டெஸ்ட் தரவரிசையில் மேலும் முன்னேறினார் திமுத் கருணாரத்ன

1557

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் கடந்த இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவிசையில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.  

வாய்ப்பை பயன்படுத்துங்கள், இல்லாவிட்டால் நீக்கப்படுவீர்: திமுத் எச்சரிக்கை

நியூசிலாந்துடனான இரண்டாவது போட்டியில் தமது ………

ஏஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் மற்றும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி என்பன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வீரர்களுக்கான தரப்படுத்தலை ஐசிசி இன்று (27)  வெளியிட்டுள்ளது. 

வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசையின் படி, இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து 8ம் இடத்துக்கு முன்னேறிய இவர், தற்போது மேலும் இரண்டு இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

இவருடன், ஏஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தடுமாறிய போதும், மூன்றாவது போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் 77 ஓட்டங்களை பெற்ற ஜோ ரூட் திமுத்துக்கு அடுத்தப்படியாக 7வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக முக்கிய மாற்றமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 154 ஓட்டங்களை குவித்த டொம் லேத்தம் 5 இடங்கள் முன்னேறி 8வது இடத்தையும், இந்திய அணியின் அஜின்கியா ரஹானே 10 இடங்கள் முன்னேறி 11வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஏஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜொப்ரா ஆர்ச்சர் தரவரிசையில் 43வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவருடன், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா 9 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். இதேவேளை, கெமார் ரோச் 8வது இடத்துக்கும், ஜோஸ் ஹெஷல்வூட் 12வது இடத்துக்கும் முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணிக்கு எதிராக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ட்ரென்ட் போல்ட் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

வாய்ப்பை பயன்படுத்துங்கள், இல்லாவிட்டால் நீக்கப்படுவீர்: திமுத் எச்சரிக்கை

நியூசிலாந்துடனான இரண்டாவது போட்டியில் தமது …….

அதேநேரம், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முக்கிய மாற்றமாக, ஏஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் (135*) ஊடாக வெற்றியை பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையிலும் 13வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதேவேளை, புதிதாக வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் தரவரிசையின் படி, துடுப்பாட்ட வீரர்களில் முதலிடத்தை இந்திய அணியின் விராட் கோஹ்லி, பந்துவீச்சு வரிசையில் முதலிடத்தை அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் மற்றும் சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தை ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<