ரெட்புல் பல்கலைக்கழக கிரிக்கெட் தொடர் இவ்வாரம் ஆரம்பம்

210

இலங்கையில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடாத்தப்படும் 2019ஆம் ஆண்டிற்கான ரெட்புல் பல்கலைக்கழக டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை கொழும்பு பி.ஆர்.சி. (BRC) மற்றும் கொழும்பு கோல்ட்ஸ் கழக கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன. 

ரெட்புல் கிரிக்கெட் தொடரின் சம்பியனாக வாகை சூடிய பி.எம்.எஸ் கல்வி நிலையம்

ரெட்புல் நிறுவனத்தின் அனுசரணையோடு……

எட்டாவது தடவையாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் 26 அணிகள் பங்குபற்றவுள்ளன. இதில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணி, இவ்வருட இறுதியில் டுபாயில் நடைபெறவுள்ள ரெட்புல் பல்கலைக்கழக உலகத் தொடரில் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும்.  

இம்முறை போட்டிகள் ரொபின் ரவுண்ட் முறையில் நடைபெறவுள்ளதுடன், இதற்கான அணிகளைத் தேர்வு செய்வதற்கான குலுக்கல், கொழும்பு பி.ஆர்.சி கழகத்தில் நேற்று (17) நடைபெற்றது.

கடந்த வருடம் நடைபெற்ற ரெட்புல் பல்கலைக்கழக உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட் தொடர்களில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையின் வணிக முகாமைத்துவ கல்லூரி அணி (BMC) இம்முறை போட்டிகளில் பங்குபற்றாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த அணி 2016ஆம் ஆண்டு ரெட்புல் பல்கலைக்கழக உலகத் தொடரின் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதுடன், 2017இல் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Photo Album  : Red Bull Campus Cricket 2019 | Match Draw

இதேநேரம், இம்முறை போட்டித் தொடரில் முதல்தடவையாக பல உள்ளூர் பல்கலைக்கழங்கங்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது

இதேவேளை, ரெட்புல் பல்கலைக்கழக தொடரின் பணிப்பாளராக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ப்ரெண்டன் குருப்பு நியமிக்கப்பட்டுள்ளதுடன், போட்டி நடுவர்களாக ரென்மோர் மார்டினஸ் மற்றும் லிண்டன் ஹென்னிபல் ஆகியோர் செயற்படவுள்ளனர்

இதேநேரம், ரெட்புல் பல்கலைக்கழக உள்ளூர் தொடரின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ப்ரெண்டன் குருப்பு கருத்து வெளியிடுகையில், நாங்கள் இந்தப் போட்டித் தொடரை வருடாந்தம் ஏற்பாடு செய்கின்றோம். இதனால் ஒவ்வொரு வருடமும் போட்டித் தன்மை மிக்க தொடராகவே இது இடம்பெற்று வருகின்றது. எனவே, இவ்வருடமும் ஒரு அற்புதமான போட்டியை எம்மால் பார்க்க முடியும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்

இந்தப் போட்டித் தொடரின் மூலம் ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு தங்கள் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், ரெட்புல் பல்கலைக்கழக சர்வதேசப் போட்டித் தொடரில் தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமான வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கின்றது.  

Photo Album  : Red Bull Campus Cricket 2019 | Match Draw

மேலும், ரெட்புல்லினால் நடாத்தப்படுகின்ற இந்தத் தொடரானது கழக அணிகளுக்கும், பாடசாலை வீரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்து வருகின்றது

உண்மையில், ரெட்புல் பல்கலைக்கழக கிரிக்கெட் தொடரானது இளம் மற்றும் திறமையான வீரர்களுக்கு தேசிய அணியில் இடம்பெறுவதற்கு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு களமாகவும் மாறியுள்ளது.

இலங்கையின் நிரோஷன் திக்வெல்ல மற்றும் சாமிக்க கருணாரத்ன, இந்தியாவின் கே.எல்.ராகுல், தென்னாபிரிக்காவின் லுங்கி எங்கிடி மற்றும் ஐக்கிய அரபு இராட்சியத்தின் சிராக் சூரி ஆகியோர் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள தற்போதைய நட்சத்திர வீரர்களாகவர்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<