மூன்று மாற்றங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ்

4662

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடராக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இருதரப்பு தொடர் அமைந்திருக்கின்றது. 

இலங்கைக்கு எதிர்வரும் 23ஆம் திகதி குறுகியகால சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. பங்களாதேஷ் அணியின் வருகையானது இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் இலங்கை வரும் முதலாவது சர்வதேச அணியின் வருகையாகும்.

இலங்கை வருகிறது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

இலங்கைக்கு இம்மாத பிற்பகுதியில் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள….

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது கடந்த உலகக் கிண்ண தொடரில் மூன்று வெற்றிகள், ஐந்து தோல்விகள் மற்றும் ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையில் மொத்தமாக ஏழு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாமிடத்தை பிடித்தது. பங்களாதேஷ் அணி ஐந்து போட்டிகளில் தோல்வியுற்றாலும் ஏனைய அணிகளுக்கு சவால் விடுக்கக்கூடிய வகையிலேயே போட்டிகளை நிறைவு செய்திருந்தது.

இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ள குறித்த மூன்று போட்டிகளுக்குமான குழாமினை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (16) வெளியிட்டுள்ளது. 

வெளியிடப்பட்டுள்ள குழாமின் அடிப்படையில் பங்களாதேஷ் அணியின் உலகக் கிண்ண தொடருக்கான குழாமிலிருந்து சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலகக் கிண்ண தொடரின் போது ஒரு சகலதுறை வீரராக தன்னாலான பங்குகளை அணிக்கு வழங்கி 606 ஓட்டங்களையும், 11 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய சகலதுறை வீரராக சாதனை படைத்த சகீப் அல் ஹசனுக்கு இலங்கையுடனான தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

சகலதுறையில் பிரகாசித்து ஐ.சி.சி 2019 உலகக் கிண்ண அணியில் ஒரேயொரு பங்களாதேஷ் அணி வீரராக இடம்பெற்று அணிக்கு பெருமை சேர்த்துள்ள சகீப் அல் ஹசன், முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ளதனாலேயே இவ்வாறு இலங்கை அணியுடனான தொடரிலிருந்து விலகியுள்ளார். 

துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் கலக்கிய பென் ஸ்டோக்ஸ்

12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (14) நிறைவுக்கு வந்திருந்தது..

அதேபோன்று உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணிக்காக மத்திய வரிசையில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸூம் தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை அணியுடனான தொடரிலிருந்து விலகியுள்ளார். 24 வயதுடைய லிட்டன் தாஸ் திருமண பந்தத்தில் இணையுள்ளதன் காரணமாகவே இவ்வாறு விடுமுறையில் சென்றுள்ளார். 

சகீப் மற்றும் லிட்டன் ஆகியோரினுடைய ஓய்வின் காரணமாக புதிய இரண்டு வீரர்கள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். விக்கெட் காப்பு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அனாமுல் ஹக் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 26 வயதுடைய அனாமுல் ஹக் பங்களாதேஷ் அணிக்காக இதுவரையில் 37 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி மூன்று சதங்கள் மற்றும் மூன்று அரைச்சதங்களுடன் 1,038 ஓட்டங்களை குவித்துள்ளார். 

4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் இறுதியாக 2016 செப்டம்பரில் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் தைஜூல் இஸ்லாம், உள்ளூர் தொடர்களில் சிறந்த அடைவுகளை பெற்றதன் காரணமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் சர்வதேச அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

2 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் பங்களாதேஷ் அணியுனுடைய 15 பேர் கொண்ட உலகக்கிண்ண குழாமில் இடம்பெற்று எந்தவிதமான போட்டிகளிலும் விளையாடாத வேகப் பந்துவீச்சாளர் அபூ ஜெயிட் இலங்கை அணியுடனான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஐ.சி.சி யின் 2019 உலகக் கிண்ண அணி வீரர்கள் இவர்கள்தான்

ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (14) நிறைவுக்கு வந்தது. கிரிக்கெட்….

உலகக் கிண்ண அணியிலிருந்து இரு மாற்றங்களின் செய்யப்பட்டு ஒரு வீரர் அணியிலிருந்து நீக்கப்பட்டு இலங்கை அணியுடனான தொடருக்காக 14 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது. அதன் படி அணியின் தலைவராக வேகப்பந்துவீச்சாளர் மஸ்ரபீ மோர்டஸா தொடர்ந்தும் செயற்படவுள்ளார். 

பங்களாதேஷ் அணியின் குழாம்.

மஸ்ரபீ மோர்டஸா (அணித்தலைவர்), தமீம் இக்பால், சௌமியா சர்கார், அனாமுல் ஹக், மொஹமட் மிதுன், முஸ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லாஹ் ரியாத், மொஸாதிக் ஹுஸைன், சபீர் ரஹ்மான், மெஹ்தி ஹசன், தைஜூல் இஸ்லாம், ரூபல் ஹூஸைன், மொஹமட் ஸைபுதீன், முஸ்தபீசுர் ரஹ்மான்

போட்டி அட்டவணை. (அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளன)

  • 26 ஜூலை முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி 
  • 28 ஜூலை இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி 
  • 31 ஜூலை மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி