கோப்பா அமெரிக்க தொடரில் ஆசிய சம்பியன் கட்டார் சாகசம்

727

கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்து தொடரின் வரவேற்பு அணியான ஆசிய சம்பியன் கட்டார், பரகுவே அணிக்கு எதிரான போட்டியை 2-2 என சமநிலை செய்ததோடு, ஈகுவடோர் அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த உருகுவே 4-0 என வெற்றி பெற்றது.

கட்டார் எதிர் பரகுவே

தென் அமெரிக்க பிராந்தியத்திற்கான இந்தப் போட்டியில் ஒரு வரவேற்பு அணியாக பங்கேற்றிருக்கும் கட்டார், B குழுவுக்காக நடந்த போட்டியில் பரகுவேயிடம் ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்டது.

போட்டி ஆரம்பித்து முதல் நிமிடத்திலேயே பின்கள வீரர்கள் குழப்பமடைந்து எதிரணிக்கு வாய்ப்புகளை விட்டுக்கொடுத்த நிலையில் 4 ஆவது நிமிடத்தில் பரகுவே முதல் கோலை செலுத்தியது. 

பிரூனோ வேல்டஸ் தலையால் முட்டிய பந்து போர்த்துக்கலில் பிறந்த கட்டார் வீரர் பெட்ரோ மிகுலின் கைகளில் பட்டதால் பரகுவே அணிக்கு பெனால்டி கிடைத்தது. அதனைக் கொண்டு ஒஸ்கார் கார்டோசோ பரகுவேவுக்கு முதல் கோலை புகுத்தினார்.

கட்டார் அணிக்கு போட்டியை சமன்செய்ய 16 ஆவது நிமிடத்தில் பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் இரு வீரர்கள் அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டனர்.

இந்நிலையில் 56 ஆவது நிமிடத்தில் வைத்து டார்லிஸ் கொன்சலஸ் 25 கார்ட் தூரத்தில் இருந்து கோல் புகுத்தி பரகுவேவை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.

எனினும், இரண்டாவது பாதியில் 68 ஆவது நிமிடத்தில் செயற்பட்ட அல்மொயிஸ் அலி 18 யார்ட் பெட்டியின் மூலையில் இருந்து உதைத்து அபார கோல் ஒன்றை புகுத்தினார். இந்நிலையில் பரகுவேவின் ரொட்ரிகோ ரொஜானஸ் 77 ஆவது நிமிடத்தில் பெற்ற ஓன் கோல் மூலம் கட்டார் அணி போட்டியை 2-2 என சமநிலை செய்தது. 

கோல் பெற்றவர்கள்

பரகுவே – ஒஸ்கார் கார்டோசோ 4′ (பெனால்டி), டார்லிஸ் கொன்சலஸ் 56’

கட்டார் – அல்மொயிஸ் அலி 68′, ரொட்ரிகோ ரொஜானஸ் 77′ (ஓன்கோல்)

உருகுவே எதிர் ஈகுவடோர்  

போட்டியின் ஆரம்ப நிமிடங்களிலேயே 10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஈகுவடோருக்கு எதிராக கோல்கள் புகுத்தும் முயற்சியில் லுவிஸ் சுவாரஸ் மற்றும் எடிசன் கவானி ஆரம்பம் தொட்டே ஈடுபட்டனர்.

கோப்பா அமெரிக்க கிண்ணத்தின் C குழுவுக்கான முதல் ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 6ஆவது நிமிடத்திலேயே கோல் பெறுவதை ஆரம்பித்த உருகுவே நிகொலஸ் லொடைரோ மூலம் பந்தை வலைக்குள் செலுத்தியது.

எனினும், 24 ஆவது நிமிடத்தில் வைத்து ஈகுவடோரின் ஜோஸ் குவைன்டெரோ சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது உருகுவேவுக்கு மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்தியது.  

போட்டியின் முதல்பாதி முடிவுறுவதற்குள் கவானி மற்றும் சுவாரஸ் கோல்களை புகுத்தி உருகுவே அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். இந்நிலையில் 74 ஆவது நிமிடத்தில் ஆர்டுரோ மினா புகுத்திய ஓன் கோல் உருகுவே அணிக்கு 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தேடித்தந்தது.   

கோல் பெற்றவர்கள்

உருகுவே – நிகொலஸ் லொடைரோ 6′, எடிசன் கவானி 33′, லுவிஸ் சுவாரஸ் 44′, ஆர்டுரோ மினா 74′ (ஓன்கோல்)