாயினும், தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரிவர செய்து முடிப்பதற்கு வீரர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்

இதேவேளை, முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது குறித்து இலங்கை ரசிகர்களுக்கு எவ்வாறான செய்தியை முன்வைக்க விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மாலிங்க கருத்து தெரிவிக்கையில்

கிரிக்கெட் விளையாட்டை நேசிக்கின்ற ரசிகர்களைப் போல கிரிக்கெட் விளையாடுகின்ற வீரர்களும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதேபோல, தோல்வியைத் தழுவினால் இரு தரப்பினரும் கவலைப்படுவார்கள். போட்டியைப் பார்க்க மைதானத்துக்கு வாருங்கள் என எமக்கு ரசிகர்களிடம் கோரிக்கை விடுக்க முடியாது

பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்காக சதமடித்து அசத்திய ஆபிப் ஹொசைன்

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி …….

ஆனால், திறமைகளை வெளிப்படுத்தினால் மாத்திரம் தான் எம்மால் ரசிகர்களை மைதானத்துக்கு கொண்டுவர முடியும். அதுதான் எமது பொறுப்பாகும். இதற்குமுன் இவ்வாறான சூழல் இலங்கை அணியில் இருந்தது. அதன்பிறகு காணாமல் போய்விட்டது

எனினும், தற்போது எமது ரசிகர்கள் மீண்டும் இலங்கை கிரிக்கெட்டை நேசிக்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல எமது வீரர்கள் விளையாடுகின்ற முறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், போட்டியில் வெற்றி பெறுவதை தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, அவர்களது எதிர்பார்ப்பை இன்றைய போட்டியிலாவது நிறைவேற்றிக் கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என அவர் கூறினார்.  

இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் உபாதைக்குள்ளாகிய குசல் மெண்டிஸ் மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோர் வலைப் பயிற்சிகளில் ஈடுப்பட்டாலும், இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்கள் என மாலிங்க தெரிவித்தார்

இதேவேளை, சர்வதேச டி-20 அரங்கில் 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி மற்றுமொரு சாதனையை படைப்பதற்கான அரிய வாய்ப்பு இன்றைய போட்டியில் லசித் மாலிங்கவுக்கு கிடைத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<