மாலிங்க இருமுறை நாடு திரும்பியமை இலங்கை அணியை பாதிக்குமா?

827
Malinga

இங்கிலாந்து சென்று உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, தங்களுடைய அரையிறுதி வாய்ப்பினை அதிகரித்துக்கொள்ளும் முகமாக அழுத்தங்களுக்கு மத்தியில் பல்வேறு திட்டங்களை வகுத்து ஒவ்வொரு போட்டிக்கும் முகங்கொடுத்து வருகின்றது.

இதுவரையில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றிருந்தாலும், இலங்கை அணியின் முதல் இலக்கு அரையிறுதி வாய்ப்பை தக்கவைப்பது. இப்போது இலங்கை அணியின் 5 போட்டிகள் நிறைவடைந்து விட்டாலும், அதில் 2 போட்டிகள் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டிருந்தன. மீதம் இருப்பது 4 போட்டிகள். குறித்த 4 போட்டிகளில் மூன்றில் வெற்றிபெற்றால் மாத்திரமே இலங்கை அணியால் நிச்சயமாக அரையிறுதிக்கு செல்ல முடியும்.

சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் நோக்கில் இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய 6வது லீக் போட்டியில் இலங்கை அணி, இந்த உலகக் கிண்ணத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும்

இத்தனை சவால்களுக்கு மத்தியில் இலங்கை அணி பயணித்துக்கொண்டுள்ள நிலையில், இலங்கை அணியின் அனுபவ வீரரும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவருமான லசித் மாலிங்க போட்டிகளுக்கு இடையில் நாடு திரும்புவது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. 

பங்களாதேஷ் அணிக்கு எதிராக கைவிடப்பட்ட போட்டிக்கு பின்னர் மாலிங்க முதன்முறையாக நாடு திரும்பியிருந்தார். அவரது பாரியாரின் தயார் காலமானதை தொடர்ந்து அவர் நாட்டுக்கு திரும்பியிருந்தார். இலங்கை வந்த மாலிங்க, இறுதிச்சடங்குக்கான தனது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டு, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு முதல் நாள் இரவு இங்கிலாந்துக்கு சென்றடைந்தார்.

போட்டிக்கு முதல் இரவு இங்கிலாந்து சென்றடைந்த மாலிங்க, இலங்கை அணியின் (குறித்த போட்டிக்கான) எவ்வித பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை என்பதுடன், அணியின் திட்டமிடல் சந்திப்பிலும் கலந்துக்கொண்டிருக்கவில்லை. போட்டி தினத்தில் அணியுடன் இணைந்துக்கொண்டிருந்த மாலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 61 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.

குறித்த போட்டி முடிந்து 3 மணித்தியாலங்களுக்கு பின்னர் மாலிங்க இரண்டாவது முறையாக மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.  குறித்த மரண சடங்கிற்கான நினைவுகூர்தல் நிகழ்வுக்காக அவர் நாடு திரும்பியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், தனது கடமைகளை முடித்துக்கொண்ட மாலிங்க கடந்த 18ம் திகதி மீண்டும் அணியுடன் இணைந்துக்கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற பலமான அணிகளை எதிர்கொள்வதற்கு முன்னர், மாலிங்க இடைக்கிடையில் இவ்வாறு நாடு திரும்புவதனால் பயிற்சிகளையும், அணி சந்திப்புகளையும் (Team Meeting) தவறவிட நேரிடும் என்பதுடன், பிரதான வேகப் பந்துவீச்சாளர் இல்லாமல் தங்களுடைய திட்டங்களை எவ்வாறு வகுக்கும்? என்ற கேள்விகள் எழுந்திருந்தன.

குறிப்பாக, பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு பந்துவீச்சின் மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டுமானால் அனுபவ பந்துவீச்சாளர் லசித் மாலிங்க தனது பங்கினை சிறப்பாக வழங்கியாக வேண்டும்.

மீண்டும் ஏன் இலங்கை திரும்பினார் மாலிங்க

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக இலங்கை அணி முகாமைத்துவம் தகவல்

இப்படி இருக்கையில் மாலிங்கவின் தொடர்ச்சியான நாடு திரும்பல்கள் அடுத்தடுத்தப் போட்டிகளில் இலங்கை அணியை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாலிங்கவின் அனுபவம்

தற்போதைய இலங்கை அணி வீரர்களில் அதிக அனுபவம் கொண்ட வீரராக மாலிங்க உள்ளார். இதுவரையில் 221 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 326 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோன்று, இதுவரையில் இங்கிலாந்தில் 25 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 40 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவை அனைத்திற்கும் மேலதிகமாக, இதுவரை 4 உலகக் கிண்ணத் தொடர்களில் ஆடிய அனுபவம் கொண்ட மாலிங்கவுக்கு எந்த வீரருக்கு, எவ்வாறு பந்துவீச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

எனினும், மாலிங்கவின் அண்மைய பதிவுகளைப் பார்க்கின்றபோது, அவர் போட்டியின் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து அதிக அழுத்தம் கொடுப்பதை விட, மத்திய மற்றும் இறுதி நிலைகளில் சிறந்த முறையில் பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றி வருகின்றார்.

குறிப்பாக, மாலிங்கவின் பந்துவீச்சு வேகம் குறைவடைந்துள்ள போதும் டெத் ஓவர்கள் வீசுவதில் அவரை மிஞ்சுவதற்கு இலங்கை அணியில் தற்போது வேறு யாரும் இல்லை. உலகின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஆடும் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அவரது பதிவுகள் இதற்கு சிறந்த உதாரணமாக இருந்தன.

அதேநேரம், மாலிங்க அடிக்கடி நாடு திரும்புவதால் அவரால் முழு உடற்தகுதியுடன் போட்டிகளில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்விக்கும் அவர் கடந்த காலங்களின் தனது பந்துவீச்சால் பதில் கூறியிருந்தார். குறிப்பாக, ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதே நாள் இரவில் நாடு திரும்பியதுடன், அதற்கு அடுத்த நாள் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதனை பார்க்கும் போது எந்த சந்தர்ப்பத்திலும் தன்னுடைய உத்திகளை பயன்படுத்தி விக்கெட்டுகளை சரிக்கும் திறமையும் அனுபவமும் மாலிங்கவிடம் உள்ளது.

ஏனைய பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு

இலங்கை அணியின் தற்போதைய நிலையை பொருத்தவரை மாலிங்கவின் பங்களிப்பை விடவும், ஏனைய பந்துவீச்சாளர்கள் முன்வந்து விக்கெட்டினை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. 

லசித் மாலிங்க மத்திய ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்து ஓவர்களை வீசி வருகின்றார். இந்த நிலையில் சுரங்க லக்மால், நுவான் பிரதீப் மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மாலிங்கவின் வேகம் தற்போது குறைந்துள்ள நிலையில், ஏனைய பந்துவீச்சாளர்கள் பௌன்ஸர் பந்துகள் மற்றும் வேகமான யோர்க்கர் பந்துகள் என்பவற்றை முறையாக கையாண்டு விக்கெட்டுகளை வீழ்த்துவது அணிக்கு மேலும் பலத்தை வழங்குவதாக அமையும்.

இவ்வாறு,  ஏனைய பந்துவீச்சாளர்கள் முதலில் விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுக்கும் பட்சத்தில், மத்தியவரிசை மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கான அழுத்தத்தை மாலிங்கவால் கொடுக்க முடியும்.

மாலிங்க இல்லாமை அணிக்கு பாதகமா?

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் மாலிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில், அவர் அணியின் ஒரு பயிற்சி நேரம் மற்றும் ஒரு அணியின் சந்திப்பு ஆகியவற்றை மாத்திரமே தவறவிட்டிருந்தார். இதனால் இவர் நாடு திரும்பியமை அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைய வாய்ப்பில்லை.

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை மாலிங்க ஒரு அனுபவம் மிக்க பந்துவீச்சாளர். அவர் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேநேரம், மாலிங்க சிறந்த கிரிக்கெட் உத்திகளை கையாளக்கூடியவர் என்பதனை முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் கூறியிருக்கின்றனர்.

அதுமாத்திரமின்றி, அணி பயிற்சிகள் சிலவற்றையும், அதேநேரம் அணி சந்திப்புகளை தவறவிட்டாலும் அதனை மாலிங்கவுக்கு தன்னுடைய அனுபவத்தின் மூலம் ஈடுசெய்துக்கொள்ள முடியும் என்பதுடன், சூழ்நிலைக்கேற்ப பந்துவீச்சில் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமையும் அவரிடத்தில் உள்ளது. 

நாடு திரும்புகிறார் லசித் மாலிங்க

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று (11) நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு

எவ்வாறாயினும், மாலிங்க அணியின் பயிற்சிகளில் இருக்கவில்லை என்பது அணிக்கு பாதகமாக இருக்காது என்பதை முற்றுமுழுதாகவும் குறிப்பிட முடியாது. நான்கு உலகக் கிண்ணங்களில் விளையாடிய அனுபவம் மிக்க வீரர் ஒருவர், அணியின் பயிற்சிகள் மற்றும் திட்டங்களை வகுக்கும் சந்திப்புகளில் இல்லாமை அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.   

இதேவேளை, இலங்கை அணியின் பல இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாலிங்க போன்ற அனுபவ வீரருடைய அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவடையும். இவ்வாறான விடயங்கள் அணிக்கும், வீரர்களுக்கும் பாதகமாக அமையலாம். ஆனால், இதுபோன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வீரர் ஒருவர் நாடு திரும்புவதை விமர்சனங்களுக்கு உட்டபடுத்த முடியாது. 

எவ்வாறிருப்பினும், தற்பொழுது அணியுடன் இணைந்துள்ள லசித் மாலிங்க அடுத்து இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரராக உள்ளார். பலம் மிக்க துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிராக மாலிங்கவின் அனுபவம் அதிகம் எடுபடும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க