புவனேஸ்வர் குமாரை இழந்துள்ள இந்திய அணி

423

நடைபெற்றுவருகின்ற ஐ.சி.சி உலகக்கிண்ண தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அடுத்துவரும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று (16) நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் இந்திய அணி டக்வத் லூவிஸ் முறையில் 89 ஓட்டங்களினால் வெற்றிபெற்று உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஏழாவது தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்திருந்தது.

337 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் போது ஐந்தாவது ஓவர் புவனேஸ்வர் குமாரினால் வீசப்பட்டது. குறித்த ஓவரின் நான்காவது பந்தினை வீசும் போது புவனேஸ்வர் குமாருக்கு இடது காலில் திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்தும் பந்துவீச முடியாத நிலை புவனேஸ்வர் குமாருக்கு ஏற்பட்டது. குறித்த ஓவரில் நான்கு பந்துகளை வீசிய நிலையில் ஓய்வறைக்கு திரும்பினார்.

ஒட்டுமொத்த அணியின் திறமைக்கு கிடைத்த வெற்றி: கோஹ்லி

அதனை தொடர்ந்து குறித்த ஓவரின் மீதி இரண்டு பந்துகளை வீசுவதற்கு சகலதுறை வீரரான விஜய் சங்கர் அழைக்கப்பட்டார். விஜய் சங்கர் வீசிய முதல் பந்தில் அதாவது ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்துவீச்சில் LBW முறையில் இமாம் உல் ஹக்கினை ஆட்டமிழக்கச்செய்து சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது குறித்த போட்டியிலிருந்து புவனேஸ்வர் குமார் முழுமையாக விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உபாதை தொடர்பிலான பரிசோதனையின் பின்னர் புவனேஸ்வர் குமாருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 22 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான்  அணியுடனான போட்டி மற்றும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடனான போட்டியில் விளையாடுவதற்கான சாத்தியங்கள் குறைவாக காணப்படுகின்றது.

புவனேஸ்வர் குமாருக்கு பதிலீடாக அடுத்துவரும் போட்டிகளில் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் ஷமி விளையாடுவார் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கடந்த அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் கைவிரல் உபாதைக்குள்ளாகி ஓய்வில் இருக்கும் நிலையில், தற்போது புவனேஸ்வர் குமார் தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வுக்குள்ளாகியுள்ளமை இந்திய அணிக்கு பாரிய இழப்பாக காணப்படுகின்றது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<