உலகக் கிண்ணத்தை உலுக்கிய ஆர்ச்சரின் டுவீட்டுகள்

9639

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் கடந்த சில மாதங்களாக அதிகமாக பேசப்பட்ட ஒரு பெயராக இருந்தது.

மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாகக் கொண்ட ஆர்ச்சர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இணைந்து உலகக் கிண்ண குழாத்தில் இடம்பிடித்தமை மற்றும் மிரட்டலாக அமையும் அவரது வேகப் பந்துவீச்சு என்பவற்றை கொண்டு பிரபலமாகியிருந்தார். இவ்வாறு தனது திறமைகள் மூலமாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியும் கொண்டிருக்கிறார்.

சரித்திரத்தை மாற்றிய இங்கிலாந்தின் அடுத்த இலக்கு நியூசிலாந்து

அவுஸ்திரேலியாவை சிறந்த முறையில் ……

இவ்வாறு பிரபலமாகி இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இடம்பிடித்திருக்கும் ஆர்ச்சர், இப்போது சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் மிகவும் பிரபலமாக மாறியுள்ளார். நாம் ஒவ்வொருவரும் உலகக் கிண்ணத் தொடரின் முடிவு எப்படி இருக்கும்? என சிந்தித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் இணையவாசிகள் ஜொப்ரா ஆர்ச்சரின் டுவிட்டர் பக்கத்தில் பதில்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். 

ஆர்ச்சரின் டுவிட்டர் பக்கத்தில் அப்படி என்ன இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். ஆனால் “இருக்கு இங்க பிரச்சினை இருக்கு” என்ற சந்திரமுகி திரைப்படத்தில் வரும் வைரலான வசனத்தின் படி, ஆர்ச்சரின் டுவிட்டர் பக்கத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. 

அப்படி என்னதான் ஜொப்ரா ஆர்ச்சரின் டுவிட்டர் பக்கத்தில் இருக்கிறது என்பதை தேடிப்பார்த்த போது எமக்கும் ஆச்சரியங்கள் காத்திருக்க தவறவில்லை. ஆர்ச்சரின் டுவிட்டர் பக்கத்தில் 2013 தொடக்கம் 2016ம் ஆண்டுகள் வரை வெளிவந்திருக்கும் பதிவுகள் இவ்வருட உலகக் கிண்ணப் போட்டிகளை மிக துள்ளியமாக கணித்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இல்லையென்றாலும் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், இந்த உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்றிருக்கும் சில சம்பவங்களை இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னரே ஜொப்ரா ஆர்ச்சர் சரியாக பதிவிட்டுள்ளார். அப்படி ஆர்ச்சர் பதிவிட்டுள்ள சில டுவிட்டர் பதிவுகளை பார்க்கலாம்

  • இந்த உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சகலதுறையில் பிரகாசித்திருந்தார். பென் ஸ்டோக்ஸ் சகலதுறை பிரகாசிப்புடன் உலகக் கிண்ணத்தை ஆரம்பிப்பார் என்பதை ஆர்ச்சர் அன்றே பதிவிட்டுள்ளார்.

  • அன்ரூ ரசல் 140 கிலோமீற்றர் வேகத்துடன் பந்துவீசுவார் எனவும், ஆனால் அவருக்கு உடற்தகுதி பிரச்சினை வரும் என்பதை கூறிய ஆர்ச்சர்

  • உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்கா தடுமாறும் என்பதுடன், வில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்ப முயற்சி செய்வார் என்பதும் ஆர்ச்சருக்கு தெரிந்திருக்கிறது.

  • இந்த உலகக் கிண்ணத்தில் மிக முக்கிய இரண்டு விடயங்கள் பந்து தாக்கினாலும் பெய்ல்ஸ் (Bails) விழத்தவறுவது மற்றும் மழை. இவ்விரண்டையும் கணித்த ஆர்ச்சர்.

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 17 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார். மோர்கனின் குறித்த துடுப்பாட்டம் ஆர்ச்சரை ஈர்த்திருக்கிறது.

  • பங்களாதேஷ் அணியின் லிடன் டாஸ் அவரது முதல் உலகக் கிண்ண போட்டியில் (94* எதிர் மேற்கிந்திய தீவுகள்) பிரகாசிப்பார் எனவும், கார்லோஸ் ப்ராத்வைட்டின் அதிரடியையும் (101 எதிர் நியூசிலாந்து) அன்றே கூறியிருக்கிறார் ஆர்ச்சர்.

  • இப்படி முக்கியமான சில சம்பவங்களை கூறியிருந்த ஆர்ச்சர் இங்கிலாந்து அணி, இலங்கை அணியிடம் தோல்வியடையும் என்பதையும், மாலிங்க அபாரமாக பந்துவீசுவார் என்தையும் குறிப்பிட தவறவில்லை.

  • இலங்கை அணி தொடர்பாக மாத்திரமின்றி முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வீழும் என்பதையும், நியூசிலாந்து அணி முன்னேறும் என்பதையும் ஆர்ச்சர் கணத்திருக்கிறார்.

  • முதல் அரையிறுதிப் போட்டியை மாத்திரமின்றி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டி தொடர்பிலும், அலெக்ஸ் கெரியின் மீது பந்து தாக்கியது தொடர்பிலும் ஆர்ச்சர் கூறியிருக்கிறார்.

  • அதேநேரம் இங்கிலாந்து அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு 2019ம் ஆண்டு தகுதிபெறும் என்பதையும், லோர்ட்ஸ் மைதானத்தில் போட்டியிடும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இந்த உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற ஒவ்வொரு விடயங்களையும் ஆர்ச்சர் டுவிட்டர் பதிவுகளாக மேற்கொண்டிருந்தார். இவ்வருடம் நடைபெற்று வரும் உலகக் கிண்ணம் தொடர்பில் ஆர்ச்சர் எவ்வாறு பதிவுகளை மேற்கொண்டார் என்ற சந்தேகம் எம்மிடம் எழத்தவறவில்லை. 

அப்படி ஆராய்ந்த நிலையில், ஜொப்ரா ஆர்ச்சரின் கடந்தகால பதிவுகளை தேடிப்பிடித்த இணையவாசிகள் சிலர் அதனை சரியான இடங்களில் மீண்டும் பதிவுசெய்து ட்ரெண்டாக மாற்றியுள்ளனர் என்பது தெரியவந்தது.

எது எவ்வாறாயினும் உலகக் கிண்ணத்தில் இத்தனையையும் கூறிய ஆர்ச்சர் இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பதையும் அவரது டுவிட்டர் பக்கத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் கட்டாயம் கூறியிருப்பார். அந்த பதிலை தேடிய பயணத்தில், இணையவாசிகளுடன் நானும் இணைந்திருக்கிறேன். ஆர்ச்சரின் பதிலை நீங்கள் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அதனை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த முடிவுக்காக 14ம் திகதிவரை நாம் அனைவரும் காத்திருக்க வேண்டியதில்லை!

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<