“குசல் மெண்டிஸ் திறமையான துடுப்பாட்ட வீரர்” – டி மெல்

1879

உலகக் கிண்ணத்தில் விளையாடிய இலங்கை அணியில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட விடயம் அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு. ஆரம்ப போட்டிகளில் இலங்கை அணியின் தோல்விகளுக்கு மத்தியவரிசை வீரர்களின் கவனயீனமற்ற துடுப்பாட்டங்கள் முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

எனினும், இறுதியாக நடைபெற்ற போட்டிகளில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் முன்வந்து தங்களது பங்களிப்பை வழங்கிய நிலையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெறக்கூடியதாக இருந்தது.

ஆரம்ப போட்டிகளில் அவிஷ்க ஏன் இணைக்கப்படவில்லை? – பதில் கூறும் டி மெல்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிய…

இவ்வாறு விமர்சிக்கப்பட்ட மத்தியவரிசை வீரர்களில் அதிகம் பேசப்பட்ட ஒரு வீரர் குசல் மெண்டிஸ். இவர், ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்த போதிலும், அதனை பெரிய ஓட்ட எண்ணிக்கையை நோக்கி கொண்டு செல்வதற்கு தவறியிருந்தார். இதனால், குசல் மெண்டிஸை அணியில் வைத்திருப்பதற்கான தேவை குறித்து அதிகமான விமர்சனங்கள் எழுந்திருந்ததன. 

ஆனால், குசல் மெண்டிஸ் திறமை வாய்ந்த வீரர் எனவும், எதிர்காலத்தில் சிறந்த வீரராக உருவெடுப்பதற்காக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இலங்கை அணியின் முகாமையாளரும், தேர்வுக்குழு தலைவருமான அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளார்.

“குசல் மெண்டிஸை பார்க்கும் போது, அவருக்கு வயது 23. டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களை பெற்றுள்ளார். தேர்வுக்குழு தலைவர் மற்றும் முன்னாள் வீரர் என்ற ரீதியில் மெண்டிஸ் நல்ல திறமையான வீரர் என்பதை பார்க்க முடிகிறது. உலகக் கிண்ணத்தில் அவர் நிறைய போட்டிகளில் ஆரம்பத்தை பெற்றிருந்தார். அதேபோன்று அவர் அதிகமான தடவைகள் துரதிஷ்டசமான முறையிலேயே ஆட்டமிழந்திருந்தார்” 

Photos: Post #CWC19 Press Conference

குறிப்பாக, குசல் மெண்டிஸ் ஆரம்ப போட்டிகளில் ஓட்டங்களை பெறாத போதும், இலங்கை அணி வெற்றிபெற்ற இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஓட்டங்களை பெற்று அணியின் துடுப்பாட்டத்துக்கு பங்களிப்பு வழங்கியிருந்தார். அதேநேரம், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் குசல் மெண்டிஸ், மிச்சல் ஸ்டார்க்கின் வேகப் பந்தினை எதிர்கொண்ட விதம் பாராட்டப்பட்டிருந்தது. இவ்வாறு இருக்கையில், குசல் மெண்டிஸிற்கு மேலும் வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்பதை அசந்த டி மெல் வலியுறுத்தியுள்ளார்.

“தேர்வுக்குழு என்ற ரீதியில் குசல் மெண்டிஸ் போன்ற திறமையுள்ள வீரர்களை உடனடியாக அணியிலிருந்து வெளியேற்றுவது அணிக்கு சிறந்த விடயம் கிடையாது. திறமையுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்கள் மிகச்சிறந்த வீரர்களாக உருவாகுவதற்கு வாய்ப்பினை வழங்க வேண்டும். அதுமாத்திரமின்றி, எமது வீரர்களிடம் திறமையுள்ளது. உள ரீதியில் அவர்களை தயார் செய்து சிறந்த வீரர்களாக உருவாக்க வேண்டும்” என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<