மாவட்ட தடகளப் போட்டிகளின் சம்பியனாகிய மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி

368

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத் திருவிழாவினுடைய தடகள போட்டிகளின் இரண்டாம் நாள் மற்றும் இறுதி நாள் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை (29) நிறைவுக்கு வந்தன.

இந்த விளையாட்டு திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் வீர, வீராங்கனைகள் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு விளையாட்டுத் திருவிழாவில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் ஆதிக்கம்

இந்த ஆண்டுக்கான (2019) மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு திருவிழாவின், முதல்…………..

இரண்டாம் நாள் ஆட்ட தடகள போட்டிகளில் 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் P. லிங்கஷேன் முதலிடம் பெற்றார். லிங்கேஷன் 5000 மீற்றர் ஓட்டப்போட்டியை 18 நிமிடங்கள் 46 செக்கன்கள் என்ற நேரப்பதிவுடன் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில், பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் மண்முனை மேற்கினை சேர்ந்த வீராங்கனை A. தஸ்மிதா முதலிடம் பெற்றார். தஸ்மிதா இந்த தூரத்தை நிறைவு செய்ய 23 நிமிடங்கள் 0.88 செக்கன்கள் என்ற நேரப்பதிவை எடுத்திருந்தார்.

இதேநேரம் 1500 மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் போராதீவு பற்று பிரதேச செயலகத்தினை சேர்ந்த T. ராகவன் முதலிடம் பெற்றார். ராகவன் 1500 மீற்றர் தூரத்தை ஓடி முடிக்க 4 நிமிடங்கள் 37.86 செக்கன்கள் என்ற நேரப்பதிவை காட்டியிருந்தார். இதேநேரம், பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஏற்கனவே 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற A. தஸ்மிதாவே முதலிடம் பெற்று அசத்தியிருந்தார். மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு இன்னுமொரு தடவை பெருமை சேர்த்த தஸ்மிதா 1500 மீற்றர் தூரத்தை 5 நிமிடங்கள் 53.78 செக்கன்கள் என்ற நேரப்பதிவுடன் நிறைவு செய்திருந்தார்.

இதேவேளை ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் P. லொஜிஷன் முதலிடம் பெற்றார். மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலகத்தினை சேர்ந்த லொஜிஷன் 100 மீற்றர் தூரத்தை ஓடி முடிக்க 12.03 செக்கன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த O. ஹெயின்ஸ் ஈமோனி முதலிடம் பெற்றார். ஈமோனி 100 மீற்றர் தூரத்தினை நிறைவு செய்ய 14.21 செக்கன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குழு நிகழ்ச்சிகளில் 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் ஆண்கள் பிரிவில் வெல்லாவெளி பிரதேச செயலக அணியின் வீரர்கள் முதலிடம் பெற்றனர். இவர்கள் 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தினை நிறைவு செய்ய 46.37 செக்கன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் பெண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக வீராங்கனைகள் முதலிடம் பெற்றனர். இந்த வீராங்கனைகள் 55.27 செக்கன்கள் என்ற நேரப்பதிவுடன் 4×100 மீற்றர் ஓட்டத்தினை நிறைவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களைப் பார்வையிட

ஆண்களுக்கான கோல் ஊன்றி பாய்தலில் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலகத்தினை சேர்ந்த K. சந்திரக்குமார் முதலிடம் பெற்றார். சந்திரகுமார் 3.10 மீற்றர் உயரம் தாவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் உயரம் பாய்தலில் T. திஷான் முதலிடம் பெற்றார். மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை சேர்ந்த திஷான் 1.70 மீற்றர் உயரம் தாவியிருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்கள் பிரிவில் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலகத்தினை சேர்ந்த B. தனுஷ்கா 1.45 மீற்றர் உயரம் தாவி  முதலிடம் பெற்றார். 

குண்டெறிதல் நிகழ்ச்சியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை சேர்ந்த V. விமோஷ் முதலிடம் பெற்றார். விமோஷ், 9.55 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்கள் பிரிவில் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலகத்தினை சேர்ந்த S. கிருஷானி 7.26 மீற்றர் தூரம் குண்டெறிந்து முதலிடத்துக்கு  சொந்தக்காரியாக மாறியிருந்தார்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற தடகளப் போட்டிகளில் சிறந்த பதிவுகளை பெற்ற, மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி 44 பதக்கங்களுடன் சம்பியன் பட்டம் வென்றது. இதேநேரம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அணி, 17 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தினையும், ஆரையம்பதி பிரதேச செயலக அணி 13 பதக்கங்களுடன் மூன்றாம் இடமும் பெற்றது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<