இலங்கையின் வலைப்பந்து நாமத்தை சர்வதேசம் வரை கொண்டு செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர், ஆசியாவின் உயரமான வலைப்பந்து வீராங்கனை (208CM) என்ற பெருமைக்குரிய யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண்மணி தர்ஜினி சிவலிங்கம்.
சாதாரண பெண்களுக்கு மத்தியில், தனது அசாதாரணமான உயரத்தினைக் கண்டு மனம் உடைத்திருந்த தர்ஜினி, இன்று அதே உயரத்தின் மூலமாக சர்வதேசத்தால் பேசப்படும் ஒரு வீராங்கனையாக மாறியுள்ளமையானது அவரது முயற்சியையும், உழைப்பையும், தியாகங்களையும் எமது கண்முன் கொண்டுவந்து நிற்க வைக்கிறது.
உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட குழாத்தில் தர்ஜினி, எழிலேந்தினி உள்ளடக்கம்
இங்கிலாந்தின் லிவர்பூலில் எதிர்வரும் ……..
நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தின் மிகப்பெரிய குறையாக இருந்த விடயம் விளையாட்டுத்துறையில் எமது சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை, திறமைகள் மறைக்கப்படுகின்றன என்பதாகும். எனினும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் நாம் யார்? என்பதை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டியது எம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும். இவ்வாறு தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு, தனியாளாக போராடி வென்ற தர்ஜினிக்கு வாழ்த்துக்களை கூறுவதில் நாம் பெருமை கொள்ளவேண்டும்.யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ் பெண்மணியான தர்ஜினி, தான் இரண்டாம் மொழியை (சிங்களம்) பேசக்கூடிய அணி வீராங்கனைகளுடன் இணைந்து ஒன்றுபட்டு விளையாடி இன்று சாதித்துள்ளார் என்றால் அது சாதாரண விடயம் கிடையாது. அவரது உயரம் அவருக்கு மிகப்பெரிய பலம் என்றாலும், குழுவாக பங்கேற்கும் விளையாட்டு என்ற ரீதியில் சக வீராங்கனைகளின் உதவி அவருக்கு தேவை. அந்த வகையில் சகோதர மொழிபேசும் வீராங்கனைகள் தர்ஜினிக்கு வழங்கிய பங்களிப்பும் அளப்பரியது.
“தேசிய அணிக்குள் வந்துவிட்டதால் இலகுவாக முன்னேறிவிடலாம், எந்த பிரச்சினையும் இருக்காது, சாவால்கள் இருக்காது” என பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் தேசிய அணியுடன் இணைந்தும் தர்ஜினிக்கு பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. அரசியல் உள்நோக்கங்கள், வலைப்பந்தாட்ட நிர்வாகத்தில் இருந்த பிரச்சினைகள் என்பன அவரை மூன்று வருட காலங்களுக்கு தேசிய அணியிலிருந்து தூக்கி எறிந்த சந்தர்ப்பங்களும் நிகழ்ந்தேறியுள்ளன. ஆனால் இத்தனை துன்பங்களையும் தாண்டி தர்ஜினி படைத்த சாதனைகள், இலங்கை வலைப்பந்தாட்டத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையாகது.
Photo Album : Sri Lanka Netball Strength & Conditioning Session | 2019 Netball World Cup
கடந்த ஆண்டு சிங்கபூரில் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சம்பியன் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், தொடரின் சிறந்த சூட்டர் (அதிக புள்ளிகள்)என்ற விருதையும் கைப்பற்றியிருந்தார். அத்துடன் உலகின் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனை என்ற விருதை கடந்த 2011ம் ஆண்டு இவர் வென்றிருந்தார். அதேநிலையில், 2009 மற்றும் 2012ம் ஆண்டுகளில் சிறந்த ஆசிய வலைப்பந்தாட்ட வீராங்கனை என்ற விருதினையும் வென்றிருந்தார். குறிப்பிட்ட இந்த விருதுகளை வென்ற முதல் இலங்கை வீராங்கனையும், ஒரே ஒரு இலங்கை வீராங்கனையும் தர்ஜினி என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்வாறு இலங்கை வலைப்பந்தாட்டத்திற்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்த தர்ஜினி சிவலிங்கம் வலைப்பந்தாட்டத்துக்கு எப்படி வந்தார்? வலைப்பந்தாட்டத்தில் அவரது வாழ்க்கை எவ்வாறு மாறியது? அவர் நேசிக்கும் இந்த விளையாட்டில் என்னென்ன இன்னல்களுக்கு முகங்கொடுத்தார்? என்பது பற்றியும் நாம் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
யாழ். மாவட்டத்தின் புன்னாலைக்கட்டுவானில் உள்ள ஈவினை எனும் சிறிய கிராமம் ஒன்றில் பிறந்தவர்தான் தர்ஜினி சிவலிங்கம். தனது ஆரம்பக்கல்வியை ஈவினை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்ற இவர், உயர் கல்வியை வசாவிலன் மத்தியக் கல்லுரியில் கற்று, பட்டப்படிப்பை கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார்.
இவ்வாறு தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்தாலும், இவர் பிறந்ததில் இருந்து அவர் வெறுத்துவந்த ஒரு விடயம் அவரது உயரம். சாதாரண பெண்களை விடவும், இவரின் உயரம் அபரிமிதமாக இருந்தது. இதனால் பொது இடங்களுக்கு செல்லும் போது, பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளார். சாதாரண பெண்ணாக தன்னை அடையாளப்படுத்துவதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் பல. இவ்வாறு தொடர்ந்தும் பல்வேறு சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் முகங்கொடுத்து வந்துள்ளார்.
ஆனால், இவை அனைத்தையும் தாண்டி கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை கற்க ஆரம்பித்த தர்ஜினி, தன்னுடைய வாழ்க்கையில் இப்படியொரு மாற்றம் ஏற்படும் என்பதை ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த மாற்றத்தை ஏற்படுத்திய விடயம் வலைப்பந்து. தனது அபரிமிதமான வளர்ச்சி தன்னுடைய பலவீனம் என்று நினைத்திருந்த இவருக்கு, அதுதான் பலம் என வலைப்பந்து எடுத்துக்காட்டியது.
பல்கலைக்கழகத்தில் கற்கும் போது, வவுனியாவில் நடைபெற்ற திறந்த வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றில் தர்ஜினி பங்கேற்றுள்ளார். இந்த போட்டிக்கு தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் திலக ஜினதாச உள்ளடங்கிய இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனக் குழுவொன்று வருகைத்தந்துள்ளது. இதன்போது தர்ஜினியின் உயரத்தை பார்த்து, அவரை இலங்கை தேசியக் குழாத்துக்கு வருகைத்தருமாறு அழைத்துள்ளனர்.
இதன்பின்னர் தனது பெற்றோரின் அனுமதியுடன் 2004ம் ஆண்டு தேசிய அணியில் இணைவதற்காக கொழும்பு வருகைத்தந்த தர்ஜினிக்கு, அங்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. சிறிய கிரமமொன்றில் பிறந்து, தமிழ் சமூகத்துக்கு மத்தியில் வளர்ந்த அவருக்கு கொழும்பின் கலாச்சாரம் சற்று புதிதாக இருந்தது. வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் அணியும் ஆடையை அணிந்துக்கொள்வதற்குக்கூட தர்ஜினியின் மனம் இடம்கொடுக்கவில்லை. அத்தோடு தங்குமிடம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு வருகைத் தரும் பெண்கள் முகங்கொடுக்கக் கூடிய ஏனைய பிரச்சினைகளும் தர்ஜினியை விட்டுவைக்கவில்லை.
அதுமாத்திரமல்லாமல் தேசிய அணியில் இணைந்துவிட்டாலும், தனது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளவதற்கு மொழி அவசியம் என்பதை தர்ஜினி நன்றாக உணர்ந்திருந்தார். அணியுடன் இணையும் போது சகோதர மொழியான சிங்கள மொழியை அவர் கொஞ்சமும் அறிந்து வைத்திருக்கவில்லை. அணி என்ற ரீதியில் அனைவருடனும் இணைந்து செயற்படுவதற்கு மொழி பிரதான காரணமாகும். மொழிப் பிரச்சினையால் நீண்ட நாள் கஷ்டப்பட்டுவந்த இவர், தனது இலட்சியத்தை நோக்கிய பயணத்துக்காக சிங்கள மொழியையும் கற்றுக்கொண்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமைகளையும், தகமைகளையும் வளர்த்துக்கொண்ட தர்ஜினி, 2005ம் ஆண்டு ஆசிய மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியை பிரதிநிதித்துப் படுத்தி தனது முதலாவது சர்வதேச தொடரில் விளையாடினார். இந்த தொடரில் இலங்கை அணி மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது. இதன் பின்னர் 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் சிங்கபூரில் நடைபெற்ற நேஷன் கிண்ணத் தொடரில் விளையாடினார்.
உலகக் கிண்ணத்திற்கான தேசிய வலைப்பந்து அணிக்கு எப்படியான உதவிகள் கிடைக்கின்றது?
ஆசிய சம்பியன்களாக திகழும் இலங்கையின் தேசிய ……………
பின்னர் 2009ம் ஆண்டு தன்னுடைய இரண்டாவது ஆசிய மகளிர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் தர்ஜினி பங்கேற்றதுடன், தொடரில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அத்துடன் அந்த ஆண்டுக்கான அதிசிறந்த ஆசிய சூட்டர் (Best Asia Shooter award) என்ற முதலாவது சர்வதேச விருதினை வென்றார். இதன் பின்னர் 2012ம் ஆண்டும் இந்த விருதை வென்ற இவர், 2011ம் ஆண்டு உலகின் மிகச்சிறந்த சூட்டர் (World’s best shooter award) என்ற அதிசிறந்த சர்வதேச விருதை வென்றார். இதனையடுத்து 2012ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்ட தொடரில், இலங்கை அணியின் தலைவியாக செயற்பட்ட இவர், அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றிருந்தார்.
வலைப்பந்தாட்ட விளையாட்டில் இலங்கையின் எந்தவொரு வீராங்கனைகளும் பெறாத விருதுகளையும், சாதனைகளையும் கைவசப்படுத்தியிருந்த தர்ஜினிக்கு, வலைப்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்ற நிர்வாக மாற்றங்கள் மற்றும் அரசியல் காரணங்களால் தேசிய குழாமிலிருந்து வெளியேற நேரிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் இருந்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நிர்வாகம் அவர்களுக்கு சார்பான வீரர்களை அணிக்குள் கொண்டுவந்தனர். பலமான அணியொன்று கட்டியமைக்கப்படவில்லை. இதனால் 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் அவர் விலகினார்.
இதன்போது, தேசிய அணியின் தலைவி, ஆசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகள் என ஒரு வீராங்கனையின் குறிக்கோள்கள் அனைத்தையும் தொட்ட தர்ஜினி, இனி தேசிய அணியில் விளையாட வேண்டாம், புதிய வீராங்கனைகளுக்கு இடம் வழங்க வேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெறுவதற்கு சிந்தித்தார்.
எனினும் அவர் ஆரம்பத்திலிருந்து செலான் வங்கியின் சார்பாக வர்த்தக வலைப்பந்தாட்ட தொடரில் தொடர்ந்தும் விளையாடி வந்தார். திடீரென 2017ம் ஆண்டு இலங்கையின் எந்தவொரு வீரருக்கும் கிடைக்காத வாய்ப்பு தர்ஜினிக்கு கிடைத்தது. பயிற்றுவிப்பாளர் திலக ஜினதாசவின் மூலமாக அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விக்டோரியா வலைப்பந்தாட்ட லீக் தொடரில் சிட்டி வெஸ் ஃபெல்கோன் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் தர்ஜினி. இதன்படி இலங்கை சார்பில் வெளிநாட்டு தொடரொன்றில் விளையாடும் முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் தர்ஜினி பெற்றுக்கொண்டார்.
அவுஸ்திரேலியா சென்ற தர்ஜினி தனது சக வீராங்கனைகளில் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து போட்டிகளில் பங்குபற்றினார். இவரின் திறமையும், உயரமும் அவுஸ்திரேலிய வீராங்கனைகளையும், ரசிகர்களையும் வியக்கவைத்தது. இதேவேளை, தனது சக வீராங்கனைகளுடன் தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபட்டு, தனது திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள தவறவில்லை. தர்ஜினிக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த பயிற்சிகள் அவருக்கு விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தன.
இப்படி நாட்கள் சென்றுக்கொண்டிருக்க சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்தின் ஊடாக தர்ஜினிக்கு தேசிய அணியில் விளையாட மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. சம்மேளனத்தின் புதிய தலைவர் மற்றும் மீண்டும் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராகிய திலக ஜினதாசவின் மூலமாகவும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட தர்ஜினி நாட்டுக்காக இன்னும் சாதிக்க வேண்டும் என மீண்டும் தேசிய அணிக்கு திரும்பினார்.
திலக ஜினதாச மற்றும் தர்ஜினி சிவலிங்கம் கூட்டணி மீண்டும் தேசிய அணிக்கு முழு பலம் சேர்க்க, சிங்கபூரில் நடைபெற்ற 2018ம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இலங்கையின் வலைப்பந்தாட்ட விளையாட்டை மீண்டும் உச்சத்து எடுத்துச் சென்ற தர்ஜினி, நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்ட தொடரின் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவுசெய்யப்பட்டு, தனது மீள்வருகையை சர்வதேசத்துக்கு பரைசாற்றினார்.
சர்வதேசத்துக்கு இலங்கை வலைப்பந்தாட்டத்தின் பலத்தை நிரூபித்து, ஆசிய சம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றுக்கொடுக்க தன்னால் முடிந்த அளவு பங்காற்றிய தர்ஜினி, கழகமட்ட லீக் தொடரில் விளையாடுவதற்காக மீண்டும் இரண்டாவது முறையாகவும் அவுஸ்திரேலியா சென்று வந்தார். எனினும் தேசிய அணியில் தொடர்ந்தும் இணைந்துள்ள அவர், இந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கையின் பெருமையையும், தமிழரின் திறமையையும் உலகக்கு எடுத்துச் சொல்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
உயரத்தில் உச்சத்தைத் தொட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம், சர்வதேசத்தில் தனது திறமையை மேலும் மேலும் உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவருக்கு www.thepapare.com தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<