உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது – முன்னாள் நடுவர்

3127
Image Courtesy - AFP

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் முக்கிய தருணத்தில் நடுவர்கள் தவறான தீர்ப்பை வழங்கிவிட்டதாக பிரபல்யமிக்க முன்னாள் போட்டி நடுவர் சைமன் டோபல் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.

போராட்டத்தின் மத்தியில் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லோர்ட்ஸ்….

இப்போட்டியில் நியூசிலாந்து அணி  வெற்றி இலக்காக நிர்ணயம் செய்த 242 ஓட்டங்களை அடைய இங்கிலாந்து அணி, பதிலுக்கு துடுப்பாடியது. இந்நிலையில், பென்  ஸ்டோக்ஸ் அரைச்சதம் ஒன்றுடன் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக போராடிய வண்ணம் காணப்பட்டார். 

பின்னர் போட்டியின் இறுதி ஓவரின் கடைசி மூன்று பந்துகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன்போது, போட்டியின் இறுதி ஓவரின் நான்காவது பந்தில் வித்தியாசமான முறையில் 6 ஓட்டங்கள் பெறப்பட்டது. 

இறுதி ஓவரின் நான்காவது பந்தாக ட்ரென்ட் போல்டினால் வீசப்பட்ட பந்தை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ், பந்தினை டீப் மிட் விக்கெட் திசையில் அடித்து இரண்டு ஓட்டங்கள் பெற முயன்றார். அப்போது இரண்டாவது ஓட்டம் பெற முயன்ற போது நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் ரன் அவுட் செய்யும் முனைப்போடு பந்தை விக்கெட்டை நோக்கி எறிந்தார். எனினும், ரன் அவுட்டுக்காக வீசப்பட்ட பந்து ஸ்டோக்ஸின் துடுப்பு மட்டையில் தவறுதலாகபட்டு பௌண்டரி எல்லையை தாண்டியது. 

இதனால், கப்டில் வீசிய பந்துக்கு நான்கு ஓட்டங்கள் வழங்கி பென் ஸ்டோக்ஸ் பெற்றுக் கொண்ட இரண்டு ஓட்டங்களுடன் சேர்த்து இறுதி ஓவரின் நான்காவது பந்தில் மொத்தமாக 6 ஓட்டங்களை மைதான நடுவர்கள் வழங்கினர். 

எனினும், இவ்வாறு போட்டி நடுவர்கள் ஆறு ஓட்டங்கள் வழங்கியது தவறு என்றும் இந்த சம்பவத்திற்கு மொத்தம் ஐந்து ஓட்டங்களே இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தை பென் ஸ்டோக்ஸ் அல்லாமல் ஏனைய துடுப்பாட்ட வீரராக களத்தில் இருந்த ஆதில் ரஷித்தே எதிர்த்தாடியிருக்க வேண்டும் எனவும் சைமன் டோபல் தெரிவித்திருக்கின்றார்.  

ஐ.சி.சி. இன் சிறந்த போட்டி நடுவருக்கான விருதினை ஐந்து தடவைகள் வென்றிருக்கும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் டோபல்,  ஆறு ஓட்டங்கள் வழங்கப்பட்டது தவறு என்பதை கிரிக்கெட்டின் விதிமுறைகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) கிரிக்கெட் விதிமுறைகளில் இருந்து சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 



”அவர்களுக்கு (இங்கிலாந்து அணிக்கு) ஐந்து ஓட்டங்களே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆறு (ஓட்டங்கள்) அல்ல.” என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்ட சைமன் டோபல் இது சரியற்ற தீர்மானத்தினால் ஏற்பட்ட தெளிவான தவறு எனவும் தெரிவித்திருந்தார். 

இந்த வித்தியாசமான சம்பவத்திற்கு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடுவர்களாக இருந்த குமார் தர்மசேன மற்றும் மரைஸ் எரஸ்மஸ் ஆகியோரே 6 ஓட்டங்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை இவ்வாறு 6 ஓட்டங்கள் வழங்கப்பட்ட காரணத்தினால், இறுதி ஓவரின் இறுதி இரண்டு பந்துகளுக்கும் 3 ஓட்டங்கள் தேவைப்பட பென் ஸ்டோக்ஸ் இரண்டு பந்துகளிலும் இரண்டு ஓட்டங்கள் பெற்று உலகக் கிண்ண இறுதிப் போட்டியை சமநிலை செய்திருந்தார். 

பின்னர் சுபர் ஓவர் முறையில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கிரிக்கெட் உலகக் கிண்ண சம்பியன்களாக முதல் தடவையாக நாமம் சூடியது. 

இதேநேரம் பென் ஸ்டோக்ஸ் தனது துடுப்பு மட்டையில் பந்து தவறுதலாக பட்டு பௌண்டரி எல்லைக் கோட்டினை தாண்டிய சம்பவத்திற்கு நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சனிடம் தனது வாழ்நாள் பூராகவும் மன்னிப்பு கேட்பேன் என உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<