எமக்கு கிடைத்த வாய்ப்பை கைநழுவி விட்டோம் – ஜேசன் ஹோல்டர்

1003
©Getty

இலங்கை அணிக்கெதிரான லீக் போட்டியில் நிக்கோலஸ் பூரனின் சதத்தின் உதவியுடன் வெற்றியின் விளிம்பு வரை வந்து தோல்வியை சந்திக்க நேரிட்டமை ஏமாற்றம் அளிப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். 

தனது அனுபவமே நிக்கோலஸ் பூரணை வீழ்த்த காரணம் என்கிறார் மெதிவ்ஸ்

எட்டு மாதங்களாக எந்தவொரு வலைப் ….

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்று (01) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 3ஆவது வெற்றியைப் பதிவு செய்தது

உலகக் கிண்ண அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இலங்கைமேற்கிந்திய திவுகள் இரு அணிகளும் இழந்த நிலையில் இந்தப் போட்டி ஆறுதல் வெற்றிக்காக நடைபெற்றது

எனினும், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிக்காக சேஸிங்கில் போராடிய விதம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்தது. ஆனால், போட்டியின் முடிவில் இந்த மோதல் 2019 உலகக் கோப்பை தொடரின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக மாறியது.

இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. எனினும், நிக்கோலஸ் பூரனின் அபார சததத்தின உதவியுடன் வெற்றியிலக்கை நெருக்கியது

இவ்வாறான நிலையில், தனி ஒரு ஆளாக இலங்கை அணியை மிரட்டிய பூரன், அஞ்செலோ மெதிவ்ஸின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் போட்டி இலங்கை கட்டுப்பாட்டிற்கு வந்தது. இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அவிஷ்க மற்றும் மாலிங்கவால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ……..

இந்த நிலையில், இலங்கையுடனான லீக் போட்டியில் சந்தித்த தோல்வி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் ஊடகவியலாளர்களிடம் கூறுகையில்,

நாங்கள் இப்போது தான் சிறப்பாக விளையாட ஆரம்பித்தோம். ஆனால் இந்த உலகக் கிண்ணத்தில் சில முக்கிய தருணங்களை நழுவ விட்டுவிட்டோம். இலங்கையுடனான போட்டியில் நாங்கள் களத்தில் மெதுவாக இருந்தோம். மேலும், சில கூடுதல் ஓட்டங்களை விட்டுக் கொடுத்தோம். இதுபோன்ற போட்டிகளில் தவறுகள் இழைப்பது மிகப் பெரிய விடயமாகப் பார்க்கப்படும்

நாங்கள் எப்போதுமே எல்லைக்குள் செல்ல எங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தோம். அதேபோல, ஒரு நல்ல நிலைக்கு வருவோம், இறுதியில் அதைக் கோட்டை விட்டுவிடுவோம். ஆமாம், இது எங்களுக்கு இந்த உலகக் கிண்ணத்தில் ஒரு வழக்கமாகப் போய்விட்டது என தோன்றுகிறது

உங்களுக்குத் தெரியும், எங்களுக்கு சில நெருக்கமான ஆட்டங்கள் இருந்தன. ஆனால், எங்களால் வெற்றியின் வரம்பை மீற முடியவில்லை. இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் விளையாடிய விதம் குறித்து நீங்கள் பின்னோக்கிப் பார்த்து ஒரு குறிப்பை எடுக்கலாம். அதில் குறிப்பாக நாங்கள் சிறப்பாக களத்தடுப்பில் ஈடுபடவில்லை என நம்புகிறேன்

உண்மையில் இந்த தோல்வியானது ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் வெற்றிக்கு நெருக்கமாக வந்து தோல்வியைத் தழுவுவது நிச்சயமாக ஏமாற்றமளிக்கிறது” என தெரிவித்தார்.

இதேநேரம், 339 ஓட்டங்களைத் துரத்தியடிப்பது குறித்து ஹோல்டர் கருத்து தெரிவிக்கையில்

”உண்மையில் இந்த ஆடுகளத்தில் அதிக ஓட்டங்களைக் குவிக்க முடியும். அதேபோல, சற்று மந்தமான ஆடுகளமாகவும் இது காணப்பட்டது. களத்தடுப்பில் செய்த தவறுகளால் நாங்கள் 30 அல்லது 40 ஓட்டங்களை மேலதிகமாகக் கொடுத்தோம்.

அவிஷ் பெர்னாண்டோ ஆரம்பத்தில் நன்றாக விளையாடினார், பூரனும் நன்றாக விளையாடினார். நடுவில் சிறிது நேரம் செலவழிக்க வேண்டியிருந்தது. அவ்வாறு விளையாடியிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். அதேபோல, பூரனின் விக்கெட்டைப் போலவே ஆலனின் ரன் அவுட் முக்கியமானது. ஒருவேளை நாம் அதை சற்று ஆழமாக எடுத்திருக்கலாம்” என குறிப்பிட்டார்

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் நிக்கோலஸ் பூரன் உள்ளிட்ட இளம் வீரர்கள் விளையாடிய விதம் குறித்து ஹோல்டர் மகிழ்ச்சி அடைந்தார்.

இவ்வாறான சவால்மிக்க போட்டியொன்றில் பூரன் போன்ற இளம் வீரர்கள் சிறந்த இன்னிங்ஸொன்றை வழங்கி பயமில்லாமல் விளையாடுவது எமக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது.

அனைத்து பாராட்டுக்களும் நிக்கோலஸ் பூரனை சாரும். அவர் இன்று ஒரு சிறந்த இன்னிங்ஸை விளையாடியதாக நான் நினைத்தேன். அவர் முதிர்ச்சியுடன் துடுப்பெடுத்தாடியிருந்தார். அவருக்கு முடிந்தவரை ஓட்டங்களைக் குவித்தார். வெறுமனே, இந்தப் போட்டித் தொடரில் மாத்திரமல்லாது தொடர்ந்து அவர் மேம்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

நாங்கள் ஒரு காரணத்திற்காக அவரைத் தேர்ந்தெடுத்துள்ளோம், நாங்கள் அவருக்கு முழு ஆதரவைக் கொடுக்கிறோம், மைதானத்துக்குச் சென்று அவருக்குத் தெரிந்த விளையாட்டை விளையாடுவதற்கு அவருக்கு முழு நம்பிக்கையையும் கொடுக்கிறோம்.

ஆமாம், அவர் தவறு செய்வார், அவர் ஒரு இளம் வீரர். கற்றல் என்பது அவரது வளர்ச்சியின் ஒரு பகுதியாகும், மேலும் அவர் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ள இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நாம் அனைவரும் எதிர்கொண்ட ஒவ்வொரு போட்டிகளில் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்

ஆனால், எமது கிரிக்கெட் சபை இந்த வீரர்களை அபிவிருத்தி செய்வதற்கு தொடர்ந்து உதவுவதற்கு முன்வர வேண்டும். அவர்களது திறமைகளை வீணாக்க நாம் அனுமதிக்க முடியாது. இந்த திறமையை எங்களால் முடிந்தவரை சிறப்பாகப் பயன்படுத்துகிறோம் என்பதை உறுதிசெய்வதும், இவர்களால் சிறந்து விளங்குவதை உறுதிசெய்வதும் நமது பொறுப்பு” என்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணி, தமது கடைசி லீக் ஆட்டத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கவுள்ளது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<