கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, கிரிஸ் வோர்க்ஸ் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோரின் அபார பந்துவீச்சின் உதவியுடன் 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்திருந்த 182 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கியிருந்த அயர்லாந்து அணி வெறும் 38 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்விக்கு முகங்கொடுத்தது.
“எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர” – மாலிங்க பெருமிதம்!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல்….
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தாலும், முற்றுமுழுதாக பந்துவீச்சில் அசத்தியிருந்த அயர்லாந்து அணி முதல் நாளை தங்கள் வசப்படுத்தியது. அபாரமாக பந்துவீசிய அயர்லாந்து அணி, இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 85 ஓட்டங்களுக்கு சுருட்டியிருந்தது.
அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்டிருந்த டிம் மர்டக் 5 விக்கெட்டுகளையும், மார்க் அடைர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, இங்கிலாந்து அணிசார்பில் அதிகபட்சமாக ஜோ டென்லி 23 ஓட்டங்களை பெற்றிருந்தார். இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் மதியபோசண இடைவேளைக்கு முன்னரே சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
இங்கிலாந்து அணியை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய உத்வேகத்துடன், துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து அணி முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு மற்றும் எண்டி போல்பேர்னியின் (55) அரைச்சதம் அடங்கலாக 207 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட், ஒல்லி ஸ்டோன் மற்றும் சேம் கரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர், 122 ஓட்டங்கள் பின்னடைவில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி முதல் நாளில் ஆரம்பித்த ஒரு ஓவர் துடுப்பெடுத்தாடி ஓட்டங்கள் இன்றி, இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. இதில், நைட் வொட்ச்மேனாக இங்கிலாந்து அணியால் களமிறக்கப்பட்டிருந்த ஜெக் லீச் மற்றும் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜேசன் ரோய் ஆகியோர் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஜெக் லீச் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோர் தங்களுடைய கன்னி அரைசச்தத்தை பதிவுசெய்ததுடன், சிறந்த ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டனர். ஜேசன் ரோய் 72 ஓட்டங்களையும், ஜெக் லீச் 92 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, இவர்களுக்கு அடுத்தபடியாக சேம் கரன் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மேற்குறித்த துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பால் இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸில் 303 ஓட்டங்களை குவித்து, அயர்லாந்து அணிக்கு 184 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் மார்க் அடைர் மற்றும் ஸ்டுவர்ட் தொம்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியில் 2 நாட்கள் முழுமையாக மீதமிருக்க வெறும் 184 ஓட்டங்களை மாத்திரம் வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய அயர்லாந்து அணி, ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் க்ரிஸ் வோர்க்ஸ் ஆகியோரின் வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் வெறும் 38 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட 7ஆவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. அத்துடன், இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் க்ரிஸ் வோர்க்ஸ் ஆகியோர் மாத்திரமே ஓவர்கள் வீசியதுடன், இவருவரும் முறையே 4 மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
“உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களை ஈர்த்தவர் மாலிங்க” – தமிம்
இலங்கை அணியின் அனுபவ வேகப்….
இதேவேளை, இங்கிலாந்து அணி பெற்றுள்ள இந்த வெற்றியானது அவர்களின் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றியாகவும், ஒரு வரலாற்று வெற்றியாகவும் பதிவாகியது. இங்கிலாந்து அணி 1907ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 76 ஓட்டங்களை பெற்றிருந்தும் வெற்றியை பெற்றிருந்தது. அதற்கு பின்னர், தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 85 ஓட்டங்களை மாத்திரம் முதல் இன்னிங்ஸில் பெற்று, வெற்றியை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்
இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 85 – ஜோ டென்லி 23, டிம் மர்டக் 5/15, மார்க் அடைர் 32/3
அயர்லாந்து (முதல் இன்னிங்ஸ்) – 207 – எண்டி போல்பேர்னி 55, போல் ஸ்ரெலிங் 36, ஒல்லி ஸ்டோன் 29/3, செம் கரன் 28/3, ஸ்டுவர்ட் புரோட் 60/3
இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 303 – ஜெக் லீச் 92, ஜேசன் ரோய் 72, மார்க் அடைர் 66/3, ஸ்டுவர்ட் தொம்சன் 44/3
அயர்லாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 38 – ஜேம்ஸ் மெக்கொலம் 11, க்ரிஸ் வோர்க்ஸ் 17/6, ஸ்டுவர்ட் புரோட் 19/4
முடிவு – இங்கிலாந்து அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<