தென்னாபிரிக்காவுக்கு எதிராக நுவான் பிரதீப் ஆடுவதில் சந்தேகம்

2711

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான நுவான் பிரதீப் நாளை (28) நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 35வது லீக் போட்டி நாளை (28) டர்ஹாமில் உள்ள ரிவர்சைட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக இலங்கை அணி தயாராகி வரும் நிலையில், நுவான் பிரதீப் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Photos : CWC19 – Sri Lanka training session ahead of South Africa match

ThePapare.com | 27/06/2019 Editing and re-using images without permission….

நுவான் பிரதீப் சின்னம்மை நோய்க்கு (chicken pox) முகங்கொடுத்துள்ள நிலையில், நாளைய போட்டியிலிருந்து அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நுவான் பிரதீப் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க, “வைத்தியரிடமிருந்து நாம் எந்த அறிவிப்பையும் பெறவில்லை. எனினும், அவர் (நுவான் பிரதீப்) இன்று வைத்தியரை சந்திப்பவுள்ளார். எனவே, இன்று மாலையாகும்போது எமக்கு பிரதீப்பின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

இலங்கை அணியை பொருத்தவரை லசித் மாலிங்கவை தொடர்ந்து அணியின் நம்பிக்கைக்குறிய பந்துவீச்சாளராக நுவான் பிரதீபு் உள்ளார். தனது வேகம் மற்றும் பௌன்சர் பந்துகளின் மூலம் எதிரணிகளுக்கு சவால் கொடுத்து வரும் இவர், நாளைய போட்டியில் விளையாடாவிட்டால் இலங்கை அணிக்கு பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்த நுவான் பிரதீப், இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இறுதி விக்கெட்டை (மார்க் வூட்) வீழ்த்தி அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். 

உபாதைக்குள்ளான நுவான் பிரதீப்பின் தற்போதைய நிலை

உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய…..

இவ்வாறு பிரகாசித்திருந்த நுவான் பிரதீப் நாளைய போட்டியில் விளையாடாவிட்டால், அவருக்கு பதிலாக அனுபவ வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் அணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நுவான் பிரதீப் ஏற்கனவே, பயிற்சியின் போது விரல் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த போட்டிகளில் மழை குறுக்கிட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நுவான் பிரதீப் மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார்.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியானது இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. அரையிறுதிக்கான பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை அணிக்கு, நாளைய போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும், நுவான் பிரதீப் குறித்து எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவலையும் இன்னும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிடவில்லை. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<