வட மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனரில் புவிதரன், சுவர்ணாவுக்கு தங்கம்

696

யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்று வருகின்ற வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளின் நேற்றைய (5) இரண்டாம் நாள் முடிவில் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனா மற்றும் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவர்கள் பதக்கங்களை வென்று அசத்தினர். 

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகியது. இம்முறை போட்டிகளில் வட மாகாணத்தில் உள்ள 12 வலையங்களைச் சேர்ந்த சுமார் 400 பாடசாலைகள் பங்குபற்றியுள்ளன. 

Photos : Northern Provincial schools Athletic meet 2019 – Day 02

ThePapare.com | Murugaiah Saravanan | 05/07/2019 Editing and re-using images without permission of ThePapare.com will be…

இந்த நிலையில், போட்டிகளில் இரண்டாவது நாளான நேற்று (05) நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்களான ஏ. புவிதரன் மற்றும் எஸ். சங்கவி ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய கனிஷ்ட சம்பியனும், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் 4.40 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இறுதியாக கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 4.55 மீற்றர் உயரத் தாவி தங்கப் பதக்கத்தை வென்ற புவிதரன், அதன் பிறகு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 4.50 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தார். 

குறித்த போட்டியில் 4.20 மீற்றர் உயரங்களைத் தாவிய மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். சுகிர்தன் வெள்ளிப் பதக்கத்தையும், மானிப்பாய் இந்து கல்லூரி மாணவன் எஸ். கபில்ஷன் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர். 

இதேநேரம், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி எஸ். சங்கவி 34.45 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

மகாஜனாவுக்கு அதிக கௌரவம்

மைதான நிகழ்ச்சிகளில் வழமைபோல் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி அணி, இதுவரை 6 பதக்கங்களை வெற்றி கொண்டது. 

போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட மகாஜனா கல்லூரி மாணவி எஸ். சுவர்ணா 1.37 மீற்றர் உயரம் தாவி புதிய வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

Photos: Northern Provincial Schools Athletic Meet 2019 – Day 01

ThePapare.com | Saravanan Murugaiah | 05/07/2019 Editing and re-using images without permission of ThePapare.com will be…

இதேநேரம், போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று (05) நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். சதுர்ஜன், வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். குறித்த போட்டியை நிறைவு செய்ய 23.30 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

அத்துடன், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட வி. கஜன்சிகா வெண்கலப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை அவர் 30.40 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். 

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய எஸ். சுகிர்தன், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதேநேரம், மகாஜனா கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட கே. ஜதூஷா, 10.10 மீற்றர் தூரத்தை எறிந்து வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். 

அத்துடன், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனா கல்லூரி மாணவன் சி. துஷாந்தன் 1.48 மீற்றர் உயரம் தாவி வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதனிடையே, 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட பி. சாணுகா, 28.43 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஹார்ட்லிக்கு 4 பதக்கங்கள்

போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் பங்குகொண்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் ஆர். சஞ்சய், 11.94 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதே கல்லூரியைச் சேர்ந்த ஏ. அஜன்ஸ்ரன் 11.86 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார். குறித்த போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஆர். பிரவீன் 12.84 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். 

இதேநேரம், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குகொண்ட ஹார்ட்லி மாணவன் ஏ. அஜன்ஸ்ரன் 36.54 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தினை வெற்றிகொள்ள, அவருடன் போட்டியிட்ட அதே கல்லூரியைச் சேர்ந்த ஆர். சஞ்சய் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். 

தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடியில் கிழக்கு மாகாணத்திற்கு தங்கப் பதக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு…

அத்துடன், ஆண்களுக்கான 80 மீற்றர் ஓட்டப் போட்;டியில் பங்குகொண்ட ஏ. தாசன் சுஜிஸ்தன் போட்டித் தூரத்தை 10.60 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

5000 மீற்றரில் சஞ்சீவன், ஹேமபிரியாவுக்கு தங்கம்

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் நேற்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா ஸ்கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவன் எஸ். சஞ்சீவன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை நிறைவு செய்ய 17.07.02 செக்கன்களை எடுத்துக் கொண்டார். 

இதில் வவுனியா காமினி வித்தியாலயத்தைச் சேர்ந்த கே. நிசோபன் 17.21.2 நிமிடங்களில் ஓடி வெள்ளிப் பதக்கத்தையும், மன்னார் புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஜே. அருண்ராஜ் 17.47.4 நிமிடங்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

இதேநேரம், பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட ஹேமபிரியா 20.31.70 நிமிடங்களில் ஓடி முடித்து வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும்,  இளவாலை கன்னியர்மட வித்தியாலயத்தைச் சேர்ந்த கீர்த்திகா வெள்ளிப் பதக்கத்தையும், குருநகர் சென். ஜேம்ஸ் பெண்கள் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பி.நிரோசா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

தனுசங்கவிக்கு தங்கம்

போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் யாழ். அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி தனுசங்கவி தங்கப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியில் 1.45 மீற்றர் உயரத்தை அவர் தாவினார். 

இவர் தேசிய மட்டப் போட்டிகளில் கோலூன்றிப் பாய்தலில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற வீரங்கனையாவார். 

இதில் புத்தலகட்டி ஸ்ரீ விஷ்ணு வித்தியால மாணவி நதீக்கா (1.45 மீற்றர்) அதே உயரத்தைத் தாவி இரண்டாவது இடத்தையும், தேரங்கண்டல் அ.த.க பாடசாலை மாணவி டிசாந்தினி 1.40 மீற்றர் உயரம் தாவி மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர். 

இதனிடையே, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி பி. கம்சினி 4.57 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மாவட்ட தடகளப் போட்டிகளின் சம்பியனாகிய மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத் திருவிழாவினுடைய தடகள போட்டிகளின் இரண்டாம் நாள் மற்றும் இறுதி நாள்…

மன்னாருக்கு முதலிடம்

2019 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாள் நிறைவுக்குவரும் போது புள்ளிகள் பட்டியலில் மன்னார் வலயம் 193 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

191 புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாணம் வலயம் இரண்டாவது இடத்தையும், 187 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வலிகாமம் வலயம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<