இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 16வது போட்டி நாளைய தினம் (11) பிரிஸ்டோல் கௌண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை இலங்கை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியினை பெற்றிருந்த நிலையில், கடைசியாக இதே பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழைக்காலநிலை காரணமாக கைவிடப்பட்டது. அதேநேரம், பங்களாதேஷ் அணி தங்களுடைய 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் நாளைய தினம் இலங்கை அணியை சந்திக்கவுள்ளது.
இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை
வேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் விரல் …….
இம்முறை உலகக் கிண்ணத்தை பொருத்தவரை இலங்கை அணி ஏமாற்றத்துக்குறிய ஆரம்பத்தை பெற்றிருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இலங்கை அணியால் ஓட்டங்களை கடக்க முடியவில்லை என்பதுடன், பந்துவீச்சாளர்களால் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தடுமாறினர். எனினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி இலங்கை அணிக்கு முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.
குறித்த வெற்றியின் நம்பிக்கையுடன் இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் களமிறங்க எதிர்பார்த்த போதும், துரதிஷ்டவசமாக மழைக் குறுக்கிட்டதால், போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவுசெய்யப்பட்டது.
எனினும், பங்களாதேஷ் அணியை பொருத்தவரையில், இந்த உலகக் கிண்ணத் தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும், எதிரணிகளுக்கு சவால் விடுக்கக்கூடிய அணியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்த உலகக் கிண்ணத் தொடரில் எதிர்பார்ப்புமிக்க அணியாக களமிறங்கிய தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி, அந்த அணிக்கு அதிர்ச்சிக்கொடுத்தது.
இதனையடுத்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு கடுமையான சவாலை பங்களாதேஷ் அணி கொடுத்த போதும், களத்தடுப்பில் செய்த சில தவறுகளால் தோல்வியை தழுவ நேரிட்டது. இதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் பங்களாதேஷ் அணி 300 ஓட்டங்களை நெருங்கியிருந்தது.
இவ்வாறு பலம் வாய்ந்த அணிகளுக்கு சவால்களை விடுத்துள்ள பங்களாதேஷ் அணி நாளைய போட்டியில் இலங்கை அணிக்கு மிகச்சவாலான அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் அணியின் முன்னேற்றத்துக்கு அனுபவ வீரர்கள் அதிமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். குறிப்பாக அணித் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா, சகிப் அல் ஹசன், மொஹமதுல்லாஹ் மற்றும் முஷ்தபிகுர் ரஹீம் ஆகியோரின் பங்களிப்பு அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.
Photos : CWC19 – Sri Lanka training session ahead of Bangladesh match
எனினும், இலங்கை அணியை பொருத்தவரை பந்துவீச்சில் அனுபவ வீரர்களுடைய பங்களிப்பு பெறப்பட்டிருக்கும் போதும், துடுப்பாட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் அணிக்கு பலத்தை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திமுத் கருணாரத்ன ஆரம்ப போட்டியிலும், குசல் பெரேரா இரண்டாவது போட்டியிலும் அரைச்சதம் கடந்து நம்பிக்கை அளித்துள்ள போதும், எதிர்பார்க்கப்படும் வீரர்களான குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்னே மற்றும் திசர பெரேரா ஆகியோர் அணிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்கவேண்டும்.
இவ்வாறு முன்னணி வீரர்கள் நாளைய போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுசேர்ப்பார்களாயின், முதற்தர அணிகளுக்கு சவால் கொடுத்துவரும் பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியால் சிறந்த போட்டியொன்றை வழங்கமுடியும்.
இரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்
இரண்டு அணிகளதும் கடந்தகால முடிவுகளை பார்க்கும் போது, இலங்கை அணி மிகச்சிறந்த முன்னிலையைக் கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரையில் 45 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இலங்கை அணி 36 வெற்றிகளையும், பங்களாதேஷ் அணி 7 வெற்றிகளையும் பெற்றுள்ளது. அத்துடன் உலகக் கிண்ணத்தில் இரண்டு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளதில் மூன்றிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
இவ்வாறு இலங்கை அணி கடந்தகால பதிவுகளின் படி முன்னிலையில் இருந்தாலும், இறுதியாக நடைபெற்ற போட்டிகளில் பங்களாதேஷ் அணி, இலங்கை அணிக்கு தடுமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் போது 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்தது.
குறித்த போட்டியிலும் இலங்கை அணியின் பந்துவீச்சு அணிக்கு ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், துடுப்பாட்டம் ஏமாற்றியிருந்தது. தற்போதும் அதே சிக்கலுக்கு முகங்கொடுத்து வரும் இலங்கை அணி, இம்முறை பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பாக ஓட்டங்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எதிர்பார்ப்பு வீரர்கள்
குசல் மெண்டிஸ்
இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரராக வளர்ந்து வரும் குசல் மெண்டிஸ் உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளிலும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். எனினும், சிறந்த துடுப்பாட்ட திறமையை கொண்டுள்ள இவரின் மீது அணியின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இறுதியாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்காக அதிகூடிய ஓட்டங்களை பெற்றிருந்தார். இதற்கு அடுத்தப்படியாக நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அரைச்சதம் கடந்திருந்தார். அத்துடன், ஆசிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடியதால், இவர் நாளைய போட்டியில் மத்தியவரிசையில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முஷ்பிகுர் ரஹீம்
பங்களாதேஷ் அணியின் நம்பிக்கைமிக்க அனுப துடுப்பாட்ட வீரரான முஷ்பிகுர் ரஹீம் எதிரணிகளுக்கு தனது துடுப்பாட்டத்தின் மூலம் அழுத்தத்தை வழங்கக்கூடியவர். இவர், இம்முறை உலகக் கிண்ணத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஒரு அரைச்சதம் அடங்கலாக 141 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அதேநேரம், இறுதியாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்து, 144 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தார். எனவே, இவரது துடுப்பாட்டம் நாளைய போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு வலுவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச பதினொருவர்
இலங்கை அணியில் ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து ஒரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியின் போது உபாதைக்குள்ளான நுவான் பிரதீப்புக்கு பதிலாக ஜீவன் மெண்டிஸ் அணிக்குள் உள்வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, லசித் மாலிங்க, சுரங்க லக்மால்
பங்களாதேஷ் அணியை பொருத்தவரை இந்தப் போட்டியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. கடந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருந்ததால், அதே அணியுடன் பங்களாதேஷ் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷ்
தமிம் இக்பால், சௌமிய சர்கார், சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன், மொஹமதுல்லாஹ், மொஷ்டாக் ஹுசைன், மொஹமட் சய்புதீன், மெஹிடி ஹாசன் மிராஷ், மஷ்ரபீ மொர்டஷா (தலைவர்), முஷ்தபிசூர் ரஹ்மான்
ஆடுகளம் மற்றும் காலநிலை
பிரிஸ்டோல் மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் நடைபெற் 18 ஒருநாள் போட்டிகளில் 7 தடவைகள் 300 இற்கும் அதிகமான ஓட்டங்கள் பெறப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த மைதானத்தின் பௌண்டரி எல்லைகள் மிகக்குறிய தூரத்தில் இருப்பதால், துடுப்பாட்ட வீரர்களால் அதிக வாய்ப்புகளை எடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, காலநிலையை பொருத்தவரை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதுடன், மைதானத்தின் ஈரத்தன்மை காரணமாக குறித்த போட்டி கைவிடப்பட்டது. இந்தநிலையில், இந்தப் போட்டியிலும் மழை குறுக்கிடுவதற்கான 60-90 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<