இலங்கை தொடரில் அணித் தலைவரை இழந்தது பங்களாதேஷ்

556

பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக இலங்கை அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (19) பங்களாதேஷ் அணி, இலங்கை தொடருக்கு முன்னதான இறுதி பயிற்சியினை தங்களுடைய நாட்டில் மேற்கொண்டிருந்த நிலையில், மொர்டஷாவின் தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு`உபாதை ஏற்பட்டுள்ளதாக பங்களாதேஷ் அணி நிர்வாகம் சுட்டிக்காட்டியது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக……….

தற்போது மஷ்ரபீ மொர்டஷா அணியிலிருந்து வெளியேறியுள்ளதால், அவருக்கு பதிலாக அணியின் தலைவராக அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பங்களாதேஷ் அணியின் தலைவராக இவர் செயற்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மொர்டஷாவின் உபாதை குறித்து அந்த அணியின் உயர் மருத்துவ அதிகாரி குறிப்பிடுகையில், “மஷ்ரபீ மொர்டஷாவின் உபாதை தரம் ஒன்று உபாதை என்பதுடன், குறித்த உபாதையானது மீண்டும் மீண்டும் தோன்றுவதாக இருக்கிறது. அதனால், அவரால் நான்கு வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது” என்றார்.

மஷ்ரபீ மொர்டஷா உபாதைக்கு முகங்கொடுத்துள்ள அதேவேளை, உலகக் கிண்ணத் தொடரில் சகலதுறையிலும் பிரகாசித்திருந்த மொஹமட் சய்புதீனின் முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், அவரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடமாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், குறித்த இருவருக்கும் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் டஷ்கின் அஹமட் மற்றும் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான பர்ஹட் ரெஷா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இதில், பர்ஹட் ரெஷா 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

மேற்குறித்த உபாதைகளின் அடிப்படையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்களாதேஷ் அணியின் நான்கு முதற்தர வீரர்கள் உபாதை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியுள்ளனர்.  மொர்டஷா மற்றும் சய்புதீன் உபாதை காரணமாக வெளியேறியுள்ளதுடன், சகிப் அல் ஹசன் மற்றும் லிடன் டாஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.

மூன்று மாற்றங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய………….

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பங்களாதேஷ் குழாம்

தமிம் இக்பால் (அணித்தலைவர்), சௌமியா சர்கார், அனாமுல் ஹக், மொஹமட் மிதுன், முஸ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லாஹ் ரியாத், மொஸாதிக் ஹுஸைன், சபீர் ரஹ்மான், மெஹ்தி ஹசன், தைஜூல் இஸ்லாம், ரூபல் ஹூஸைன், டஸ்கின் அஹமட், முஸ்தபீசுர் ரஹ்மான், பர்ஹட் ரெஷா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<