இலங்கையுடனான போட்டியில் முக்கிய வீரரை இழக்கும் இங்கிலாந்து

2276
ICC

இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய், அடுத்து நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் போது ஜேசன் ரோய் தொடை தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார்.

இலங்கை வீரர்களுக்கு மஹேல கூறும் அறிவுறை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் …….

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது, ஜேசன் ரோய் உபாதைக்கு முகங்கொடுத்ததுடன், அவர் உடனடியாக களத்திலிருந்து வெளியேறினார். இதன் பின்னர், அவர் துடுப்பெடுத்தாடவில்லை என்பதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஜோ ரூட் களமிறங்கியிருந்தார். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் ரோயின் பின்தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இந்தநிலையில், உபாதை காரணமாக ஜேசன் ரோய் நாளை (18) நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மற்றும் எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் 25ம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ரோய் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய், இந்த உலகக் கிண்ணத்தில் தான் துடுப்பெடுத்தாடிய 3 இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 215 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 153 ஓட்டங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் முதுகுவலியினால் களத்தில் இருந்த வெளியேறிய இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கனின் உபாதை சற்று குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு 24 மணித்தியாலங்கள் வரை, மோர்கன் இங்கிலாந்து அணியின் வைத்தியக்குழு கண்கானிப்பில் இருக்கவுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சரியான திட்டத்துடன் விளையாடவில்லை என்கிறார் திமுத்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் ……

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளைய தினம் ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 21ம் திகதி ஹெடிங்லேவ் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<