இணைப்பாட்டங்களை பெறத் தவறியதால் தோற்றோம் மஷ்ரபி

359
©Getty

இந்தியாவுடனான போட்டியில் போதியளவு இணைப்பாட்டங்களைப் பெற்றுக்கொள்ளத் தவறியமையே தோல்விக்கு காரணம் என பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா தெரிவித்துள்ளார்.  

இந்தியா அணிக்கு எதிராக நேற்று (02) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 40ஆவது லீக் ஆட்டத்தில் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடித் தோல்வியைத் தழுவிய பங்களாதேஷ் அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பில் நெருக்கடியை சந்தித்தது

உலகக்கிண்ண அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக தெரிவான இந்தியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ………

மேலும், இம்முறை உலகக் கிண்ணத்தில் 3 வெற்றிகளை மாத்திரம் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி, அரையிறுதிக்கு நுழைய 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் கட்டாயத்தில் நேற்றைய போட்டியில் இந்தியாவை சந்தித்தது

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறியதால் அந்த அணி தோல்வியை சந்தித்ததுடன், தேவையான நேரத்தில் இணைப்பாட்டங்களைப் பெற்றுக் கொள்ளத் தவறியமையே தோல்விக்குக் காரணம் என பங்களாதேஷ் அணித் தலைவர் ஷ்ரபி மொர்தஸா தெரிவித்தார்.

இந்தியாவுடனான தோல்வி குறித்து போட்டியின் பிறகு அவர் அளித்த பேட்டியில்,

இது நாம் வெல்ல வேண்டிய ஒரு போட்டியாகும். இதில் எங்களால் வெல்ல முடியாவிட்டாலும், இது ஒரு நல்ல முயற்சி என்று நான் நினைக்கிறேன். பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் பிரச்சனை என்னவென்றால், எங்களுக்கு தேவையான நேரத்தில் இணைப்பாட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எங்களால் இணைப்பாட்டம் ஒன்றை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு இருந்திருந்தால், அது வேறுபட்ட போட்டியாக இருந்திருக்கலாம். அது இந்தத் தொடரில் எங்களுக்கு கிடைக்கின்ற ஒரு அதிஷ்டமாக இருந்திருக்கலாம்என்றார்

பங்களாதேஷ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள இரு வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்த மஷ்ரபி, சகிப் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோல முஷ்பிகுர் ரஹீமும் இந்தத் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தடியிருந்தார்” என்றார். 

இதேநேரம், ரோஹித் சர்மா இந்திய இன்னிங்ஸின் நட்சத்திரமாக விளங்கினார். 92 பந்துகளில் 104 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் இந்திய அணி 300 ஓட்டங்களைக் கடந்தது. இருப்பினும், ரோஹித் சர்மா 9 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, அவருடைய பிடியெடுப்பை தமிம் இக்பால் எடுத்திருந்தால் போட்டி வித்தியாசமாக மாறி இருந்திருக்கலாம்.

எனவே, ரோஹித்தின் பிடியெடுப்பை தவறவிட்டமை தொடர்பில் மஷ்ரபி கருத்து தெரிவிக்கையில்,

”ரோஹித் சர்மா போன்ற ஒரு வீரர் ஒருநாள் போட்டிகளில் நல்ல போர்மில் இருக்கிறார். ஆனால், அவருடைய பிடியெடுப்பை தவறவிட்டதற்கான எல்லா குற்றச்சாட்டுகளையும் தமிம் இக்பால் மீது வைக்க முடியாது. ஆனால் உண்மையைச் சொல்வதானால், அந்த பிடியெடுப்பை தவறவிட்ட பிறகுதான் அவர் சதம் பெற்றார், எனவே இது மிகவும் அதிகம். ஆனால் இவ்வாறான தவறுகள் களத்தடுப்பின் போது நிகழக்கூடிய ஒன்று” என தெரிவித்தார்.  

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி விளையாடவுள்ளது. இதுதொடர்பில் பேசிய ஷ்ரபி, ”பாகிஸ்தானுடனான போட்டியில் எமது ரசிகர்களுக்கு முன் சிறந்ததொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். இந்தத் தொடர் முழுவதும் எமது ரசிகர்கள் ஆதரவாக இருந்தார்கள், வெளிப்படையாக இன்றும் கூட. எனவே, நாங்கள் ஒரு நல்ல முயற்சியோடு போட்டியை முடிப்போம் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<