வட மாகாண கரப்பந்தாட்டத்தில் தொடரும் யாழ்ப்பாணத்தின் ஆதிக்கம்

388

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கான அணிகளைத் தேர்வு செய்வதற்கான மூன்றாவது கட்ட போட்டிகளான மாகாண மட்ட போட்டிகள் நாடெங்கிலும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. வட மாகாண ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டிகள் அண்மையில் கிளிநொச்சியில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (22)  இடம்பெற்றிருந்தது.

ஆண்கள் பிரிவு 

முதலாவது போட்டியில் வவுனியா ஸ்ரீ சுமங்கல மகா வித்தியாலய அணியினை பிரதிநிதித்துவம் செய்கின்ற இளைய வீரர்களை உள்ளடக்கிய வவுனியா மாவட்ட அணி, அனுபவம் வாய்ந்த மன்னார் மாவட்ட அணியினை எதிர்கொண்டிருந்தது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் பலம் வாய்ந்த மன்னார் அணியினை 03:02 (25:22, 25:16, 21:25, 18:25,15:13) என்ற செட் கணக்கில் வீழ்த்தி வவுனியா அணியினர் அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன்களான யாழ் மாவட்ட அணியினர் முல்லைத்தீவு மாவட்ட அணியினை எதிர்கொண்டது. பலமான அணியாக களமிறங்கிய யாழ்ப்பாண அணியினர் 25:19, 25:19 என்ற புள்ளிகள் கணக்கில் முதலிரு செட்களையும் கைப்பற்றினர். மூன்றாவது செட்டில்  பலத்த போராட்டத்தை வெளிப்படுத்திய முல்லைத்தீவு வீரர்கள் 25:23 என கைப்பற்றினர். நான்காவது செட்டிலும் அதே உத்வேகத்துடன் முல்லைத்தீவு வீரர்கள் போராடிய போதும் அனுபவம் கைகொடுக்க 25:18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண அணியினர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கிளிநொச்சி – வவுனியா மாவட்ட அணிகள் போட்டியிட்டன. இளைய வீரர்களை உள்ளடக்கிய இந்த இரு அணிகளுக்கிடையிலான மோதலாக அமைந்த இந்த போட்டி, ஆரம்பம் முதல்  ஆக்ரோஷமாகவிருந்தது. இரு அணிகளும் தாம் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என தொடர்ந்து போராட நீடித்து சென்ற முதலாவது செட்டை 32:30 என்ற புள்ளிகள் கணக்கில் கிளிநொச்சி அணியினர் வெற்றிபெற்றனர். இரண்டாவது செட்டில் ஆரம்பம் முதல் நேர்த்தியான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வவுனியா வீரர்கள் 16:11 என முன்னிலை வகித்தபோதும், மீண்டெழுந்த கிளிநொச்சி வீரர்கள் 25:19 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றினர். தொடர்ச்சியாக மூன்றாவது செட்டையும் 25:20 என வெற்றி கொண்ட கிளிநொச்சி வீரர்கள் இறுதிப்போட்டியில் தமது இடத்தினை உறுதி செய்தனர்.

இறுதிப்போட்டி

மீண்டுமொருமுறை யாழ்ப்பாணம், கிளிநொச்சி அணிகளுக்கிடையிலான மோதலாக இறுதிப்போட்டி அமைந்திருந்தது. 

அரையிறுதி போட்டியில் கிளிநொச்சி வீரர்கள் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான ஆட்டம், சொந்த மைதானம், மைதானம் சூழ கிளிநொச்சி ரசிகர்கள் ஆகிய சாதக காரணிகளுடன் களமிறங்கிய கிளிநொச்சி அணியினரும், அனுபவ வீரர்களை உள்ளடக்கிய நடப்பு சம்பியன்களான யாழ்ப்பாண அணியினரும் போட்டியிட்டிருந்தனர்.

  • ஆண்கள் பிரிவு இரண்டாம் இடம் - கிளிநொச்சி அணி
  • பெண்கள் பிரிவு சம்பியன் - யாழ்ப்பாணம் அணி
  • பெண்கள் பிரிவு இரண்டாம் இடம் - முள்ளைதீவு அணி

முதலாவது செட்டை யாழ் வீரர்கள் 25:23 என்ற புள்ளிகள் கணக்கில் தமதாக்கினர். அடுத்த செட்டில் பதிலடி கொடுக்கும் முகமாக கிளிநொச்சி வீரர்கள் அடுத்து செட்டை  25:21 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர். எனினும் தடுப்பையும், தாக்குதலையும் பலப்படுத்திய செல்வரதன் தலைமையிலான யாழ் தரப்பினர் அடுத்த இரண்டு செட்களையும் 25:19, 25:23 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றனர்.  3:1 என்ற செட் கணக்கில் போட்டியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண வீரர்கள் மீண்டுமொருமுறை வட மாகாண சம்பியன்களான முடி சூடிக்கொண்டனர்.

உலகக் கிண்ணத்திலிருந்து முழுமையாக வெளியேறும் அதிரடி வீரர் அன்ரூ ரசல்

முல்லைத்தீவு மாவட்ட அணியை 3:1 (25:20,17:25, 26:24, 25:23) என்ற செட் கணக்கில் வீழ்த்திய வவுனியா மாவட்ட அணியினர் மூன்றாவது இடத்தினை தமதாக்கினர்.

பெண்கள் பிரிவு 

மூன்று செட்களை கொண்டதாக அமைந்த முதலாவது போட்டியில் யாழ்ப்பாணம் மன்னார் அணிகள் போட்டியிட்டிருந்தன. 25:21, 25:12 என்ற புள்ளிகள் கணக்கில் முதலிரு செட்களையும் தமதாக்கிய யாழ்ப்பாண அணியினர் 2:0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று கிளிநொச்சி அணியுடனான அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றனர். 

முதலாவது அரையிறுதி போட்டியில் நடப்பு சம்பியன்களான முல்லைத்தீவு அணியினர், வவுனியா அணியினருடன் போட்டியிட்டிருந்தனர். 25:08, 25:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதலிரு செட்களையும் வெற்றி பெற்ற முல்லைத்தீவு அணியினர் 2:0 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் தமது இடத்தினை உறுதி செய்தனர். 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் 27:25, 25:14 என முதலிரு செட்களையும் கைப்பற்றி போட்டியில் 2:0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற யாழ் மங்கையர் முல்லைத்தீவு அணியுடனான இறுதிப்போட்டியில் தடம் பதித்தனர். 

ஐந்து செட்களை கொண்டமைந்த இறுதிப் போட்டியில் முதல் மூன்று செட்களையும் 25:11, 25:13, 25:21 என்ற புள்ளிகள் கணக்கில் தொடர்ச்சியாக கைப்பற்றிய யாழ்ப்பாண மாவட்ட அணியினர் நடப்பு சம்பியன்களான முல்லைத்தீவு அணியினை 3:0 என நேர் செட்டில் வெற்றி பெற்று சம்பியன்களாக முடிசூடிக்கொண்டனர்.

வட மாகாணம் என்ற ரீதியிலே அணிகளையும், அவற்றுக்கு இடையில் போட்டித்தன்மையினையும் அவதானிக்கையில் கரப்பந்தாட்டம் முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிந்தாலும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு கரப்பந்தாட்டாத்தினை பொறுத்தவரையில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே  இருக்கின்றது. கரப்பந்தாட்டத்திற்கென தொழினுட்ப ரீதியிலான அறிவுடைய பயிற்றுவிப்பாளர் எவரும் இன்றிய நிலையிலேயே இந்த மாவட்ட அணிகள் தமது பயணத்தை தொடர்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். 

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<