துடுப்பாட்டத்தின் போது சமநிலையைப் பேணுவதற்காக அதிக பயிற்சிகளை முன்னெடுத்ததாகத் தெரிவித்த அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச், அதன் பிரதிபலனாக இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சதமடிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில்…
ஆரோன் பின்ச்சின் அபார சதம், மிட்செல் ஸ்டார்க், கேன் றிச்சர்ட்ஸன் மற்றும் பெட் கம்மின்ஸின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றி கொண்டது.
இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் 153 ஓட்டங்களைக் குவித்து, தனது அதிகபட்ச ஒருநாள் ஓட்ட எண்ணிக்கையை சமப்படுத்தியிருந்தார்.
அத்துடன், தனது 14ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்த அவர், குறைந்த இன்னிங்ஸில் (110 இன்னிங்ஸ்) இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 6ஆவது வீரராகவும், உலகக் கிண்ணத்தில் சதமடித்த 3ஆவது அவுஸ்திரேலிய அணியின் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.
இலங்கை சரியான திட்டத்துடன் விளையாடவில்லை என்கிறார் திமுத்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண லீக்….
இந்த நிலையில், ஆட்டநாயகன் விருது வென்ற ஆரோன் பின்ச் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,
”துடுப்பாட்டத்தின் போது ஒருசில டிரைவ் பிரயோகங்களை மேற்கொள்வது எனது துடுப்பாட்டத்துக்கு மிக முக்கியம் என கருதுகிறேன். உண்மையில் இந்தப் போட்டியில் அதை செய்ய முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்தது. இதனால், முதல் பந்திலிருந்து எனது சமநிலையை இழக்காமல் பணிபுரிந்தேன். எல்லாவற்றை காட்டிலும், எனது மனநிலையை மாற்றியமைத்துவிட்டேன்.
அதேபோல, அவுஸ்திரேலிய கோடைக்கால பருவகாலத்திற்கு முன்னால் நிறைய போட்டிகளில் விளையாடியிருந்தேன். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் தொழில்நுட்ப, மன, உடல் ரீதியானதா என்று நான் கேள்வி எழுப்பிய நேரங்கள் இருந்தன. நான் செய்கிற எல்லாவற்றையும் உள் மனதில் வைத்து கேள்வி கேட்கிறேன்” என தெரிவித்தார்.
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்களின் பந்துவீச்சு சற்று சிறப்பாக அமைந்தபோதும் அவுஸ்திரேலிய வீரர்கள் துடுப்பாட்டத்தில் காண்பித்த சிறப்பாக இன்னிங்ஸ்கள் அவர்களை 300 ஓட்டங்களை விட உயர்த்தியது. இது குறித்து குறிப்பிட்ட பின்ச்,
”குறிப்பாக, இந்தப் போட்டியில் நாங்கள் ஆரம்பத்தில் ஒருசில விக்கெட்டுகளை இழந்தாலும், முக்கியமான சில இணைப்பாட்டங்கள் மூலம் மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டோம். இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே சரியான முறையில் இடைவெளிகளைத் தேர்வு செய்து ஸ்மித் தனது துடுப்பாட்ட பிரயோகங்களை முன்னெடுத்திருந்தார். உண்மையில் அவருடைய திறமையைப் பாராட்ட வேண்டும்.
அத்துடன், பந்துவீச்சில் இலங்கை வீரர்களுக்கு அனைத்து கௌரவமும் சென்றடைய வேண்டும். அவர்கள் சிறப்பாக பந்துவீசி எமக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். இல்லையெனில் நாங்கள் நிச்சயமாக 350 ஓட்டங்களுக்கு மேல் குவிப்போம் என்று நினைத்தேன்.
மேலும், இந்த ஆடுகளத்தில் புதிய பந்தை எதிர்கொள்வதற்கு சற்று தயக்கம் காட்டினோம். ஏனெனில், நாங்கள் வேகமாக துடுப்பாடினால் நிச்சயம் விக்கெட்டுகளை இழக்க நேரிடும். இதனால் எமது திட்டத்தை சற்று மாற்ற வேண்டியிருந்தது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நேற்றைய போட்டியில் சகதுறையிலும் பிரகாசித்த மெக்ஸ்வெல் குறித்து குறிப்பிடும்பொழுது, ”கிளென் மெக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசியிருந்தார். இந்த மைதானத்தில் பௌண்டரி எல்லை மிகப் பெரியதாக இருந்தாலும், இறுதியாக நாங்கள் விளையாடியிருற்த டவுண்டன் மைதானத்தின் பௌண்டரி எல்லை சிறியதாக இருந்தது. இதன்காரணமாக அவருக்கு நாங்கள் 10 ஓவர்கள் பந்துவீசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. எனவே, ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.
அதுமாத்திரமின்றி, நடுத்தர ஓவர்களில் மிட்செல் ஸ்டார்க் வேகமாகவும், துல்லியமாகவும் பந்துவீசி இலங்கை அணியின் முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தமை பாராட்டத்தக்கது. உண்மையில் அவர் உலகத்தரம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அவருடைய திறமையை தொடர்ந்து ஐ.சி.சியின் முக்கிய போட்டித் தொடர்களில் வெளிப்படுத்தி வருகின்றார்” என அவர் தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4இல் வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. எனினும், இன்னும் ஒருசில துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஆரோன் பின்ச் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாங்கள் ஆடுகளத்தின் நிலைமைகளை மதிப்பிட்டு, ஒவ்வொரு போட்டிக்குமான சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். நாங்கள் இதுவரை சிறந்த முறையில் விளையாடி வருகின்றோம். ஆனாலும், ஒருசில பகுதிகளில் இன்னும் மேம்படுத்த வேண்டி உள்ளன எனவும் அவர் கூறினார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க