முதல் போட்டியின் உத்வேகத்துடன் மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

513
2nd Test match preview

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பி. சரா ஓவல் மைதானத்தில் நாளை (22) ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றியை பெற்ற இலங்கை அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது. 

ட்விட்டரில் கொண்டாடப்படும் இலங்கை அணியின் வரலாற்று வெற்றி

கடந்த புதன்கிழமை (14) காலி சர்வதேச மைதானத்தில்..

இலங்கை அணி இத்தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளதுடன், ஐசிசி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான தங்களுடைய முதல் போட்டியிலேயே வெற்றியையும் சுவைத்துள்ளது. இதன் மூலம் 60 புள்ளிகளை பெற்று டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 6வது இடத்திலிருக்கும் இலங்கை அணி பலம் மிக்க நியூசிலாந்து அணியை வீழ்த்தியுள்ளமை அணி வீரர்களிடத்தில் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கு முன்னர், நடைபெற்ற 5 டெஸ்ட் தொடர்களை நியூசிலாந்து அணி வெற்றிக்கொண்டிருந்தது. இவ்வாறு பலமான அணியை அதுவும், காலி போன்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமான ஆடுகளத்தில் 268 என்ற வெற்றியிலக்கை இலங்கை அடைந்தமை அணியின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையில் இலங்கை அணி இதுவரையில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளது. அதிலும், இறுதியாக நடைபெற்ற காலி டெஸ்ட் போட்டியில், அணி என்ற ரீதியில் அனைத்து வீரர்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருந்தனர்.

குறிப்பாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் என்ற ரீதியில் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோரின் பங்களிப்பு, மத்தியவரிசையில் மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லவின் ஓட்டக்குவிப்பு, அகில தனன்ஜய மற்றும் லசித் எம்புல்தெனி ஆகியோரின் சுழல், கடினமான ஆடுகளமாக இருந்தாலும் லஹிரு குமார மற்றும் சுரங்க லக்மாலின் வேகம், இறுதியாக குசல் பெரேராவின் வேகமான ஓட்டக்குவிப்பு, சகலதுறை வீரராக தனன்ஜய டி சில்வாவின் பங்களிப்பு என முதல் போட்டியில் அனைத்து வீரர்களும் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கியிருந்தனர். 

முதல் போட்டியில் இலங்கை அணி முழுமையாக பிரகாசித்து மிகச்சிறந்த வெற்றியினை பதிவுசெய்திருக்கும் நிலையில், பி.சரா ஓவலில் ஆரம்பமாகவிருக்கும் நாளைய போட்டியிலும் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு: வில்லியம்சன் இல்லை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில்…

இதேவேளை, நியூசிலாந்து அணியை பொருத்தவரை முதல் மோதலில் தோல்வியடைந்திருந்தாலும், கடினமான காலி மைதான ஆடுகளத்தில் இலங்கை அணிக்கு மிகச்சிறந்த சவாலை கொடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 268 என்ற வெற்றியிலக்கானது கடினமானது என்றாலும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் இணைப்பாட்டத்தால் இலங்கை அணி இலக்கினை அடைந்திருந்தது.

குறித்த ஆரம்ப இணைப்பாட்டம் இல்லாவிடின் போட்டியின் முடிவு மாறியிருக்கவும் வாய்ப்பிருந்தது. முதல் போட்டியை பொருத்தவரை நியூசிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான அஜாஸ் பட்டேல் மற்றும் வில் சமர்வில் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதுடன், துடுப்பாட்டத்தில் ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ் மற்றும் பிஜே வெட்லிங் ஆகியோரும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். எனினும், அந்த அணியின் முக்கிய வீரரான கேன் வில்லியம்சன் முதல் போட்டியில் இரட்டை இலக்க ஓட்டங்களை அடையவில்லை.

இவ்வாறான நிலையில் அடுத்தப் போட்டியில் வில்லியம்சன் ஓட்டங்களை குவித்தால் நியூசிலாந்து அணி மேலும் வலுவடையும். அதுமாத்திரமின்றி, நாளை போட்டி நடைபெறவுள்ள பி.சரா ஓவல் மைதானமானது நியூசிலாந்து அணிக்கு சாதகம் கொடுத்த மைதானமாக கடந்த தொடரின் போது அமைந்திருந்தது. 2012ம் ஆண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 167 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. அத்துடன், ட்ரென்ட் போல்ட் மற்றும் டிம் சௌதி ஆகியோர் 19 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இதுபோன்று பி. சரா ஓவல் மைதானத்தில் சிறந்த ஞாபகங்களை கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி நாளைய போட்டியில், சிறப்பாக செயற்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்க எதிர்பார்க்கும்.

இரு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

இரு அணிகளும் 35 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளதுடன், 15 வெற்றிகளை நியூசிலாந்து பெற்றுள்ளதுடன், இலங்கை அணி காலி மைதானத்தில் இறுதியாக பெற்ற வெற்றியுடன் 9 வெற்றிகளை சுவைத்துள்ளது.

அத்துடன், காலி மைதானத்தில்  நியூசிலாந்து அணியின் தோல்விகள் தொடர்வதுடன், பி. சரா ஓவல் மைதானத்தில் விளையாடியுள்ள 2 போட்டிகளில் நியூசிலாந்து ஒரு வெற்றியை பெற்றுள்ளதுடன், இந்த மைதானத்தில் இலங்கை அணியானது நியூசிலாந்தை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

>> இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியில் டில்ருவான் பெரேரா

எதிர்பார்ப்பு வீரர்கள்

திமுத் கருணாரத்ன

முதல் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் சதம் கடந்து இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த திமுத் கருணாரத்ன இந்தப் போட்டியின் எதிர்பார்ப்பு வீரராக உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 9வது சதத்தை பதிவுசெய்த இவர், இதுவரையில் 61 போட்டிகளில் 4,235 ஓட்டங்களை குவித்துள்ளார். 22 அரைச் சதங்களை விளாசியுள்ள இவர், இலங்கை ஆடுகளங்களில் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடிய வீரர். இதனால் நாளைய போட்டியில் அணிக்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரொஸ் டெய்லர்

நியூசிலாந்து அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான ரொஸ் டெய்லர் அந்த அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தும் முக்கிய வீரராக உள்ளார். அதிலும், இந்த மைதானத்தில் (பி. சரா ஓவல்) விளையாடிய இறுதிப் போட்டியில் (2012) முதல் இன்னிங்ஸில் 142 ஓட்டங்களை விளாசிய இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 74 ஓட்டங்களை பெற்றுகொண்டிருந்தார்.

அத்துடன்,  நியூசிலாந்து அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 18 சதங்களுடன் 6,816 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Photos – SL Practice session | NZ Practice session

உத்தேச பதினொருவர்

இலங்கை அணியை பொருத்தவரை, ஐசிசியின் பந்துவீச்சு முறைமை குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள அகில தனன்ஜய, இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அனுபவ சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் டில்ருவான் பெரேரா இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்பார்ப்பு இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார, சுரங்க லக்மால்

நியூசிலாந்து அணியை பொருத்தவரை காலி மைதானத்துக்கு சாதகமாக மேலதிக சுழல் பந்துவீச்சாளராக மிச்சல் சென்ட்னர் இணைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலாக கொலின் டி கிரெண்டோம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு நியூசிலாந்து அணி

டொம் லேத்தம், ஜீட் ராவல், கேன் வில்லியம்சன் (தலைவர்), ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பிஜே வெட்லிங், கொலின் டி கிராண்டோம், டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட், வில் சமர்வில், அஜாஸ் பட்டேல்

மீண்டும் அகிலவின் பந்துவீச்சு முறையற்றது என குற்றச்சாட்டு

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய..

ஆடுகளம் மற்றும் காலநிலை

பி.சரா ஓவல் மைதான ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமான ஆடுகளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், துடுப்பாட்ட வீரர்களுக்கும் ஆடுகளம் சாதகத் தன்மையை கொண்டிருக்கும்.

இதேவேளை காலநிலையை பொருத்தவரை, போட்டி நாட்களில் மழைக்குறுக்கிட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<