”பிடியெடுப்பை தவறவிட்டதால் பயந்துவிட்டேன்”: குசல் மெண்டிஸ்

2758

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு கடும் சவால் கொடுத்தவர் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ். 

சாதனைகளுடனே இலங்கை இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது

கடந்த 21ஆம் திகதி, உலகக் கிண்ண கிரிக்கெட் …………..

இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தின் போது 187 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.  இதன் போது 57 ஓட்டங்களை பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ், லசித் மாலிங்க வீசிய பந்தினை எல்லைக்கோட்டுக்கு வெளியே செலுத்த முற்பட்டார். ஆனால், குறித்த பந்து நேரடியாக எல்லைக்கோட்டுக்கு அருகில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த குசல் மெண்டிஸின் அருகில் செல்ல, குறித்த பிடியெடுப்பு வாய்ப்பை மெண்டிஸ் தவறவிட்டார்.

இதன் பின்னர், இசுரு உதான மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரின் ஓவர்களுக்கு சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளை விளாசிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் வெற்றியிலக்கினை 21 ஆக குறைத்திருந்தார். எனினும், குறுகிய நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பில், இறுதி துடுப்பாட்ட வீரர் மார்க் வூட்டின் விக்கெட்டினை கைப்பற்றிய நுவான் பிரதீப் இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.

ஆனாலும், குசல் மெண்டிஸ் கைநழுவவிட்ட பிடியெடுப்பானது, குறித்த போட்டியின் முடிவில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பிருந்தது. தவறவிடப்பட்ட குறித்த பிடியெடுப்பு குறித்து மெண்டிஸ் குறிப்பிடுகையில், 

“நான் அந்த பிடியெடுப்பினை தவறவிட்டதன் பின்னர் பயந்துவிட்டேன். காரணம் போட்டியின் முடிவு மாறியிருந்தால் அதற்கான பழி என் மீது வந்திருக்கும். ஆனால், நுவான் பிரதீப் போட்டியின் முடிவை சாதகமாக்க உதவியிருந்தார்”

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஷன் நியமிக்கப்பட்ட பின்னர் அணியின் களத்தடுப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பில் சில தவறுகளை விட்டிருந்தாலும், இசுரு உதான மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் அணியின் சிறந்த களத்தடுப்பாளர்களாக உருவெடுத்துள்ளனர். 

அதேபோன்று, விக்கெட் காப்பாளரான குசல் மெண்டிஸும் ஏனைய இடங்களில் பணியாற்றக்கூடிய ஒரு சிறந்த களத்தடுப்பு வீரர். ஆனால், அவர் இந்த உலகக் கிண்ணத்தில் இதுவரை இரண்டு பிடியெடுப்புகளை தவறவிட்டுள்ளார்.

 “களத்தடுப்பில் நாம் எப்பொழுதும் போன்று செயற்படுகிறோம். கடந்த வருடத்தை பார்க்கும் போது, நான் அணியில் சிறந்த களத்தடுப்பு வீரராக இருந்தேன். ஆனால், இவ்வருடம் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்டுள்ளேன். எமது களத்தடுப்பு கடந்த வருடத்தில் சிறப்பாக இருந்தது. அதேநேரம், அனைத்து அணிகளும் பிடியெடுப்புகளை தவறவிடுகின்றன. அதனால், பிடியெடுப்பை தவறவிடுவதை குறித்துக்காட்ட முடியாது”

இலங்கை அணி உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள இலங்கை அணி அடுத்த போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்வரும் 28ம் திகதி டர்ஹாமில் எதிர்கொள்ளவுள்ளது. தென்னாபிரிக்க அணி ஏற்கனவே தங்களுடைய அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<