யோக்கர் பந்துவீச்சில் மாலிங்கவின் சாதனை

4012

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் வீரர்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் வித்தியாசமான சாதனைகளை தங்களது கைவசம் வைத்துள்ளனர். இதில், இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவும் புதியதொரு சாதனையை படைத்துள்ளார். 

அடுத்தப் போட்டியில் வெற்றிபெற இலங்கை என்ன செய்ய வேண்டும்?

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ………..

உலக இரசிகர்கள் அனைவருக்கும் லசித் மாலிங்க என்றவுடன் முதலில் ஞாபகம் வரும் ஒரு விடயம் என்றால் அவரது “யோக்கர்” பந்துகள். தனக்கே உரித்தான தனித்துவமான யோக்கர் பந்துகளை வீசும் வல்லமை பொருந்திய இவர், துடுப்பாட்ட வீரர்களை நொடிப்பொழுதில் ஏமாற்றக்கூடியவர்.

ஆரம்பத்தில் இவரது வேகம் கலந்த யோக்கர் பந்துகள் துடுப்பாட்ட முனையில் இருக்கும் வீரர்களை மிரட்டி வந்த போதிலும், இப்போது அவரது வேகம் குறைந்துள்ளதுடன், அவருடைய வயதும் 35 தாண்டியுள்ளது. தற்போது வேகம் குறைந்தாலும் தனது அனுபவத்தின் மூலம் இடைக்கிடையில் வேகம் கூடிய யோக்கர் பந்துகளுடன், வேகம் குறைக்கப்பட்ட யோக்கர் பந்துகளை வீசி மாலிங்க துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகின்றார்.

இதற்கு உதாரணமாக ஐந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் மாலிங்க பந்துவீசிய விதம், உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மாலிங்கவின் பந்துவீச்சு என்பவற்றை கூற முடியும்.  

இப்படி தனது யோக்கர் மூலமாக உலக கிரிக்கெட் இரசிகர்களிடத்தில் பிரபலமடைந்திருந்த மாலிங்க, தற்போது 2010ம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய யோக்கர் பந்துகளை வீசிய வீரர் என்ற மைல் கல்லை தக்கவைத்துள்ளார்.  

நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மிச்சல் ஸ்டார்க் தனது யோக்கர் மூலம் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் கொடுத்திருந்த நிலையில், கடந்தகால பதிவுகள் சில வெளியிடப்பட்டிருந்தன. 

அதன்படி, 2010ம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக யோக்கர் பந்துகளை வீசியுள்ள 5 வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதில், இலங்கை அணியை சேர்ந்த இரண்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததுடன், இதில் அதிகமான யோக்கர் பந்துகளை வீசியவர் என்ற பெருமையினை லசித் மாலிங்க பெற்றுக்கொண்டுள்ளார்.

ஏனைய பந்துவீச்சாளர்கள் இலகுவில் எட்டமுடியாத மிகப்பெரிய முன்னிலையை கொண்டுள்ள மாலிங்க, 2010ம் ஆண்டுக்கு பின்னர் மொத்தமாக 872 யோக்கர் பந்துகளை வீசியுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக, நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி 328 யோக்கர் பந்துகளை வீசியுள்ளார். இவ்வாறு, முதல் இரண்டு இடங்களுக்கும் இடையில் 500 யோக்கர் பந்துகள் இடைவளி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை, குறித்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை 327 யோக்கர் பந்துகளுடன் அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் பிடித்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கை வீரரான நுவான் குலசேகர நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இவர் இறுதியாக 2017ம் ஆண்டு ஒருநாள் போட்டியொன்றில் விளையாடியிருந்தாலும், மொத்தமாக 288 யோக்கர் பந்துகளை வீசியுள்ளார். 

அதேநேரம், குறித்த பட்டியலின் 5வது இடத்தை நியூசிலாந்து அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட் (233) பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் போட்டிகளில் அதிக யோக்கர் பந்துகளை வீசிய வீரர்கள் (2010இற்கு பின்னர்)

  1. லசித் மாலிங்க – 872
  2. டிம் சௌதி – 328
  3. மிச்சல் ஸ்டார்க் – 327
  4. நுவான் குலசேகர – 288
  5. ட்ரென்ட் போல்ட் – 233

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<