இந்தியாவில் வைத்து மேற்கிந்திய தீவுகளை சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான்

340
Image Courtesy - ESPNcricinfo

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது முற்கூட்டியே திட்டமிட்டதன் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குறித்த இருதரப்பு தொடருக்கான போட்டி அட்டவணையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தற்சமயம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தன. புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு வெற்றிகளுடன் ஒன்பதாமிடத்தை பெற்றுக்கொண்ட அதேவேளை ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் எதனையும் பெறாமல் இறுதி இடத்தை பிடித்தது.

இலங்கை வருகிறது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

இலங்கைக்கு இம்மாத பிற்பகுதியில் கிரிக்கெட் சுற்றுப் பயணம்….

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஆரம்பத்திலேயே மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருதரப்பு தொடரை திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையானது தங்களது வசதிக்கு ஏற்றவாறு தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் என மூவகையான கிரிக்கெட் தொடர்களும் இச்சுற்றுப்பயணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை போட்டிகள் அனைத்தும் நடைபெறவுள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இத்தொடர் நடைபெறவுள்ள காரணத்தினால் ஆப்கானிஸ்தான் அணி தங்களது சொந்த மைதானத்தில் போட்டிகளை நடாத்த வேண்டும். ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதற்கு பல சவால்கள் காணப்படுகின்ற காரணத்தால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்தியாவில் மூன்று மைதானங்களை ஆப்கானிஸ்தான் அணிக்கு சொந்த மைதானமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இதுவரையில் 10 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த வருடம் (2018) முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய டெஸ்ட் அந்தஸ்தை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக்கொண்டது. 

உலகக் கிண்ண அரையிறுதி கடமையில் தர்மசேன மற்றும் மடுகல்ல

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்……

இதுவரையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதல் தடவையாக இந்திய அணிடயுடன் விளையாடிய டெஸ்டில் தோல்வியையும், அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றியையும் சந்தித்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியை டெஸ்ட் போட்டியில் சந்திக்கவுள்ளது. 

நடைமுறையிலுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய அணிகளின் தரப்படுத்தலின்படி ஒருநாள் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணி 77 தரவரிசை புள்ளிகளுடன் ஒன்பதாமிடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 59 தரவரிசை புள்ளிகளுடன் பத்தாமிடத்திலும் காணப்படுகின்றன. டி20 சர்வதேச அணிகளின் தரப்படுத்தலின்படி ஆப்கானிஸ்தான் அணி 241 தரவரிசை புள்ளிகளுடன் ஏழாமிடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 226 தரவரிசை புள்ளிகளுடன் ஒன்பதாமிடத்திலும் காணப்படுகின்றன. 

இதேவேளை டெஸ்ட் அணிகளின் தரப்படுத்தலில் 82 தரவரிசை புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி எட்டாமிடத்தில் காணப்படுகின்ற நிலையில் அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இன்னும் தரவரிசையில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2019 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிகளை பெறாவிட்டாலும் ஏனைய அணிகளுக்கு சவாலான அணியாக திகழ்ந்த காரணத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரானது எதிர்பார்ப்பு மிக்க தொடராக அமைந்திருக்கின்றது. 

அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் உஸ்மான் கவாஜா

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தற்சமயம்….

தொடர் அட்டவணை

5 நவம்பர் – முதலாவது டி20 சர்வதேச போட்டி 

7 நவம்பர் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி 

9 நவம்பர் – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி 

13 நவம்பர் – முதலாவது ஒருநாள் சர்akeeவதேச போட்டி

16 நவம்பர் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி

18 நவம்பர் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி

27 – 31 நவம்பர் – ஒரு டெஸ்ட் போட்டி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<