இணைப்பாட்டங்களை பெறத் தவறியதால் தோற்றோம் – இயென் மோர்கன்

3457
Getty Images

இலங்கை அணிக்கெதிரான போட்டியில் தனிப்பட்ட முறையில் ஒருசில வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினாலும், போதியளவு இணைப்பாட்டங்களைப் பெற்றுக்கொள்ளத் தவறியமையே தோல்விக்கு காரணம் என இங்கிலாந்து அணியின் தலைவர் இயென் மோர்கன் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று (21) நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. எனவே, இம்முறை உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியுடனான தோல்வியைத் தொடர்ந்து, அவ்வணி பெற்றுக் கொண்ட 2ஆவது தோல்வியாக இது பதிவாகியது.

அபாரப் பந்துவீச்சால் உலகக் கிண்ண அரையிறுதிக் கனவை தக்கவைத்த இலங்கை

இங்கிலாந்து மற்றும் இலங்கை…

ஓட்டங்களைக் குவிப்பதில் மலைக்க வைக்கும் இங்கிலாந்து இம்முறை உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வெற்றி கொண்டது. எனினும் பாகிஸ்தானுடனான லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வியைத் தழுவியது.

அதேபோல, இறுதியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 397 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணி நிர்ணயித்த 232 ஓட்டங்களை எட்ட முடியாமல் போய்விட்டது.

எனவே, வலுவான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இங்கிலாந்து அணி, மீண்டுமொரு முறை இலங்கை அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்தமை மிகப் பெரிய பேசும் பொருளாக மாறிவிட்டது. அதாவது, உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 4ஆவது தடவையாக இலங்கையிடம் அந்த அணி தோல்வியைத் தழுவியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில் இலங்கையுடனான தோல்வி குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இயென் மோர்கன் கருத்து வெளியிடுகையில்,

”நாங்கள் சிறந்த முறையில் பந்துவீசியிருந்தோம். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இலங்கை அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ஓட்டங்களை வழங்குவதில் கட்டுப்படுத்தினோம். இதனால் இலகுவான ஓட்ட எண்ணிக்கையொன்றை நாங்கள் பெற்றுக் கொண்டோம். எனினும், தேவையான நேரத்தில் இணைப்பாட்டங்களை மேற்கொள்ள தவறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இரண்டு வீரர்களின் தனிப்பட்ட திறமைகள் எம்மை வெற்றியின் விழிம்பு வரை அழைத்துச் சென்றன, அவர்களது திறமைகள் மாத்திரம் வெற்றிக்குப் போதாது. எனினும், இறுதியில் எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த தோல்வியானது உடைமாற்றும் அறையில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில் இந்தப் போட்டித் தொடரில் ஒவ்வொரு போட்டியும் மிகவும் கடினமானவை, நாங்கள் இதைப் பற்றி நிறைய தடவைகள் பேசியிருந்தோம்” என தெரிவித்தார்.

இதேநேரம், ஆடுகளம் துடுப்பெடுத்தாடுவதற்கு சவாலானது என்று இயென் மோர்கன் இதன்போது ஒப்புக் கொண்டார், ஆனால் அந்த நாளில் வழங்கப்படும் ஆடுகளங்களின் தன்மைகளையும், எதிரணியின் யுக்திகளையும் நன்கு அவதானித்து விளையாட வேண்டும். ஆனால் நாங்கள் அதில் தோற்றுவிட்டோம்.

இரண்டு அணிகளுக்கும் இந்த ஆடுகளம் சவாலைக் கொடுத்திருந்தது. உண்மையில் இது பந்துவீச்சாளர்களுக்கான நாள். எனவே இந்த தொடர் முழுவதிலும் அவ்வாறான சந்தர்ப்பங்களை அவதானிக்கலாம். எனவே அதற்கேற்ப எம்மை மாற்றியமைக்க வேண்டும்.

இது ஒரு போட்டியாகும், அங்கு நீங்கள் இழைக்கின்ற தவறுகளை சரிசெய்ய வேண்டும். எனவே ஒரு வலுவான அணியாக நாங்கள் திரும்பி வருவோம். அதுவே எங்களின் பலமாக உள்ளது. நாங்கள் மிகவும் போட்டித் தன்மையுடன் விளையாடவுள்ளோம். அதேபோல, இந்த உலகக் கிண்ணத்தில் எம்மால் அனைத்துப் போட்டிகளையும் வெற்றிகொள்ள முடியாது என அவர் கூறினார்.

சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் நோக்கில் இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்…

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுடன் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியை சிறப்பான முறையில் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்த மோர்கன், எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெறுவதற்கான நம்பிக்கை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாங்கள் ஆக்ரோஷமான, புத்திசாலித்தனமான மற்றும் நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடுகிறோம், எனவே அதை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பார்க்கலாம் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<