ஒருநாள் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர், உங்களது நாயகன் யார் என்று கேட்டபோது கிட்டத்தட்ட எல்லா மாணவர்களும் தமது பெற்றோர்கள் பெயரையே எழுதி இருந்தார்கள். ஒரு மாணவன் மாத்திரம் அரைப்பகத்திற்கு (12 வயதில் மிகப்பெரிய சாதனை அது) தனக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர் பற்றி எழுதி இருந்தான்.
அடுத்த மாணவர்கள் போல் நீ ஏன் எழுதவில்லை என்று கேட்டபோது ‘அம்மா‘ மற்றும் ‘அப்பா‘ இருவரில் ஒருவரை என்னால் தேர்வு செய்ய முடியாது என்று சமார்த்தியமாக பதிலளித்தான். உண்மையில் அந்த மாணவன் கூறியது பொய்யே.
அரையிறுதியை எதிர்பார்த்துள்ள இலங்கை அணிக்கு இறுதி வாய்ப்பு
உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய…
சாதாரண ஒரு சிறுவனுக்கு இந்த பதில் பொருந்தாமல் இருக்கலாம். கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அப்படியல்ல. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டை தனக்கு இஷ்டம்போல் மாற்றிய சனத் டெரான் ஜயசூரிய தான் அந்த மாணவன். இந்த ஜூன் 30ஆம் திகதி அவர் தனது வாழ்வின் பொன் விழாவை கொண்டாடுகிறார். ஆம், ஐம்பது வயதை எட்டும் சனத் ஜயசூரிய பற்றி ஞாபகமூட்டாமல் இருக்க முடியாது.
கடந்த 2000களின் ஆரம்பத்தில் இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் எப்படி இருந்தது என்று ஞாபகமிருக்கிறதா? அது இன்றுபோல் இந்தியாவின் திறமைக்கு முன் அடிபணிவதாக இருக்கவில்லை. பெரும்பாலும் இலங்கை அள்ளிய வெற்றிகள், “குகபூர” மட்டையை உயர்த்திக் காண்பிக்கும் காட்சிகள், மொட்டைத் தலை கொண்ட ஒருவர் மற்றும் துடுப்பை சுழற்றும் லாவகங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து வந்து போகும்.
சரியாக தம்பிமார்களை பந்துவீசச் சொல்லி வெளுத்து வாங்குவது போல் இந்திய பந்துவீச்சாளர்களை ஜயசூரிய படாத பாடுபடுத்தினார். 1996 இல் டெல்லியில் 4 ஓவர்கள் மாத்திரம் வீசிய மனோஜ் பிரபாகருக்கு என்ன நடந்தது என்று எமக்கு தெரிந்திருக்கும். ஜயசூரிய இந்தியாவுக்கு எதிராக மாத்திரம் ஒருநாள் போட்டிகளில் 7 சதங்கள் (14 அரைச்சதங்கள்) பெற்றார். இது இலங்கையர் ஒருவர் இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற அதிக ஓட்டங்கள்.
‘சனத் ஜயசூரிய‘ வெறுமனே வீரர் மாத்திரமல்ல, இலங்கையர்களின் மனங்களில் எப்போதும் நிலைத்தவராக இருந்தார். அவர் ஆடுகளத்திற்கு வரும்போது எல்லோருமே தொலைக்காட்சி பெட்டி முன்னே ஒட்டி நிற்பார்கள். ரசிகர்கள் அவர் துடுப்பெடுத்தாடுவதை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். எங்கே ஆட்டமிழப்பாரோ என்ற பயமும் தொக்கி இருக்கும். அவர் பந்தை உயர அடிக்கும்போது கலவரமடைவோம், அது மைதானத்திற்கு வெளியில் சென்றதை பார்த்து ஆறுதல் அடைவோம்.
அவர் பௌண்டரி எல்லையில் பிடிகொடுக்கும்போது களத்தடுப்பாளர் எல்லைக் கொட்டை தாண்டி இருப்பார், அப்படி இல்லை என்றால் பந்து வீச்சாளர் நோ போல் போட்டிருப்பார் என்று ஏங்குவது எப்போதும் நிகழும். டெஸ்ட் போட்டி என்றால் இலங்கை அணி குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்டு பலோ ஓன் பெற்றால் அடுத்த நாள் அவர் மீண்டும் துடுப்பொடுத்தாட வருவதை பார்க்க இரவு முழுவதும் காத்திருப்போம். நாம் சிறுபிள்ளைத்தனமாக நாள் முழுவதும் அவர் துடுப்பெடுத்தாட வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அதற்காக எங்களை குறைசொல்ல முடியுமா?
அவர் துடுப்பை சுழற்றும் வேகம், அசாத்தியமாக பௌண்டரிக்கு வெளியே செலுத்துவதை பார்த்தால் அனைத்தும் மறந்து விடும். அவர் ஒருநாள் கிரிக்கெட்டின் போக்கை மாற்றினார், தனது பயங்கர ஆட்டத்தை ஏனைய நாடுகளையும் பின்பற்றச் செய்தார். நாம் அதில் போதை அடைந்தோம்.
வீதிகளில் ஆடும் சிறுவர்கள் கூட சனத் ஜயசுரிய போல் துடுப்பை வைத்திருப்பது, கால்களை நகர்த்துவது என்று அதேபோன்று துடுப்பெடுத்தாட முயற்சிப்பார்கள். ஆனாலும் அவரின் வேகத்தில் ஆட முடியவில்லை.
அவர் ஆடிய அந்த 189 ஓட்டங்கள் பற்றிய ஞாபகங்கள் எம்மிடையே நிறைந்தே இருக்கும். நான்கு போட்டிகளில் தோற்ற பின் அவர் பதிலடி கொடுக்க இலங்கை அணி 299 ஓட்டங்களை சேர்த்தது. அவர் பந்துகளை பௌண்டரிக்கு விளாச நேர்முக வர்ணனை செய்த டோனி கிரேக் கூச்சலிட்ட ஞாபகத்தில் இருந்து நீங்கவில்லை.
இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை அதிகரித்த இங்கிலாந்து
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…
அடிலைட்டில் ஜயசூரியவை ஆடுகளத்தின் நடுவில் நிர்க்கதியாக்கி 99 ஓட்டங்களில் ரன் அவுட் செய்யக் காரணமான குமார் சங்கக்காரவை நம்மில் எத்தனை பேர் திட்டியிருப்போம், கெத்தாராமவில் 98 ஓட்டங்களை பெற்றபொது தனது விரல்களை நீட்டி ஆட்டமிழப்புக் கொடுத்த குமார் தர்மசேன மீது எத்தனை பேர் வசைபாடியிருப்பார்கள். ஜயசூரிய மீது இருக்கும் விருப்பால் அடுத்தவர்கள் மீது தான் கோபம் வரும்.
ஜயசூரியவின் சதம் பெற்ற இன்னிங்ஸ்கள் போன்று அவர் அணிக்காக ஆடிய ஆட்டங்களையும் மறக்க முடியாது. தம்புள்ளையில் இந்தியாவுக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காது பெற்ற 43 ஓட்டங்களும் அவ்வாறான ஒன்று. அது ஹெடிங்லியில் 152 ஓட்டங்கள் பெற்ற இன்னிங்ஸை போன்றே ஞாபகம் நிற்கிறது. அவர் அந்தப் போட்டியில் காயத்தின் வலியுடன் தனித்து அடி இலங்கைக்கு வெற்றி தேடித்தந்தது மறக்க முடியவில்லை.
அவர் பெற்ற 13,000க்கும் அதிகமான ஓட்டங்கள் 300க்கும் அதிகமான விக்கெட்டுகள், 28 ஒருநாள் சதங்கள், அதில் 24 போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றது என அனைத்தும் எப்போதுமே பாராட்டுக்குரியது. இலங்கை கிரிக்கெட்டின் அடையாளமாக அவர் இருந்தார். எமக்கு நம்பிக்கையை தந்தார். உலகக் கிண்ண வெற்றிக்கு அவர் பங்களிப்புச் செய்தார். இலங்கையர்களாக அவர் எமக்கு பெருமை தேடித் தந்தார்.
ஓய்வுக்கு பின் அவர் தனது மதிப்பை சில நேரம் இழந்திருக்கலாம். என்றாலும் இலங்கையர்கள் மனதில் இருந்து அவரும் அவரது திறமையும் இன்றும் நீங்கவில்லை.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<