97 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் அடுத்த வாரம் கொழும்பில் ஆரம்பம்

231

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற 97 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்ஹரா நகரங்களில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான முக்கிய போட்டித் தொடராக இது அமையவுள்ளது.

உள்ளூர் மெய்வல்லுனர் போட்டித் தொடர்கள் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

கட்டாரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர்…

இதன்படி, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 600 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இதில் 486 வீரர்களும், 147 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களைப் போல இம்முறை போட்டித் தொடரில் பெண்களின் பங்குபற்றல் குறைவாக காணப்பட்டாலும், கண்டி மாவட்டத்திலிருந்து அதிகளவான போட்டியாளர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் ஊடாக இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற பாடசாலை வீரர்களும் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான மரதன் மற்றும் அரை மரதன் ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் தேசிய சாதனைகளுக்கு சொந்தக்காரியான ஹிருனி விஜேரத்ன, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் நோக்கில் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பை ஏற்கனவே பெற்றுக்கொண்ட ஹிருனி விஜேரத்ன, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த 2 தசாப்தங்களாக வசித்து வரும் ஹிருனி விஜேரத்ன, 2017 இல் முதல் தடவையாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றியிருந்தார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 97 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (09) மாலை கொழும்பில் இடம்பெற்றது. 

>>Photos : 97th National Athletics Championship – Press Conference<<

இதில் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் உப தலைவரும், தொழில்நுட்ப குழுவின் தலைவருமான ஜி.எல்.எஸ் பெரேரா கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், 

”எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டித் தொடராகவும் இது அமையவுள்ளதால், அனைத்து தேசிய மட்ட மெய்வல்லுனர் வீரர்களும் தமது தகுதியை நிரூபிப்பது அவசியம். 

அதேபோன்று, இந்தத் தொடரில் பங்கேற்கின்ற வீரர்களுக்கு மாத்திரமே தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்படும். அதிலும், ஒரு போட்டிக்கு ஒரு வீரர் மாத்திரம் தெரிவு செய்யப்படவுள்ளதால் மிகவும் போட்டித் தன்மை கொண்டதாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

எனினும், அவுஸ்திரேலியாவில் பயிற்சி பெற்றுவருகின்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் தேசிய சம்பியன் மஞ்சுள குமார இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் எனவும், தேசிய மட்டத்தில் முன்னணி வீரர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்ற ஹிமாஷ ஏஷான், அருண தர்ஷன, சுமேத ரணசிங்க, விதூஷா லக்ஷானி, டில்ஷி குமாரசிங்க, கயந்திகா அபேரதன், நிலானி ரத்னாயக்க, நிமாலி லியனாரச்சி உள்ளிட்ட வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை மெய்வல்லுனர் அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் முதலிகே இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,

”இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியாக அமையவுள்ளது. எனவே தேசிய மட்டத்தில் உள்ள அனைத்து வீரர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி யார் போவார்கள் என்பது பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது. எனினும், தங்கப் பதக்கங்களை வெல்லக்கூடிய ஒரு அணியை அழைத்துச் செல்வதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். 

தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர்களுக்கு கட்டுப்பாடு

நேபாளத்தில் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள தெற்காசிய…

அதுமாத்திரமின்றி, ஒரு அணியாக, ஒரு நாடாக விளையாடி நாட்டுக்கு பெருமையைத் தேடிக் கொடுக்கின்ற வீரர்களை நாங்கள் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றச் செய்வோம்” என அவர் தெரிவித்தார். 

இதேநேரம், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா நடைபெறுவதற்கு ஒரு மாதங்களுக்கு முன் நேபாளத்தில் உள்ள காலநிலைக்கு தயாராகும் நோக்கில் இலங்கை மெய்வல்லுனர் வீரர்களை இந்தியா அல்லது பூட்டானுக்கு அழைத்துச் சென்று விசேட பயிற்சிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது. 

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<