இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் கவலை வேண்டாம் – சங்கக்கார உறுதி

422
Sangakkara

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கிரிக்கெட்டை இலங்கை போன்ற நாடுகளில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், எம்.சி.சி கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 

எனவே, இலங்கையில் தற்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இங்கிலாந்து அணியை அடுத்த வருடம் இலங்கைக்கு வந்து விளையாடுமாறும் கோரிக்கை விடுத்தார். 

புதிய ஜேர்ஸியுடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி…

கிரிக்கெட் உலகிற்கு சட்ட விதிமுறைகளை அமுல்படுத்தும் அமைப்பாக விளங்குகின்ற மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் (MCC World Cricket committee) கடந்த 11 ஆம், 12 ஆம் திகதிகளில் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. 

இதன்போது, ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப், இம்முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு, 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கிரிக்கெட்டை இணைத்துக் கொள்ளல், 2028 லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இடம்பெறச் செய்வது மற்றும் ஸ்மார்ட் பந்துகளை சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டது. 

இது இவ்வாறிருக்க, குறித்த கூட்டத்தின் போது இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான சூழல் இருப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கையின் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதில் பாதுகாப்பு சிக்கல் எதுவும் இல்லையென குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு நாட்டிற்கும் ஏனைய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கான உரிமை உண்டு. 

எனவே, 30 வருடகால யுத்தம் இடம்பெற்ற போதும் இலங்கையில் சர்வதேசப் போட்டிகள் எந்தவொரு தடையுமின்றி இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய குமார் சங்கக்கார, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இதுவரை இலங்கை வெற்றிகரமாக பதிலளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கிரிக்கெட்டை இலங்கை போன்ற நாடுகளில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது. ஒரு நாட்டை ஒன்றிணைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு உண்டு. 

எனவே அடுத்த வருடம் இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடினால் அது இலங்கை ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். 

உண்மையில் இலங்கை ஒரு அழகான நாடு. அத்துடன், உலகின் கிரிக்கெட் விளையாடுவதற்கு தலைசிறந்த இடங்களுள் ஒன்றாகும். ஒட்டுமொத்த நாட்டிலும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் தாக்கம் மகத்தானதாக இருக்கும். பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகள் இலங்கைக்கு வந்து விளையாடியிருந்தது என அவர் குறிப்பிட்டார். 

பொதுநலவாய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளின்…

இதனிடையே, இங்கிலாந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, எம்.சி.சி இன் அடுத்த கூட்டத் தொடரை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<