உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக ஜொலித்த வீரர்கள்

1815

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யார் என்பதை தீர்மானிக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் 50 ஓவர்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. 

அனைவரது எதிர்பார்ப்புகளுக்கு அமைய இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இம்முறை உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதுடன், இதில் புதன்கிழமை (10) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.  

உலகக் கிண்ணத்தில் அசத்திய மாலிங்க பந்துவீச்சாளர் தரவரிசையில் முன்னேற்றம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள்…….

எனவே, எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (14) லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா அணியை சந்திக்கவுள்ளது

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகின்ற 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 3 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் 2 முடிவுகள் எட்டப்படாத போட்டிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி 6ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தது.

அத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் ஒருநாள் தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் பெற்றுக்கொண்ட 3 வெற்றிகளுடன் ஒரு இடம் முன்னேறி 7ஆவது இடத்தை நோக்கி முன்னேற்றம் கண்டது

இதேநேரம், இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் லீக் சுற்றுவரை பிரகாசித்த வீரர்களை மையமாக கொண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீரர்களின் புதிய தரவரிசையை அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரசையில் அஞ்செலோ மெதிவ்ஸ் 2 இடங்கள் முன்னேறி 34ஆவது இடத்தையும், அவிஷ் பெர்னாண்டோ 110 இடங்கள் முன்னேறி 85ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்

அத்துடன், பந்துவீச்சாளர்களில் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லசித் மாலிங்க, 11 இடங்கள் முன்னேற்றம் கண்டு 34ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.   

எனவே, இம்முறை உலகக் கிண்ணத்தில் ஐந்து வீரர்கள் மாத்திரமே தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.  

அதிக ஓட்டங்கள்

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக குசல் ஜனித் பெரேரா இடம்பிடித்துள்ளார். 7 லீக் போட்டிகளில் விளையாடிய அவர், 3 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 273 ஓட்டங்களைக் குவித்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக அவர் பெற்றுக்கொண்டார்.   

இம்முறை உலகக் கிண்ணத்தில் 7 லீக் போட்டிகளில் விளையாடிய அஞ்செலோ மெதிவ்ஸ் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உள்ளடங்கலாக 244 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.  

இதேநேரம், 2 அரைச் சதங்களுடன் 222 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 3ஆவது இடத்தையும், 4 போட்டிகளில் மாத்திரம் விளையாடி ஒரு சதத்துடன் 203 ஓட்டங்களைக் குவித்த அவிஷ் பெர்னாண்டோ 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி பங்கேற்ற அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடிய குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் இசுரு உதான ஆகிய வீரர்கள் முறையே 143, 108, 45 ஓட்டங்களைப் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.  

பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்கிறார் ஹதுருசிங்க

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட்…..

இதில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகிய இருவரும் முறையே 46, 29 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.   

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணியின் அனுபவமிக்க சகலதுறை வீரரான திசர பெரோ, 6 போட்டிகளில் விளையாடி 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.  

இரண்டு சதங்கள்

நடப்பு உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சார்பாக இரண்டு வீரர்கள் சதம் பெற்றிருந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் 21 வயதுடைய வளர்ந்துவரும் வீரர் அவிஷ்க பெர்ணான்டோ கன்னி சதமடித்து அசத்தியிருந்தார்

மேலும், இந்திய அணியுடன் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் சதமடித்து (113 ஓட்டங்கள்) ஒருநாள் போட்டிகளில் தனது 3ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்

ஏழு அரைச் சதங்கள்

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி 7 அரைச் சதங்களைக் குவித்தது. இதில் 3 அரைச் சதங்களை குசல் ஜனித் பெரேராவும், 2 அரைச் சதங்களை திமுத் கருணாரத்னவும் பெற்றுக் கொண்டனர்

இதேநேரம், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் தலா ஒவ்வொரு அரைச் சதங்களைக் குவித்தனர்.   

டக்அவுட் ஆன வீரர்கள் 

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் நுவன் பிரதீப் ஆகிய இருவரும் ஓட்டங்கள் எதையும் (டக் அவுட்) பெற்றுக் கொள்ளாமல் ஆட்டமிழந்தனர். குறித்த இரண்டு வீரர்களும் 2 போட்டிகளில் இவ்வாறு டக்அவுட் ஆகியிருந்தமை சிறப்பம்சமாகும்

அதிகபட்ச இணைப்பாட்டம்

இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன ஜோடி 5ஆவது விக்கெட்டுக்காக 124 ஓட்டங்களைக் குவித்தனர். இதுதான் இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட அதிகபட்ச இணைப்பாட்டமாகும்.   

இதனையடுத்து அவுஸ்திரேலியாவுடனான லீக் ஆட்டத்தில் திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தனர். இதே ஜோடி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடனான லீக் ஆட்டங்களில் முறையே 93, 92 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

மாலிங்கவின் 13 விக்கெட்டுக்கள் 

தனது கடைசி உலகக் கிண்ணப் தொடரில் விளையாடிய இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, 7 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக இடம்பிடித்தார்.  

இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதேநேரம்,, 7 போட்டிகளில் விளையாடிய இசுரு உதான 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 2ஆவது இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடி நுவன் பிரதீப் 5 விக்கெட்டுகளை எடுத்து 3ஆவது இடத்திலும் உள்ளனர்

பெதும் நிஸ்ஸங்கவின் அதிரடியில் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு வெற்றி

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும்…..

அத்துடன், சுழல் பந்தில் இலங்கை அணிக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்த தனன்ஜய டி சில்வா 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

சகலதுறை வீரராக இடம்பெற்ற திசர பெரேரா, 6 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.  

சிறந்த பந்துவீச்சு

ஆப்கானிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நுவன் பிரதீப், இலங்கை அணிக்காக அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுமதியைப் பெற்றுக்கொண்ட வீரராக மாறினார்

இந்த வரிசையில் லசித் மாலிங்க 4 விக்கெட்டுகளையும், தனன்ஜய டி சில்வா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்

தவறவிடப்பட்ட பிடியெடுப்பு

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் களத்தடுப்பு மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. குறைந்தபட்சம் 5 பிடியெடுப்புகளை இலங்கை அணி வீரர்கள் தவறவிட்டனர். இதில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் குசல் மெண்டிஸும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் திசர பெரேராவும் முக்கிய பிடியெடுப்புகளைத் தவறவிட்டிருந்தனர்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<